தலையணி (headset) இல்லாமலும் ஊடாடும் 3D காட்சிகள் பார்க்க இயலும்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகம் நாசா (NASA) செவ்வாய்க் கோளில் ரோவர் (Rover) என்ற ஊர்தியை இறக்கி ஆராய்ச்சி செய்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அது எடுத்த செவ்வாய்க் கோள் சுற்றுச்சூழல் காணொளிகளை ஊடாடும் காட்சியாக வெளியிட்டுள்ளார்கள். திறன்பேசியில் நம்முடைய விரல்களைப் பயன்படுத்தி, அல்லது கணினியில் சுட்டியைப் பயன்படுத்தி இக்காட்சியை முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் திருப்பிப் பார்க்கலாம். ஆனால் மூழ்கவைக்கும் அனுபவம் கிடைக்காது. ஏனெனில் சிறிய திரைதானே. ஆகவே நம் பார்வைப்புலத்தில் ஒரு சிறிய பகுதிக்குத்தான் தெரியும். இது நம்முடைய இணைய உலாவியிலுள்ள WebGL என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இணைய உலாவியில் WebGL தொழில்நுட்பம்
இந்த WebGL தொழில்நுட்பத்தை VR க்கு முன்னோடி தொழில்நுட்பம் என்று சொல்லலாம். ஏனெனில் மூழ்க வைக்கும் அனுபவம் கிடைக்காது மற்றும் முப்பரிமாணக் காட்சி (stereoscopic 3D view) பார்க்க இயலாது. ஆனால் தலையணி (headset) இல்லாமலும் வேறு எதுவும் செயலி நிறுவாமலும் நம்மிடமுள்ள இணைய உலாவியிலேயே அசைவூட்டம் பார்க்க முடியும். முப்பரிமாணப் பொருட்களைப் பல்வேறு கோணங்களில் திருப்பிப் பார்க்க இயலும்.
WebGL காட்சி உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நிரலகம் three.js
Three.js என்பது முப்பரிமாண அசைவூட்டம் (animated 3D) உருவாக்கப் பயன்படும் கட்டற்ற திறந்த மூல நிரலகம். இது WebGL தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் பல இணைய உலாவிகளில் வேலை செய்யும். Three.js பயன்படுத்தி உருவாக்கிய ஒரு ஊடாடும் அசைவூட்டம் எடுத்துக்காட்டை இங்கே காணலாம். சிக்கலற்ற அசைவூட்டங்களை இணைய உலாவிகளுக்கு உருவாக்குவதை இது எளிதாக்குகிறது.
VR காட்சி உருவாக்க WebVR/WebXR தொழில்நுட்பங்கள்
WebVR என்பது VR செயலிகளுக்கு நிரல் எழுதும் வழிமுறை. நீங்கள் இணைய உலாவியில் பார்த்தால் வழக்கமான ஒற்றைக் காட்சியைக் காட்டும். தலையணி என்றால் கண்களுக்கு நேரடியாக இரு முப்பரிமாணக் காட்சிகளை (3D Stereoscopic) வழங்கும். WebXR என்பது இதனுடைய மேம்படுத்தப்பட்ட புதிய வெளியீடு.
WebXR காட்சி உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் சட்டகம் A-Frame
A-Frame என்பது VR காட்சிகளை உருவாக்க கட்டற்ற திறந்த மூல சட்டகம். இணைய பக்கங்களை உருவாக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படும் HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் நீங்கள் விளையாட்டுகள், ஊடாடும் செய்முறைகள் மற்றும் மூழ்கவைக்கும் அனுபவங்களை உருவாக்கலாம்.
மற்றவர்கள் உருவாக்கி பகிர்ந்து கொண்ட VR காட்சிகளை ஸ்கெட்ச்ஃபேப் (Sketchfab) தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பலவற்றுக்கு வணிக ரீதியாக கட்டணம் தேவை. எனினும் சிலர் படைப்பாக்கப் பொதும (Creative Commons) உரிமங்களில் பகிர்ந்துள்ளனர். இவற்றுக்குக் கட்டணம் தேவையில்லை.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: VR கோப்பு வடிவங்கள் (file formats)
முப்பரிமாணப் பொருட்களுக்கு OBJ கோப்பு வடிவம். உரிமக் கட்டணம் இல்லாத VR திறந்த மூலக் கோப்பு வடிவங்கள். VR உருவாக்கக் கோப்பு வடிவம் glTF/glTF 2.0. VR ஓட்டுவதற்குக் கோப்பு வடிவம் GLB.