உங்களுக்கு வரைபடங்களில் அடிப்படைப் பயிற்சி தேவை என்றால் என்னுடைய முந்தைய கட்டுரைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்:
பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 1
பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 2
பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 3
சித்திரமும் கைப்பழக்கம்
சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. நாம் வரைவது சித்திரமல்ல, வரைபடம்தான். இருப்பினும் நாம் பல்வேறு படங்களை வரைந்து பார்க்கப் பார்க்கத்தான் நம் மென்பொருளிலுள்ள கருவிகள் மற்றும் நாம் பயன்படுத்தும் உத்திகளின் நெளிவு சுளிவுகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
2D வரைபடங்களுக்கு லிபர்கேட் பயன்படுத்துங்கள். 3D மாதிரிகளுக்கு சால்வ்ஸ்பேஸ் மற்றும் ஃப்ரீகேட் இரண்டையுமே முயற்சி செய்து பார்க்கலாம். இவை மூன்றுமே கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள். இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் எந்திர பாகங்களை வரைவது உசிதம்
நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் மிதிவண்டி போன்ற சாதனங்கள் வேலை செய்யாவிட்டால் கழற்றிப் பழுதுபார்ப்பீர்களா? அப்படியென்றால் அவற்றில் ஒரு பாகத்தையெடுத்து வரைந்து பார்க்கலாம். ஒரு பழுதான பாகத்தை வரைந்து அருகிலுள்ள எந்திரப் பணிமனையில் கொடுத்து பாகம் செய்து வாங்குங்கள். இதற்கு ஈடான பயிற்சி வேறு கிடையாது.
2D CAD தொடக்க நிலைப் பயிற்சிகள்
20 நாட்களுக்கான 2D CAD பயிற்சிகள். இந்த 2D CAD பயிற்சிகள் ஆரம்ப பயிற்சியாளர்கள் கற்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஆட்டோகேட் (AutoCAD) கட்டளைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், லிபர்கேட்டில் அதற்கு ஈடான கட்டளைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதன்படி முயற்சிக்கவும். சுட்டியைப் பயன்படுத்தாமல் முனையத்தில் (terminal) X மற்றும் Y அச்சுத்தூரங்கள் கொடுத்து வரையும்படி சில பயிற்சிகளும் கொடுத்துள்ளார்கள்.
20 நாட்களுக்கான 2D ஆட்டோகேட் பயிற்சிகள் – பாகம் 1. 20 நாட்களுக்கான 2D ஆட்டோகேட் பயிற்சிகள் – பாகம் 2. இவற்றில் பயிற்சிகளை முடிவில் இருந்து தொடங்குவார்கள். அதாவது குறிப்பிட்ட குறிக்கோள்களை முதலில் அமைப்பார்கள். அடுத்து அந்த இலக்குகளை அடைய ஆட்டோகேட் கட்டளைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதுபற்றி பயிற்சி அளிப்பார்கள். மேலே கூறியதுபோல லிபர்கேட்டில் அதற்கு ஈடான கட்டளைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதன்படி முயற்சிக்கவும்.
3D CAD தொடக்க நிலைப் பயிற்சிகள்
50 2D CAD பயிற்சிகள் மற்றும் 50 3D CAD பயிற்சிகள். இதில் கடைசி 50 3D CAD பயிற்சிகள். நாம் முந்தைய கட்டுரையில் கூறியது போல ஃப்ரீகேட் மென்பொருளில் தோராயப் படவரைவி பணிமேடையைத் (Sketcher workbench) தேர்வு செய்து 2D தோராயப் படத்தை வரைந்து கட்டுப்பாடுகளை அமைக்கவும். பின்னர் பாகம் வடிவமைப்புப் பணிமேடையைத் (PartDesign workbench) தேர்வு செய்து இந்த 2D உருவரைவை சுழற்றியோ அல்லது பிதுக்கியோ 3D மாதிரியை உருவாக்கவும்.
3D CAD தொடக்க நிலைப் பயிற்சிகள். பயிற்சி பெறுபவர்கள் தாங்கள் உருவாக்கிய மாதிரிகளை இங்கு பகிர்ந்துள்ளார்கள். இவற்றை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பாகங்களைத் தொகுத்துப் பார்த்தல்
இணைக்கும் பொழுது வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல். இணைப்புக்கான கட்டுப்பாடுகள் அமைத்தல். சால்வ்ஸ்பேஸ் தொகுத்தல் பயிற்சி. தொகுத்துப் பார்க்க ஃப்ரீகேட் A2+ பணிமேடை. பெரிய தொகுப்புகளைத் துணைத் தொகுப்புகளாகப் பிரித்தல். ஃப்ரீகேட் கையாளுதல் (Manipulator) பணிமேடை.