ஃப்ரீகேட் அசைவூட்டம் (Animation) பணிமேடை
பாகங்களின் இயக்கத்தை உருவகப்படுத்தவும், படங்களின் காட்சித்தொடர்களை உருவாக்கவும், இவற்றைக்கொண்டு அசைவூட்டத்தை உருவாக்கவும் இப்பணிமேடை பல கருவிகளைக் கொண்டுள்ளது. பாகங்களின் நிலை மற்றும் திசையமைவை தேவைப்பட்டபோது மாற்றலாம். மேலும் கண்ணுக்குப் புலப்படுதல் (visibility), ஒளிபுகுதன்மை (transparency), வடிவத்தின் நிறம் (shape color) மற்றும் நிழற்படக் கருவி நிலை (camera position) போன்ற பிற பண்புகளையும் மாற்றலாம்.
தொகுப்பை விரித்துக் காட்டும் தோற்றம் (Exploded view)
ஒரு இயந்திரத்தை எவ்வாறு தொகுப்பது எந்தெந்த பாகம் எந்தெந்த இடத்தில் பொருந்தும் என்று காட்ட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். பெரும்பாலும் நிறுவனத்தின் சேவை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இம்மாதிரி தோற்றங்கள் மிகப் பயனுள்ளவை. சில நேரங்களில் பயனர்களுக்கும் இம்மாதிரி பயிற்சி கொடுக்க வேண்டி நேரிடலாம். இதற்கு தொகுப்பை விரித்துக் காட்டும் (ExplodedAssembly) பணிமேடை மிகவும் பயனுள்ளது.
இதில் எந்தெந்த பாகம் எங்கெங்கு பொருந்தும் என்று காட்டுவது மட்டுமல்லாமல் தொகுப்பை அசைவூட்டமும் செய்து காட்டலாம்.
ஃப்ரீகேட் A2+ பணிமேடையில் நிரல் எழுதி அசைவூட்டம் செய்தல்
ஃப்ரீகேட் A2+ பணிமேடையில் எவ்வாறு பாகங்களைத் தொகுத்துப் பார்க்கமுடியும் என்று நாம் முந்தைய கட்டுரையில் விவரமாகப் பார்த்தோம். இதே பணிமேடையில் பைதான் நிரல் எழுதி அசைவூட்டமும் செய்து பார்க்க முடியும். இம்மாதிரி ஒரு அசைவூட்டம் இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
நகர்வு கட்ட வரைபடம் (Motion chart or curves) அல்லது எந்திர அமைப்பு இயக்க வடிவியல் (Mechanism kinematics)
அசைவூட்டம் என்பது நாம் 3D மாதிரியைக் கணினித் திரையில் தேவையான கோணங்களிலும் திசையமைவுகளிலும் நகர்த்திப் பார்ப்பதுதான். இம்மாதிரி பார்ப்பது மட்டுமே பல பொறியியல் வேலைகளுக்குப் பேருதவியாக இருக்கும். ஆனால் சில துல்லிய வேலைகளுக்கு இம்மாதிரி நகர்வுகளைக் கட்ட வரைபடமாக வரைய வேண்டியிருக்கலாம். ஃப்ரீகேட் பைதான் நிரல் எழுதி இம்மாதிரி நகர்வு கட்ட வரைபடத்தை எவ்வாறு வரைவது என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம். இதன்மூலம் முதலில் இயக்க வடிவியல் தரவுகளை சேமித்து கொள்ள வேண்டும்.
மேட்ப்ளாட்லிப் (Matplotlib) பைதான் மொழியில் கட்ட வரைபடம் வரையும் நிரலகம் (library). மேற்கண்டவாறு சேமித்த தரவுகளை மேட்ப்ளாட்லிப் வைத்து கட்ட வரைபடம் வரையலாம்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: 2D வரைபடமா அல்லது 3D மாதிரியா?
இருபரிமாண வரைபடம். 3D மாதிரியின் வசதிகள். 3D மாதிரியின் குறைபாடுகள்.