பங்களிப்பதற்காக அழைப்பு இணைய மொழி ஆதிக்கச் சூழலை மாற்றியதில் உங்கள்அனுபவம்!

மூலம் – cis-india.org/raw/dtil-2019-call

“மொழி அழிவால் சொற்கள் மட்டும் அழிவதில்லை. நம் பண்பாட்டின் சாரமே மொழி தான். மொழியே நம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இவ்வுலகத்தை நாம் காண்பதும் மொழிவழியே தான். ஆங்கிலத்தால் அதை ஒருக்காலும் வெளிப்படுத்த முடியாது.”

– போட்டோவாடோமி எல்டர் (ராபின் வால் கிம்மெரார் எழுதிய ‘பிரெயிடிங் சுவீட்கிராஸ்’ என்ற நூலில் இருந்து)

சிக்கல்: மனித குலத்தின் பரந்துவிரிந்த பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்றைய இணையம் பன்மொழிச் சூழல் கொண்டதாய் இல்லை. தகவல்களை அறிந்துகொள்வதற்கு மொழி ஒரு கருவியாய் இருக்கிறது. ஒவ்வொரு மொழியும் உலகத்தை வெவ்வேறுவிதத்தில் காட்டத்தக்கன. இருந்தபோதும், பெரும்பாலான அறிவுசார் தளங்கள் ஆதிக்க மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் அதிகளவில் இருக்கின்றன. ‘இணையவெளியில் பன்மொழிச் சூழலைக் ஊக்குவிக்க பத்தாண்டுகளில் எடுத்த முயற்சி’ (2015) என்ற யுனெசுகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “உலகில் பேசப்படும் சுமார் 6,000 மொழிகளில், வெறும் 10 மொழியை பேசுவோர் மட்டுமே இணையத்தின் 84.3 சதவீதம் பேராக உள்ளனர். இவற்றில், ஆங்கிலமும் மாண்டரின் சீனமும் பேசுவோர் மட்டும் 52 சதவீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.” ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான மொழிகள் அருகி, அழிந்து வருகின்றன. 1950 – 2010 ஆகிய ஆண்டுகளுக்குள் 230 மொழிகள் அழிந்திருக்கின்றன

எல்லா உள்ளடக்கத்தையும் கணக்கில் எடுத்தால் கூட, உலகின் 7% மொழிகளில் தான் ஆக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் சிலவே இணையத்தில் கிடைக்கின்றன. முற்காலத்தில் ஒடுக்கப்பட்டிருந்த பழங்குடியின சமூகத்தினர், அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த பெண்கள், நிறவெறிக்கு உட்பட்டிருந்தோர், மாற்று பாலின கருத்தியல் கொன்டோர் ஆகியோருக்கான ஆக்கங்கள் வெகு சில. பெரும்பாலானோர் இணையத்தில் தம் தாய்மொழியில் தகவல்களை தேடிப் பெற முடிவதில்லை. தம் மொழியில் கிடைக்கப்பெறாத பெரும்பாலானோருக்கு இவ்வுலகைப் பற்றிய அறிவுசார் ஆக்கங்கள் மறுக்கப்பட்டு, சமமின்மை வெளிப்படுகிறது.

நம் மொழியிலேயே இணையத்தில் ஆக்கங்களை உருவாக்குவதிலும் பகிர்வதிலும் சில சிக்கல்களை எதிர்நோக்குகிறோம். அவை:

 • கட்டமைப்பு வசதிக் குறைபாடு : வன்பொருள், மென்பொருள், இயங்குதளம், மரபுத்தகவு
 • உள்ளடக்க மேம்பாட்டுக் கருவிகளும் தொழில்நுட்பங்களும் போதிய அளவில் இல்லாமை: மொழிபெயர்ப்புக் கருவி, மின்மயமாக்கக் கருவி, சேமிப்பகம், செயற்கை நுண்ணறிவு, குரல்வழி உள்ளடக்கம்
 • இணையத்தில் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோரின் கருத்துக்களோ, பொருட்களைப் பற்றிய தகவலோ, இணையச் செயலிகளான செய்தியனுப்பல், வலைப்பூ போன்றவையோ தம் மொழியில் இல்லாமை
 • தேடுபொறிகளையும் பிற கருவிகளையும் கொன்டு வெவ்வேறு மொழிகளில் ஆக்கங்களைத் தேடிப் பழக்கம் இல்லாமை

இச்சிக்கல்களைப் புரிந்துகொள்வதன் மூலம், இணையத்தின் பன்மொழிச் சூழலுக்கான தேவைகளையும் அவற்றிற்கான குறைநிறைகளையும் சரிப்படுத்திக்கொள்ள முடியும்.

நாங்கள் யார்?: உலக மொழிகளிலான ஆக்கங்கள் இணையவெளியில் இடம்பெற உதவவும், ஊக்குவிக்கவும் மூன்று ஆய்வு நிறுவனங்கள் கைகோர்த்துள்ளோம். இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன், நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் பெறக்கூடிய வாய்ப்புகளையும் நன்கு அறிந்துகொள்வது அவசியம் என உணர்ந்தோம்.

1. சென்டர் ஃபார் இன்டர்நெட் அன்ட் சொசைட்டி (the Centre for Internet and Society or CIS) என்ற தன்னார்வல நிறுவனம், இணையத்தையும், மின்மயமாக்கத் தொழில்நுட்பங்களையும் பற்றிய ஆய்வுகளை கொள்கை நோக்கிலும், கல்விசார் நோக்கிலும் செய்கிறது. உடற்குறைபாடு உடையோருக்கு மின்மயமாக்கிய உள்ளடக்கம், அறிவைப் பெறும் சூழல், அறிவுசார் சொத்துரிமை, திறந்தவெளி ஆக்கங்கள், இணையவழி ஆளுகை, தொழில்நுட்பச் சீர்திருத்தம், இணையவெளியில் தனியுரிமை, இணையவெளிப் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

2. ஆக்சுபோர்டு இன்டர்நெட் இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தது. இது இணையச் சமூகத்துக்காகவே தனித்துவமாக உருவாக்கப்பட்ட துறை.

3. ஹூஸ் நாலெட்ஜ் என்ற இயக்கம், உலகளவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அறிவுசார் ஆக்கங்களை இணையவெளியில் கொண்டு வர முயற்சி எடுக்கிறது.

நாங்கள் மூவரும் இணைந்து, இணையத்தில் பயன்பாட்டிலுள்ள மொழிகளைப் பற்றிய ஆய்வறிக்கையை தயாரிக்கிறோம். புள்ளிவிவரங்களையும், தகவல்களையும் வெளியிட்டு, பன்மொழிச் சூழலில் எந்தளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை உணர்த்த உள்ளோம். இணையவெளியில் ஆக்கங்களை வெளியிட எங்களால் முடிந்த சில வாய்ப்புகளையும் வழங்க உள்ளோம்.

உங்கள் உதவி எங்களுக்கு தேவைப்படுவதன் காரணம்: இத்தகைய சிக்கல்களை எதிர்நோக்கி வருவோரின் அனுபவங்களையும், அவர்கள் முயன்ற தீர்வுகளையும் பற்றி அறிந்துகொள்வதே இவ்வாய்வின் நோக்கம்.

நீங்கள்,

 • ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக உணர்ந்தாலோ, உங்கள் சமூகத்தின் அறிவுசார் உள்ளடக்கங்கள் இணையவெளியில் கிடைப்பதில்லை என்று கருதினாலோ, உங்கள் மொழி எழுத்துவடிவங்கள் அணுகவும், படிக்கவும் ஏற்றவகையில் கணினிமயமாக்கப்படவில்லை என்று உணர்ந்தாலோ,
 • தொழில்நுட்பராக இருந்து, ஆதிக்கத்துக்கு உட்பட்டோரின் மொழிகளுக்காக விசைப்பலகைகள் செய்பவராக இருந்தாலோ,
 • மொழியியலாளராக இருந்து, பல்வேறு சமூகங்களை ஒருங்கிணைத்து, தொழில்நுட்பத்தை அவர்களுக்கு புரியும் வகையிலும், அணுகும் வகையிலும் கிடைக்கச் செய்தாலோ,
 • … உங்களைத் தான் தேடிக் கொன்டிருக்கிறோம்!

உங்கள் இணையவெளி அனுபவங்களை எங்களுக்கு தெரிவிப்பதன் மூலம், ஒவ்வொரு மொழிச் சமூகத்தின் நிலையையும் நாங்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். அத்துடன், எத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம் என்றும் நாங்கள் சிந்திக்க உதவியாய் இருக்கும்.

 

உங்களிடம் நாங்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்:

 • நீங்களும், உங்கள் மொழிச் சமூகத்தினரும் இணையவெளியில் உங்கள் மொழியை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
 • இன்றைய நிலையில், இணையவெளியில் உங்கள் மொழியைக் கொண்டு செய்ய முடியாதது இருப்பின், அதற்கு என்ன செய்ய விரும்புவீர்கள்?
 • இணையவெளியில் உங்கள் மொழியில் என்னென்ன ஆக்கங்கள் இருக்கின்றன, எவை இல்லை? (எடுத்துக்காட்டாக, செய்திகள், சமுக வலைத்தளம், கல்விசார் உள்ளடக்கம், அரசுசார் உள்ளடக்கம், மனமகிழ் வீடியோக்கள், இணையவழி கற்றல், போன்றவை)
 • உங்கள் மொழியில் ஆக்கங்களை படைப்பதற்கு எந்த தளத்தை நாடுவீர்கள், எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள்? (எ.கா : ஒளி, ஒலி, உரை, உரைநடை ஒழுங்கமைவு, பிழைத்திருத்திக் கருவி போன்றவை)
 • உங்கள் மொழியில் எழுதுவதற்கோ, பகிர்வதற்கோ முயலும் போது என்னென்ன மாதிரியான சிக்கல்களை இணையவெளியில் சந்திக்கிறீர்கள்? (எ.கா: அணுக்கம் இன்மை, கருவியில் எழுத்துரு ஆதரவின்மை, பிழை திருத்த கருவி இன்மை)

 

ஆய்வேடு சமர்ப்பித்தல்:

மேற்கண்ட கேள்விகளுக்கு உங்கள் சமூகத்தினரிடமும், உங்களிடமும் அனுபவம் மூலம் விடை கிடைத்திருக்கும் என நம்புகிறோம். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம்!

கட்டுரையாகவோ, கலைப்படைப்பாகவோ, பதிவு செய்யப்பட்ட ஆவணமாகவோ, வேறு வடிவிலோ உங்கள் படைப்புகள் இருக்கலாம். நீங்கள் விரும்பினால் உங்களை பேட்டி காணவும் தயாராக இருக்கிறோம். உங்கள் படைப்புகள் எந்த மொழியில் இருந்தாலும் ஏற்போம். எங்களிடமுள்ள பன்மொழிச் சமூகத்திடம் உங்கள் படைப்புகளை கொடுத்து அவற்றை சீராய்வு செய்யச் சொல்வோம்.

உங்களுக்கு பங்கேற்க விருப்பமா? raw@cis-india.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, செப்டம்பர் இரன்டாம் தேதிக்கு முன்னர் அனுப்புக. 300 சொற்களுக்கு மிகாமல், கீழ்க்காணும் விவரங்களைக்

 • உங்கள் பெயர்
 • இருப்பிடம் – பிறந்த நாடும், தற்போது வாழும் நாடும்
 • உங்கள் மொழி(கள்)
 • உங்கள் சமூகத்தினரைப் பற்றிய தகவல் (அ) நீங்கள் விரும்பும் சமூகத்தினரைப் பற்றிய தகவல்
 • எந்தெந்த கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறீர்கள், ஏன்
 • உங்கள் படைப்பு எந்த வடிவில் உள்ளது
 • உங்கள் பங்களிப்பை மேம்படுத்தல் நாங்கள் ஏதும் செய்ய வேண்டுமா

 

காலகட்டம்:

 • 2 செப்டம்பர், 2019: உங்கள் படைப்புகள் எங்களை வந்தடைய வேண்டிய கடைசி நாள்
 • 1 நவம்பர், 2019: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களிடம் விவரம் தெரிவிக்கப்படும் நாள்
 • 1 திசம்பர், 2019: முதற்கட்ட பங்களிப்பு நடைபெறும். பங்களிப்பை ஜனவரி மாத மத்தியில் முடிக்க முயற்சி செய்வோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு 500 அமெரிக்க டாலர்கள் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். நாங்கள் தயாரிக்கும் அறிக்கையில் அவர்களின் படைப்பு வெளியிடப்படும்.

 

%d bloggers like this: