தலைப்புக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் – உங்களிடம் ஒரு கேள்வி! “உங்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லையா?” என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? “அட! ஆமா! எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று யோசித்தீர்கள் என்றால் – உங்களுக்குத் தான் இந்தப் பதிவு.
மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டதை எப்படிக் கண்டுபிடிப்பது?
மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிப்பது ரொம்ப ரொம்ப எளிது.
1. monitor.firefox.com/ தளத்திற்குப் போங்கள்.
(உலக அளவில், இணையத் திருட்டு எனப்படும் ஹேக்கிங் மூலம் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்படுவதைக் கண்காணிக்கும்ம்மொசில்லாவின் இணையத்தளம் இது!)
2. உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள்.
3. உங்கள் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டிருந்தால், எந்த இணையத்தளம், எப்போது ஹேக் செய்யப்பட்டது போன்ற விவரங்களை உடனடியாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
4. ஹேக் செய்யப்பட்டிருந்தால், கூடிய வரை, உடனடியாக, உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவது நல்லது.
இப்போது தலைப்புக்கு வருவோம். ஆமாம், உண்மை தான்! தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மின்னஞ்சல் முகவரி cmcell@tn.gov.in. பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார்கள் தெரிவிக்க அரசின் சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் இம்மின்னஞ்சல் முகவரி, ஹேக் செய்யப்பட்டு, அதன் IP முகவரிகள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் ஆகியன திருடப்பட்டிருக்கின்றன.
ஹேக்கிங்கை எப்படி உறுதிப்படுத்துவது?
monitor.firefox.com/. இத்தளத்திற்குப் போய் மேலே சொன்னது போல, cmcell@tn.gov.in என்று கொடுத்தாலே போதும். இந்த ஆண்டு மே 15ஆம் தேதி, இந்த ஹேக்கிங் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மொசில்லா மானிட்டர் இணையத்தளம் தெரிவிக்கிறது.
முதல் முறை இல்லை:
இப்படி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டிருப்பது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பு, ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு ஒருமுறையும், 2019ஆம் ஆண்டில் இன்னொரு முறையும் இதே மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.