சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)
சோவியத் ரஷ்யா முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை (Sputnik) விண்வெளியில் செலுத்தியது
0:00 எட்டு திறமையான நபர்கள் ராபர்ட் ஷாக்லியின் (Robert Shockley) நிறுவனத்தை விட்டு வெளியேறி 1957 இல் ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர் நிறுவனத்தை (Fairchild Semiconductors) இணைந்து நிறுவினர் என்று முன்னர் பார்த்தோம். இவர்கள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் தங்கள் சொந்த வடிவமைப்பைக் கொண்டு வந்தார்கள். இந்த ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்பை உற்பத்தி செய்வதற்கு 50 மடங்கு அதிக செலவு ஆயிற்று என்றும் நாம் முன்னர் பார்த்தோம். இந்த வடிவமைப்பை அதிக விலைக்கு விற்பனை செய்ய என்ன வழி என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
1:20 ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர் நிறுவப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு, சோவியத் ரஷ்யா முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை (Sputnik) விண்வெளியில் செலுத்தியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு முதல் மனிதரான யூரி ககாரினையும் (Yuri Gagarin) அனுப்பியது. தொழில்நுட்பத்தில் அமெரிக்கா சோவியத் ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கியிருப்பதையும் மேலும் சிறப்பாகச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது என்பதையும் இது நினைவூட்டுவதாக இருந்தது.
அறுபதுகள் முடிவதற்குள் ஒரு மனிதனை நிலவில் இறக்கி, பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டுவரும் இலக்கு
3:12 1961 ஆம் ஆண்டில், அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடி (John F Kennedy), அந்தப் பத்தாண்டின் இறுதிக்குள் ஒரு மனிதனை நிலவில் இறக்கி, பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டுவரும் இலக்கை அறிவித்தார்.
3:40 நல்வாய்ப்பாக, இந்த விண்வெளித் திட்டத்தில், ஒருங்கிணைந்த மின்சுற்றுகளுக்கான அதிக விலையை அவர்கள் கொடுக்கத் தயாராக இருந்தனர்.
அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணைக்கான வழிகாட்டிக் கணினி
4:10 ஜாக் கில்பியின் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (TI) நிறுவனம் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்பை உருவாக்கியிருந்தது. அது கம்பிகளைப் பயன்படுத்தியது. ஆகவே குறைந்த செலவில் இருந்தது. டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் அமெரிக்கக் கடற்படை ஏவுகணைக்கான வழிகாட்டிக் கணினியை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றனர். பாப் நொய்ஸ் மற்றும் குழுவின் ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர் நிறுவனம், கம்பிகளைப் பயன்படுத்தாமல் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளின் சிறந்த வடிவமைப்பைக் கொண்டிருந்தது, ஆனால் அது மிகவும் விலை உயர்ந்தது. விண்வெளித் திட்டத்திற்கு குறைந்த எடை தேவைப்பட்டது மேலும் அதிக செலவு ஒரு பெரிய பிரச்சனை இல்லை.
6:00 அமெரிக்க கடற்படையின் ஏவுகணைக்கு மினிட்மேன் என்று பெயரிடப்பட்டது. அதாவது இதை ஒரு நிமிடத்துக்குள் ஏவ முடியும். இது மினிட்மேன் 2. இதன் முந்தைய பதிப்பான மினிட்மேன் 1 மிகவும் பருமனான கணினியைக் கொண்டிருந்தது.
போட்டோலித்தோகிராபி (photolithography) செயல்முறை கண்டுபிடிப்பு
7:40 1958 ஆம் ஆண்டில் ஜே லாத்ரோப் (Jay Lathrop) மற்றும் ஜேம்ஸ் நால் (James Nall) ஆகியோர் ஒரு நுண்ணோக்கியைத் தலைகீழாக மாற்றி ஒரு பெரிய வடிவத்தை மிகச்சிறியதாக மாற்றி அச்சிடும் யோசனையைக் கொண்டு வந்தனர். கோடாக் (Kodak) நிறுவனம் ஒரு ஒளிஉணர் பூச்சுப் (photoresist) பொருளை உருவாக்கியிருந்தனர். அதைப் பயன்படுத்தி இந்த குறும்படிவாக்கப்பட்ட (miniaturized) வடிவங்களை ஒளி மறைப்பியின் (photo mask) உதவியுடன் அச்சிடலாம். இந்த செயல்முறையை போட்டோலித்தோகிராபி (photolithography) என்று அழைத்தனர். திறமையான வரைவாளர்கள் (draftsmen) அந்தக் காலத்தில் இம்மாதிரி வடிவங்களை வரைவதைக் கையால் செய்து வந்தனர்.
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஒருங்கிணைந்த மின்சுற்று தயாரிப்பின் விளைவை அதிகரித்தல்
.ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பதுடன் அதை நம்பகத்தன்மையுடன் உற்பத்தி செய்வதும் மிக முக்கியம். குறைக்கடத்தி மூலப்பொருளிலும் ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்பிலும் இருவேறு வழிகள்.
தமிழாக்கம்: இரா. அசோகன்