எளிய தமிழில் Computer Vision 1. ஐம்புலன்களில் கண்களே முதன்மை!

ஐம்புலன்களில் கண்களை நாம் உயர்வாகக் கருதக்காரணம் நம் வேலைகளைச் செய்யவும், பல இடங்களுக்குச் சென்று வரவும், எழுதப் படிக்கவும் பார்வை இன்றியமையாததாக உள்ளது. மற்ற எல்லாப் புலன்களையும் விட கண்ணால் பார்க்கும் தகவல்களை செயலாக்கவும் சேமிக்கவும் நம் மூளை அதிக இடத்தை ஒதுக்குகிறது. ஆனால் அது ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கும்வரை நாம் நம் கண்களின் அருமையைப் பற்றிப் பெரும்பாலும் யோசிப்பதில்லை. ஒரு படக்கருவி மூலம் எடுத்த படத்தைக் கணினி மூலம் ஆராய்ந்து அதிலுள்ள அம்சங்களைப் பிரித்தெடுத்து அதன்படி செயல்பட முயலும்போது நம் கண்களின் அருமை நமக்கு ஓரளவு புலப்படத் துவங்குகிறது. 

படக்கருவியும் ஒரு IoT உணரிதான்!

நாம் IoT கட்டுரைத் தொடரில் பார்த்த உணரிகளில் படக்கருவியும் ஒரு உணரிதான். எனினும் கணினிப் பார்வை (Computer Vision) மற்ற உணரிகளைவிடப் பல்துறைத் திறமைவாய்ந்தது, அதே நேரத்தில்  பல மடங்கு கடினமானது. மனிதப் பார்வை அளவுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், கணினிப் பார்வை இன்று வணிகத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால்தான் நாம் கணினிப் பார்வையை இந்தத் தனிக்கட்டுரைத்தொடரில் அலசப் போகிறோம். இதையே எந்திரப் பார்வை (Machine Vision) என்றும் சொல்கிறார்கள். அடுத்து இதன் முக்கியப் பயன்பாடுகள் என்ன என்று பார்ப்போம்.

தானுந்து (Automotive)

மேலை நாடுகளில் ஓட்டுநரற்ற வண்டிகள் (driverless vehicle) புழக்கத்திற்கு வந்து விட்டன. இவை கணினிப் பார்வை மூலம் சாலையில் உள்ள வழிகாட்டிப் பலகைகளையும் சமிஞ்சைகளையும் படித்துப் புரிந்து கொள்கின்றன. மேலும் எதிரில் செல்லும் வண்டிகளையும், குறுக்கில் நடப்பவர்களையும் மற்ற  இடையூறுகளையும் தவிர்த்து வண்டியைச் செலுத்துகின்றன.

படத்தில் பொருள் கண்டறிதல்

படத்தில் பொருள் கண்டறிதல்

வங்கிகள்

இப்பொழுது பல வங்கிகளில் நமக்கு வரும் காசோலைகளை திறன்பேசியில் படமெடுத்து அனுப்பி நம்முடைய கணக்கில் செலுத்த முடிகிறதல்லவா? இது கணினிப் பார்வை மூலம்தான் சாத்தியமாகிறது.

சில்லறை விற்பனை (Retail)

சில்லறை விற்பனைக் கடைகளில் திருட்டு போவதைத் தடுக்க கணினிப் பார்வை தொழில்நுட்பம் பயன்படுத்துகிறார்கள்.

வேளாண்மை (Agriculture)

சில பெரிய பண்ணைகள் ஆளில்லா வானூர்தி மூலம் பயிர்களைப் படம் எடுத்து கணினிப் பார்வை மூலம் பூச்சி தொற்று, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நீரிழப்பால் வறட்சி ஆகிய இடங்களை அடையாளம் காண்கிறார்கள். இதன் மூலம் அவற்றை சரிசெய்ய உடன் நடவடிக்கை எடுக்க இயலும்.

பாதுகாப்புத்துறை (Defense)

கட்டட உட்புறங்கள், நகர்ப்புறங்கள், குகைகள், சுரங்கங்கள் போன்ற உயர் அச்சுறுத்தல் சூழல்களில் (high threat environments) கண்காணிப்புக்கு (Surveillance) கணினிப் பார்வை தொழில்நுட்பம் இன்றியமையாததாக ஆகி விட்டது. மேலும் கண்ணிவெடி அகற்றுதல் போன்ற இடையூறு மிகுந்த வேலைகளைத் தன்னியக்கமாக்க இவை மிகவும் பயன்படுகின்றன. 

கைரேகையும் மற்ற உயிரளவியலும் (Fingerprint and biometrics)

கைரேகை, விழித்திரை, முகத்தை அடையாளம் காணுதல் போன்ற உயிரளவியல் தொழில்நுட்பங்கள் கணினிப் பார்வையையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

நன்றி

  1. Object detector in PyTorch by Ayoosh Kathuria

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தொழில்துறையில் முக்கியப் பயன்பாடுகள்

வரிசைமுறை உற்பத்தியில் ஆய்வு செய்தல். எந்திரனியல் (Robotics). சுவடுதொடரல் மற்றும் தடயம் ஆய்வு (tracking and tracing).

ashokramach@gmail.com

%d bloggers like this: