சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)
சில்லுகளைத் தொகுப்பதோடு நிற்காமல் உயர் தொழில்நுட்பத்தில் ஈடுபடத் தைவான் இலட்சியம்
0:00 புனைவு ஆலை இல்லாத (fabless) முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நிகழ்காலத்திற்கு ஒரு சிறிய பயணம் மேற்கொண்டோம். வடிவமைப்பு நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளில் பெரும் முதலீடு செய்வதற்குப் பதிலாகத் தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தப் புனைவு ஆலை இல்லாத முறை உதவுகிறது என்பதைப் பார்த்தோம். இப்போது 1980களில் தைவானுக்குத் திரும்பிச் செல்வோம். தைவானிய அரசியல்வாதிகள், தாம் வெறும் சில்லுகளைத் தொகுப்பவர்களாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். அவர்கள் உயர் தொழில்நுட்பத்தில் நுழைய விரும்பினர். அவர்கள் VLSI திட்டத்தின் கீழ் ITRI (Industrial Technology Research Institute) -ஐ நிறுவினர். நான் தைவானில் ITRI-க்குச் சென்றிருக்கிறேன். அடுத்து அவர்கள் UMC (United Microelectronics Corporation) -ஐத் தொடங்கினர். அரசாங்கத்தின் உதவியுடன் அமெரிக்காவின் RCA நிறுவனத்திடமிருந்து ஒரு தலைமுறை பழைய தொழில்நுட்பத்தைப் பெற்றனர். வெறும் சில்லு தொகுப்பு மட்டுமே செய்வதை விட்டு வில்லைப் புனைவுக்கு (wafer fab) மாறுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. சீனா மிகக் குறைந்த தொழிலாளர் செலவில் சந்தையில் நுழையும் என்ற அச்சமே இதற்கான உந்து சக்தியாக இருந்தது. அப்படியிருந்தும், 1985 ஆம் ஆண்டளவில் அவர்கள் மேலும் ஒரு தலைமுறை பின்தங்கி விட்டனர்.
தலைமையமைச்சரின் நேரடி அழைப்பின் பேரில் தைவான் திரும்பினார்
3:37 மோரிஸ் சாங் 1949-ல் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர். அவர் ஹார்வர்டில் பொருளாதாரம் படிக்கச் சேர்ந்தார். ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை. பின்னர் MIT -யில் சேர்ந்து இயந்திரப் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். முனைவர் பட்டத் தகுதித் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். பின்னர் TI -யில் பணிபுரியும் போது 1964-ல் ஸ்டான்போர்டில் முனைவர் பட்டம் பெற்றார். தலைமைப்பதவி வழங்கப்படாததால் TI -யிலிருந்து விலகினார். பின்னர் 1985-ல், தைவான் தலைமையமைச்சரின் அழைப்பின் பேரில் ITRI -யில் சேரச் சம்மதித்தார். அவரது அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அமைச்சர் குவோ-டிங் லி, ITRI-யை நிர்வகிக்க அவருக்கு முழு உரிமை அளித்தார்.
வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு நமது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்
7:05 அதுபோன்ற ஏதாவது இந்தியாவிலும் நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதுபோன்ற ஒருவரை நாம் கண்டுபிடிக்க வேண்டும், நமது தலைமையமைச்சர் அதே போலப் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். தைவானின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு நமது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
சில்லுகளைப் புனைவோம், ஒருபோதும் சொந்தமாக வடிவமைக்க மாட்டோம்
7:23 ITRI-யின் தலைவராக அவர் தைவானுக்குச் சென்றபோது அவருக்கு வயது 54. சில்லுகளை வடிவமைக்க மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், வடிவமைப்புகளைத் தரப்படுத்த வேண்டும் என்றும் மீட் மற்றும் கான்வே புத்தகத்தில் முன்மொழியப்பட்ட கருத்து மோரிஸை பெரிதும் பாதித்தது. அந்த நேரத்தில் நடைமுறைகள் வித்தியாசமாக இருந்தன. இன்டெல் வடிவமைத்த அனைத்து சில்லுகளும் இன்டெலின் சொந்தப் புனைவு ஆலைகளுக்குத் (fabs) தான் அனுப்பப்பட்டன. நான் அந்த நேரத்தில் மோட்டோரோலாவில் (Motorola) பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான் வடிவமைத்த அனைத்து சில்லுகளும் மோட்டோரோலாவின் சொந்தப் புனைவு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. மோரிஸின் யோசனை என்னவென்றால், வடிவமைப்பாளர்கள் தாங்கள் சிறந்து விளங்கும் வடிவமைப்புப் பணிகளைச் செய்யட்டும், புனைவு ஆலைகள் தாங்கள் சிறந்து விளங்கும் உற்பத்திப் பணிகளைச் செய்யட்டும் என்பதுதான். ஆனால் அந்த நேரத்தில் எந்த நிறுவனமும் தங்கள் தனித்துவமான வடிவமைப்பு திருடப்படலாம் என்ற அச்சத்தில் தங்கள் மதிப்புமிக்க வடிவமைப்பை வேறு நிறுவனத்திற்கு அனுப்பத் தயாராக இல்லை. இந்த முட்டுக்கட்டையை உடைக்க வடிவமைப்பு நிறுவனங்களுக்கு மோரிஸ் அளித்த உறுதி என்னவென்றால், TSMC புனைவு மட்டுமே செய்யும், ஒருபோதும் தன் சொந்த சில்லுகளை வடிவமைக்காது என்பதுதான். அவர் TSMC-யைத் தொடங்கி நிதி திரட்ட உலகம் முழுவதும் சென்றார். பிலிப்ஸ் மட்டுமே 28% முதலீடு செய்தது, மீதமுள்ள 48% தைவான் அரசாங்கத்திடமிருந்தும், 24% தலைமையமைச்சரின் வேண்டுகோளின் பேரில் தைவானின் பணக்காரர்களிடமிருந்தும் பெறப்பட்டது. தொடக்கத்தில் அது ஏறக்குறைய ஒரு தைவான் அரசாங்கத் திட்டம் போலத்தான் இருந்தது.
வாடிக்கையாளர்களின் வடிவமைப்புகளைப் பாதுகாக்க நேர்மையும் நம்பிக்கையும்
12:00 இப்படித்தான் TSMC தொடங்கப்பட்டது. வடிவமைப்பைப் புனைவிலிருந்து பிரித்து, உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்துவதே முக்கியக் கருத்தாக இருந்தது. கார்டன் மூர் அவரது யோசனையைக் கேலி செய்தபோதிலும், மோரிஸ் விட்டுக்கொடுக்கவில்லை. அவர் தனது சிறந்த பொறியாளர்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி அளித்து அவர்களைத் தைவானுக்குத் திரும்ப அழைத்து வந்தார். பின்னர் தொழில்நுட்ப மேம்பாட்டில் இடைவிடாத முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் முதலில் 180 nm சில்லுகளுடன் தொடங்கினர். பின்னர் படிப்படியாக 65 nm, 45 nm, 28 nm எனச் சென்றனர். 28 nm அளவில் ஒரு பெரிய சிக்கல் எழுந்தது, ஏனெனில் 28 நானோமீட்டருக்கு 2D டிரான்சிஸ்டர்களில் இருந்து 3D டிரான்சிஸ்டர்களுக்கு மாற்ற வேண்டும். அதைத்தாண்டி அவர்கள் இப்போது 2 nm -க்கு வந்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் TSMC -யுடன் தொடர்புகொள்வது கடினம் என்பது எனது ஆரம்ப எண்ணம். எனவே, நான் வடிவமைத்த சில்லுகளுக்கு, நான் மோட்டோரோலாவுக்குச் செல்வேன். அங்கு ஆங்கிலத்தில் தொடர்புகொள்வது எளிது. இதேபோலவே, சாம்சங்குடன் ஆரம்பத்தில் தொடர்புகொள்வதும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் அந்தக் குறைபாடுகளையெல்லாம் கடந்துவிட்டார்கள். புனைவு செய்து வாங்க வேண்டுமென்றால், இப்போது அவர்களிடம் சிறந்த வாடிக்கையாளர் சேவை உள்ளது. இன்டெல், AMD, சாம்சங், மோட்டோரோலா அனைத்திற்கும் சொந்தமாகப் புனைவு ஆலைகள் இருந்தன. வாடிக்கையாளர்களின் வடிவமைப்புகளைப் பாதுகாக்க, அவர் நிறுவனத்திற்குள் நேர்மையையும் நம்பிக்கையையும் ஊக்கப்படுத்தினார். TSMC-யின் கவனம் உற்பத்தித் திறன், விலை நிர்ணயம் மற்றும் சரியான நேரத்தில் விநியோகம் ஆகியவற்றில் இருந்தது. உற்பத்திக்காக உங்கள் வடிவமைப்பை TSMC-க்கு அனுப்பும்போது, தினசரி என்ன வேலை செய்யப்படுகிறது என்பதன் முன்னேற்றத்தை நீங்கள் இணையத்தில் கண்காணிக்க முடியும். இது வாடிக்கையாளருக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது.
அச்சுறுத்தும் தடைகளுக்கு அப்பால் ஒரு ஒளிமயமான எதிர்காலம் பிரகாசிக்கிறது
16:22 TSMC நிறுவனம் 18 அங்குல விட்டம் கொண்ட வில்லைகளையும் தயாரிக்கிறது. முந்தைய 8 அங்குல வில்லைகளுடன் ஒப்பிடும்போது, இது ஒரு வில்லையிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான சில்லுகளை உற்பத்தி செய்கிறது. மேலும், பெரிய விட்டம் காரணமாக, விளிம்புகளில் வீணாகும் சில்லுகளின் எண்ணிக்கையும் குறைவு. இவை அனைத்தும் ஒரு சில்லுக்கு ஆகும் செலவைக் கணிசமாகக் குறைக்கின்றன. தொழிற்சாலையில் மோரிஸின் சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட அவரது குறிக்கோள் இதுதான், “அச்சுறுத்தும் தடைகளுக்கு அப்பால் ஒரு ஒளிமயமான எதிர்காலம் பிரகாசிக்கிறது”.
தமிழாக்கம்: இரா. அசோகன்