ஒலிபீடியா என்பது நாட்டுடைமை மற்றும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் உள்ள தமிழ் நூல்கள் மற்றும் விக்கிபீடியா கட்டுரைகளைத் தன்னார்வலர்கள் மூலம் ஒலி வடிவமாக மாற்றும் ஒரு சிறு முயற்சி. அவ்வாறு உருவாக்கப்படும் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் யாவர்க்கும் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைக்கச் செய்வதே. பார்வையற்றவர்களுக்கு இந்த ஒலிப் புத்தகங்கள் பேருதவியாக இருக்கும். நாமும் ஒலிப்புத்தகங்ளைக் கேட்டு மகிழலாம். தமிழில் அரிய மூலங்கள் பல இருந்தாலும், நாம் அதனை ஆவணப்படுத்துவதில் சற்று தடுமாறுகிறோம். சமூக வலைதளங்களில் மட்டுமே நம்முடைய படைப்புகளை வெளிக்கொணர்வதும், ஆவணப்படுத்துவதும் பெருகி வருவது வருத்தமளிக்கிறது. வளர்ந்து வரக்கூடிய தற்போதைய தொழிற்நுட்பத்தில் பிறமொழிகள் பல்வேறு வடிவங்களில் தங்களுக்கான இடத்தைப் பிடித்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஏறக்குறைய அனைத்து இலக்கியங்களும் Librivox என்ற இணையதளம் மூலம் ஒலிவடிவமாக மாற்றப்பட்டுவிட்டன. மற்ற மொழிகளைவிட தொன்மையும் சிறப்பும் வாய்ந்த தமிழ் இலக்கியங்களை தற்போதைய தொழிற்நுட்பத்தின் மூலமாக ஏதிர்காலத்தில் அனைவருக்கும் ஒலிவடிவில் கிடைக்கச் செய்வதே ஒலிபீடியாவின் முக்கிய நோக்கமாகும்.
மக்கள் பலரும் பயன்படுத்தும் காணொளித் தளமான யூடியூப்பில் பல நூறு தமிழ் ஒலிப்புத்தகங்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் Standard YouTube License என்ற உரிமையின் கீழ் இருப்பதால் அவற்றை பதிவிறக்கம் செய்து வேறு தளங்களில் பகிர்வது என்பது தடுக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தன்னார்வலர்கள் மூலம் ஒலிபீடியாவில் வெளியிடப்படும் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் கிரியேட்டிவ் காமென்ஸ் என்ற உரிமையின் கீழ் வெளியிடுகிறோம். அதாவது தாங்கள் இவ்வொலிப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்தும், பல்வேறு தளங்களில் பகிரவும் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. இதுதவிர இந்த ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் யூடியூப் மட்டுமல்லாமல் பல்வேறு பாட்காஸ்ட் தளங்களில் ( Apple, Google, Spotify போன்ற மேலும் பல) கிடைக்க வழிசெய்யப்படுகிறது. மேலும் archive.org என்ற இணையதளத்திலும் எம்பி3 வடிவில் பதிவேற்றப்படுகிறது. இதனால் ஸ்மார்ட் போன் அல்லாமல் மற்ற கைபேசிகளிலும் கருவிகளிலும் பதிவிறக்கம் செய்து கேட்கவும் பகிரவும் முடியும்.
பாட்காஸ்ட்
பாட்காஸ்ட் அல்லது ஒலியோடை என்பதை பலரும் அறிந்திருப்போம். வானொலி போன்று ஒலிவடிவில் பேசுவர். இச்சேவையை பல்வேறு இணையதளங்கள் வழங்குகின்றன. சில இணையதளங்கள் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை இலவசமாகவும் அதன் பின் கட்டணமும் வசூலிக்கின்றன. ஒரு சில இணையதளங்கள் முற்றிலும் இலவசமாக சேவையை வழங்குகின்றன. ஏறக்குறைய 20க்கும் அதிகமான பாட்காஸ்ட் தளங்கள் உள்ளன. சரி இவை அனைத்திலும் நம்முடைய ஒலிக்கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டுமா ? என்ற ஐயம் தோன்றலாம். அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாட்காஸ்ட் தளங்களில் இரண்டு வகைகள் உள்ளன. 1. உங்களுடைய ஒலிக் கோப்பினை பதிவேற்றம் செய்யும் வசதி (Hosting Provider) கொண்ட தளங்கள். 2. ஏற்கனவே பதிவேற்றம் செய்த இணையதளத்திலிருந்து RSS(Really Simple Syndication) இணைப்பை மட்டும் வைத்து இயங்கும் தளங்கள் (எ.கா. Apple, Google போன்றவற்றைக் கூறலாம்). எளிதாகக் கூற வேண்டுமானால் பதிவேற்றம் செய்யும் வசதி கொண்ட (Hosting Provider) ஏதேனும் ஒரு இணையதளத்தில் உங்களுடைய ஒலிக்கோப்பினை பதிவேற்றம் செய்து அதன்பின் அத்தளத்தில் உள்ள RSS இணைப்பை மட்டும் பல்வேறு பாட்காஸ்ட் தளங்களில் பகிர்ந்தால் போதுமானது. anchor.fm என்ற இணையதளம் இச்செயல்முறையை எளிதாக்குகிறது. Apple, Google Podcast, Spotify உட்பட 9 க்கும் அதிகமான பாட்காஸ்ட் இணையதளங்களில் அந்த இணையதளமே பகிர்ந்துவிடுகிறது. மேலும் இச்சேவை இலவசமே. பலருக்கும் வானொலியில் பேச ஆசையிருக்கும். அவர்கள் இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாசகர்களுக்கு சேவை வழங்கலாம்.
தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் அதிகமான இணைய சந்திப்புகள் பெரும்பாலும் முகநூல்களில் மட்டுமே பகிரப்படுகின்றன. இதனால் இது போன்ற காணொளிகள் / ஒலியோடைகள் Google தேடலில் கிடைப்பதில்லை. உங்களுடைய ஒலியோடைகள் Google Podcastல் இடம்பெற்றால் Google தேடலில் மட்டுமல்லமால் Google Home, Google Assistant, Android Auto போன்ற பல்வேறு கருவிகளிலும் கேட்கலாம்.
ஒலிபீடியா தற்போது Apple Itunes, Google Podcast, Spotify, JioSaavn, Breaker, Castbox, Pocket Casts, Radio Public, Sticher போன்ற 9 தளங்களில் பகிரப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒலிபீடியா திட்டம் சென்னை ஐஐடி மற்றும் எஸ்.எஸ்.என் கல்லூரி இணைந்து தயாரித்த உரை ஒலி மாற்றி (TTS – Text-To-Speech) என்ற கட்டற்ற மென்பொருள் மூலம் செயல்படுத்தினோம். இதன் மூலம் உருவாக்கப்படும் ஒலிக்கோப்புகள் சிறந்த முறையில் இருந்தாலும் மனிதர்கள் வாசிப்பது என்பது இன்னும் சிறப்பாக இருக்கும். எனவே கடந்த சில மாதங்களாக காரைக்குடியைச் சுற்றியுள்ள பள்ளி / கல்லூரி மாணவர்களின் உதவியுடன் இத்திட்டத்தை எடுத்துச் செல்கிறோம். பாண்டி விக்னேஸ்வரி, ஶ்ரீ தேவி, வினோதினி, சண்முகப்பிரியா, பவித்ரா, சபிதா பானு, சக்தி கற்பகம், ரெத்தினமாலா, வெனிஷா, திவ்யா, நாவினியா மெர்லின், ராகவி செல்லம், லெட்சுமி, கோமதி, சிலம்பரசன், சரஸ்வதி, மணிமஞ்சுளா, சூர்யா, ரோஜா, பிரகாசு, ஶ்ரீநிதி, பிரஜன், அருணா பிரியதர்சினி, முனைவா் சி.சங்கீதா, அபிதரணி, மெடலின் ஆல்பிரைட், பரிமளா, ரோஜிட்டா, லாவண்யா, டாக்டர் விக்டோரியா, பெட்ரிசியா மற்றும் பாலபாரதி ஆகிய 30 தன்னார்வலர்கள் இத்திட்டத்தை எடுத்துச் செல்கின்றனர். இதுவரைக்கும் 70+ ஒலிக்கோப்புகள் (சுமார் 40 மணி நேரம்) வெளியிட்டுள்ளோம்.
விக்கிபீடியாவைப் போன்று இத்திட்டதில் தாங்களும் பங்களிக்கலாம். சரி எவ்வாறு பங்களிப்பது ? மிகவும் எளிது. எங்களை தொடர்பு கொண்டால் நாங்கள் உங்களுக்கு விருப்பமான வகைகளில் அதாவது கதை, சிறுகதை, புதினம், கட்டுரை என புத்தகங்களை அனுப்புவோம். தாங்கள் தங்கள் கைபேசியில் பதிவு செய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் போதுமானது. அடுத்து சில நாட்களில் தங்கள் பெயரில் ஒலிபீடியாவில் அந்நூல் ஒலிப்புத்தகமாக பதிவேற்றம் செய்யப்படும்.
இணைப்புகள் :
Youtube : www.youtube.com/channel/UCG0XGCZ1XroIWdBXvtqeI2g
Apple Podcast : podcasts.apple.com/us/podcast/olipedia-%E0%AE%92%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AF/id1521051553
Google Podcast : www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8yOGIxMzdkMC9wb2RjYXN0L3Jzcw%3D%3D
Spotify : open.spotify.com/show/66W3J3gQLu5pl5HQ5BBNnG
All Platform Podcast : anchor.fm/olipedia
Archive.org : archive.org/details/@olipedia_org
Twitter : www.twitter.com/@olipedia
Telegram : t.me/tamilolipedia
Fb : www.facebook.com/olipedia.org
—
லெனின் குருசாமி