எளிய தமிழில் Computer Vision 3. படத்தைப் பதிவு செய்யும் (Image recording) வழிமுறைகள்

தமிழில் வடிவம் மற்றும் உருவம் போன்ற சொற்களை shape க்குப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். படம் என்ற சொல்லே image க்கு ஒப்பானது. ஆனால் படம் என்றால் ஓவியம் மற்றும் திரைப்படம் என்றும் புரியக்கூடும். ஆகவே பொருள்மயக்கம் வரக்கூடிய இடங்களில் பிம்பம் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம்.

படம் என்றால் என்ன? மிக எளிதாகச் சொல்லப்போனால் படம் என்பது முப்பரிமாண உலகத்தை ஒரு குறிப்பிட்ட கணத்தில் இரு பரிமாணங்களில் பதிவு செய்வதுதான். இந்த பதிவைச் செய்வதற்கு பலவிதமான தொழில்நுட்பங்கள் உள்ளன.

அளவியல் (Analog) படம்

எண்ணிம நிழற்படக் கருவிகள் வருவதற்கு முன்னால் நாம் படச்சுருள் (film) பயன்படுத்தித் தானே படமெடுத்து வந்தோம். இதுதான் அளவியல் முறைப் படம். இம்மாதிரி அளவியல் தொழில்நுட்பங்கள் இப்பொழுது பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டன. 

எண்ணிம (Digital) படம்

எண்ணிம படம்

எண்ணிம படம்

இக்காலத்தில் நிழற்படக் கருவிகளாக இருந்தாலும் சரி திறன் பேசியாக இருந்தாலும் சரி படங்களை எடுத்து சில்லு நினைவகத்தில் எண்களாகத்தான் சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆகவே இதை எண்ணிம தொழில்நுட்பம் என்று சொல்கிறோம். இதில் இரண்டு வகைகள் உள்ளன. 

திசையன் எண்ணிம படம் (Vector digital image)

திசையன் படங்கள் அடிப்படையில் புள்ளிகள், கோடுகள், வட்டங்கள், முக்கோணங்கள், செவ்வகங்கள் போன்ற வடிவியல் வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. ஆகவே இவற்றை ஒவ்வொரு படவலகுகளாக (pixel) நினைவகத்தில் சேமித்து வைக்க வேண்டியதில்லை. ஒரு வட்டம் என்றால் அதன் மையம் X மற்றும் Y அச்சுகளில் எங்கு உள்ளது, அதன் ஆரத்தின் நீளம் எவ்வளவு மற்றும் உள்வட்டம், வெளிவட்டம் வண்ணங்கள் யாவை என்று சேமித்து வைத்தால் போதும். திறந்தமூல இங்க்ஸ்கேப் (Inkscape) மென்பொருளில் படம் வரைந்து SVG கோப்பு வகையாக சேமிப்பது இவ்வகைப் படமே.

பரவு எண்ணிம படம் (Raster digital image)

பரவு படம் என்பதில் படங்கள் தளவணி (matrix) வடிவத்தில் சேமிக்கப்படும். படத்தின் படவலகுகள் (pixels) வரிசைகள் மற்றும் பத்திகளில் எண்களாகச் (படத்தில் காண்க) சேமிக்கப்பட்டிருக்கும். இது மிகவும் பொதுவாகக் காணப்படும் படவகையாகும், மேலும் கேமராக்கள், மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்தி மிக எளிதாக உருவாக்க முடியும். அனைத்து பட செயலாக்கமும் தொகுப்பு மென்பொருட்களும் பரவு படங்களை மட்டுமே ஆதரிக்கின்றன. எனவே நாம் இனிமேல் பார்க்கப் போவதெல்லாம் இதைப்பற்றித்தான். 

பரவு (Raster) பட அடிப்படைகள்

  • படவலகுகள் (Pixels): படத்தை உருவாக்கும் அடிப்படைப் புள்ளிகள். 
  • பிரிதிறன் (Resolution): ஒரு படத்தில் உள்ள மொத்த படவலகுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 
  • உருவ விகிதம் (Aspect Ratio): படத்தின் அகல, உயர விகிதம்.
  • வண்ண ஆழம் (Color Depth): ஒரு படத்தின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் வகைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 

நன்றி

  1. Computer Vision Basics in Microsoft Excel By Alok Govil and Venkataramanan Subramanian

இத்தொடரில் அடுத்த கட்டுரை: படத்தை எண்களாகப் பதிவு செய்தல் (Digital image representation)

கருப்பு வெள்ளை அல்லது இருமப் படங்கள் (Black and White or Binary Images). சாம்பல் அளவீட்டுப் படங்கள் (Grayscale Images). வண்ணப் படங்கள் (Color Images).

ashokramach@gmail.com

%d bloggers like this: