தொழில்துறையில், அதிலும் குறிப்பாக உற்பத்தியில், கணினிப் பார்வைக்கு என்ன முக்கியமான பயன்பாடுகள் உள்ளன என்று பார்ப்போம்.
கைமுறைத் தொகுப்பு வேலைக்கு உதவுதல் (Aiding Manual Assembly)
முன்னேறியுள்ள இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் சில உற்பத்திப் பொருட்கள் தானியங்கியாகத் தொகுக்கப்படுகின்றன. எனினும் பெரும்பாலான பொருட்கள் இன்னும் கைமுறையாகவே தொகுக்கப்படுகின்றன. துல்லியமாகத் தொகுக்க வேண்டிய பொருட்களில் கணினிப் பார்வை பிழைகளைத் தடுக்க உதவும். ஒவ்வொரு செயலுக்கும் பின்னர், தொகுப்பவர் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன்பு, அது சரியாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த கணினிப் பார்வை மூலம் படமெடுத்து சேமிக்கப்பட்ட சரியான படத்துடன் ஒப்பிட்டு கணினி முடிவை உடன் தெரிவிக்க இயலும். ஒரு செயல் முழுமையடையாவிட்டால் அல்லது தவறு நடந்தால், அதைச் சரிசெய்ய தொகுப்பவருக்குக் காண்பிக்கலாம். மேலும், சரிபார்க்கப்பட்ட படிநிலைகளைப் பதிவும் செய்யலாம்.
வரிசைமுறை உற்பத்தியில் ஆய்வு செய்தல் (Inspection on the Assembly Line)
வரிசைமுறை உற்பத்தியில், பாகங்கள் மற்றும் தயாரிப்புகளை ஆய்வு செய்தல், செயல்முறைகள் மற்றும் கருவிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவது ஆகியவை மிக முக்கியமான பயன்படுத்தும் முறைகள்.
பார்வையால் வழிநடத்தப்படும் எந்திரன்கள் (Vision-guided Robots)
நகரும் எந்திரன்கள் செல்லும் பாதையில் இடையூறு எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்துப் பாதுகாப்பாக மோதலைத் தவிர்த்து நகர வேண்டியிருக்கிறது. தொழிற்சாலைகளில் ஒரே இடத்தில் நிறுவிய இயந்திரன்கள் கூடக் கைகளை (Robotic Arm) நகர்த்த வேண்டுமே! இவையும் கைகளை நகர்த்தும் போது மோதலைத் தவிர்க்க கணினிப் பார்வையையே முக்கியமாக நம்பி இருக்கின்றன.
பாதுகாப்புக்காக தொழில்துறை எந்திரன்களைச் (Industrial Robots) சுற்றி கம்பி வலைத் தடுப்பு போடுவது வழக்கம். ஆனால் கூட்டு வேலை எந்திரன்களை (Collaborative Robots) கம்பிவலைத் தடுப்பில் வைக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இவை கணினிப் பார்வை மூலம் மோதல் தவிர்ப்பு (collision avoidance) போன்ற உள்ளார்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளன.
சுவடுதொடரல் மற்றும் தடயம் ஆய்வு (Tracking and tracing)
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கடுமையான விதிமுறைகள் உள்ளன. தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இடம் முதல் நோயாளிகளுக்கு இறுதியாகச் சென்றடையும் வரை கண்காணிப்பது அவசியம். இதை அடைய உதவுவதற்காக, வரிசை எண்கள், காலாவதி தேதிகள், உற்பத்தி தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அச்சிடலாம். இவற்றை அட்டைப் பெட்டிகளில் அடைத்து விநியோகத்துக்கு அனுப்பும் போது பிழையின்றிப் பதிவு செய்வதற்கு கணினிப் பார்வை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: படத்தைப் பதிவு செய்யும் (Image recording) வழிமுறைகள்
அளவியல் (analog) படம். எண்ணிம (digital) படம். திசையன் எண்ணிம படம் (Vector digital image). பரவு எண்ணிம படம் (Raster digital image).