பொருளைக் கண்டறிதல் (Object detection)
நம்முடைய படத்தில் உள்ள பொருட்கள் யாவை, அவை என்ன வகை மற்றும் ஒவ்வொரு வகையிலும் எத்தனை இருக்கின்றன என்று நமக்குத் தெரியாது. முதல் வேலையாக அவை அனைத்தையும் வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு எல்லைப் பெட்டியை வரைய விரும்புகிறோம். இதைப் பொருளைக் கண்டறிதல் என்று பொதுவாகச் சொல்கிறோம். இந்த வேலையைக் கீழ்க்கண்ட படி நிலைகளாகப் பிரிக்கலாம்.
பொருட்களின் இடம் குறித்தல் (localization)
ஒரு படத்தில் முக்கியமான அல்லது மிகவும் புலப்படக்கூடிய பொருளைக் கண்டுபிடிப்பதை பொருட்களின் இடங்குறித்தல் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் படத்திலுள்ள அனைத்து பொருட்களையும் அவற்றின் எல்லைகளையும் பொருள் கண்டறிதல் கண்டுபிடிக்க முயல்கிறது.
படங்களுக்குள் பொருட்களை வரையறுக்கும் பணி பொதுவாக தனித்தனி பொருட்களுக்கான எல்லைப் பெட்டிகளை வரைந்து அடையாளக் குறிகளை இடுவதுதான். இது மையத்திலுள்ள ஒரு முக்கியப் பொருளை வகைப்படுத்துவது போல் அல்ல. பதிலாக பல பொருட்களை வகைப்படுத்தி இடத்தையும் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, சீருந்து (car) கண்டறிதலில், கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள அனைத்து சீருந்துகளையும் கண்டறிந்து சுற்றிலும் எல்லைப் பெட்டிகளை வரைய வேண்டும்.
பொருட்களை வகைகளாகப் பிரித்தல் (Semantic Segmentation)
படத்தில் உள்ள ஒவ்வொரு படவலகையும் அதன் சூழலுக்கு ஏற்ப ஒரு வகைக்கு முதலில் ஒதுக்கி, பின்னர் ஒவ்வொரு படவலகும் ஒரு பொருளுக்கு ஒதுக்கப்படும். கணினிப் பார்வைக்கு மையமானது பிரித்தல் (segmentation) செயல்முறையாகும், இது முழுப் படங்களையும் படவலகுக் குழுக்களாகப் பிரிக்கிறது. பின்னர் அவை அடையாளக் குறியிடப்பட்டு வகைப்படுத்தப்படும்.
ஒவ்வொரு பொருளாகப் பிரித்தல் (Instance Segmentation)
படத்தில் உள்ள ஒவ்வொரு படவலகையும் ஒரு வகுப்பிற்கு வகைப்படுத்துங்கள். அடுத்து ஒவ்வொரு படவலகும் ஒரு பொருளுக்கு ஒதுக்கப்படும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: தொழில்துறைப் படக் கருவி (Camera) தொழில்துறைப் படக்கருவிகளும் இணையப் படக்கருவிகளும் (Webcams). ஜெனிகேம் தரநிலைகள் (GenICam standards). பொருள் சார்ந்த இடைமுகங்கள் (Physical interfaces). உணரி வகை – CMOS அல்லது CCD. உருள் சார்த்தியும் (rolling shutter) முழு சார்த்தியும் (global shutter).