உங்களுக்கு Dark Pattern பற்றித் தெரியுமா? ஸ்வேச்சா – நாள் 7

இன்று காலை VS Codium மென்பொருள் நிறுவல் இருந்தது. VS Codium என்பது VS Code மென்பொருளின் கட்டற்ற வடிவம் என்பதை விரிவாகச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து HTML, CSS வகுப்புகளும் நடந்தன. பிற்பகலில் இரஞ்சித் ராஜ் – தரவு, தரவின் முக்கியத்துவம், தரவுகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசினார். இந்திய அரசின் தரவுகளைப் பார்க்க data.gov.in/ போய்ப் பார்க்கலாம் என்று காண்பித்தார். லிங்கிடுஇன் போன்ற தளங்கள் எப்படி நம்முடைய தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதற்கு மேலை நாடுகளில் அவர்கள் செலுத்திய தண்டத்தொகை என்ன? நாம் எப்படிப் படிப்பறிவில்லாத தற்குறிகளாக நடத்தப்படுகிறோம்? Dark Pattern என்றால் என்ன? என்பதை எல்லாம் மிக விரிவாக எடுத்துச் சொன்னார்.

சீனச் செயலியைத் தடை செய்து விட்டோம். நாளை இதே போல ஓர் அமெரிக்க நிறுவனத்தின் செயலி வந்தால் என்ன செய்வது? நம்முடைய தரவு திருடப்பட்டது திருடப்பட்டது தானே! திருடர்கள் தாம் மாறியிருப்பார்கள். ஆனால் திருட்டு போய்க் கொண்டு தான் இருக்கும் அல்லவா!

அமேசான் தளத்தில் ஒரு முறை பயனராகப் பதிந்தால், அதில் இருந்து வெளிவர முடியாதபடி அமேசான் தளம் வடிவமைக்கப்பட்டிருப்பது, ஜிமெயில், குரோம் ஆகியவற்றை ஆண்டிராய்டு அலைபேசியில் இருந்து நீக்க முடியாமல் வைத்திருப்பது, முகநூலில் வெளியேறுவதைச் சிக்கலுக்குரிய ஒன்றாக வைத்திருப்பது ஆகியன எல்லாம் Dark Pattern வடிவங்கள் என்பதை இரஞ்சித் ராஜ் புரியும்படி எடுத்துச் சொன்னார்.

Dark Pattern பற்றிய காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. Dark Pattern என்பது கீழுள்ள பல்வேறு வகைகளில் இருக்கலாம் என்பது காணொளியில் காட்டப்பட்டது.
Bait and Switch
Forced Disclosure
Forced Continuity
Friend Spam
Misdirection
Sneak into Basket
ConfirmShaming
Disguised Advertisements
Preventing Price Comparison
Bad Language

இவை எல்லாவற்றைப் பற்றியும் தமிழிலும் நம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

குறைந்தது 10 Dark Pattern பற்றி வகுப்பீடுகள்(Assignments), ஒவ்வோர் அணியும் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Dark Patternஇல் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்னும் கேள்விக்கு, முதலில் உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். அதன் பிறகு தானே எதிரியைத் தாக்குவதா? தப்பிப்பதா? என்று முடிவெடுக்க முடியும் என்றார் இரஞ்சித் ராஜ். மொத்தத்தில் கட்டற்ற மென்பொருளுக்கு மாறுவது தான் வெற்றிக்கான ஒரே வழி என்றார்.  சரிதானே!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
என்கிறார் திருவள்ளுவர். காலம் அறிதல், இடம் அறிதல் ஆகியன அறிந்தால் தானே வெல்ல முடியும்!

%d bloggers like this: