ஈய-அமில மின்கலத்தைப் பயன்படுத்தும் மின் கவைத்தூக்கி சரக்குந்துகள் (Electric forklift trucks) பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. இவை கப்பல்கள், கிடங்குகள் போன்ற இடங்களில் புகை இல்லாமல் உள்வேலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட இயலாது.
பேருந்துகளும் சரக்குந்துகளும் அடிப்படையில் கார்கள் போன்றவையே. எனினும் அதிக பளுவை சமாளிக்க அதிக முறுக்கு விசையும் (torque) திறனும் (power) தேவைப்படும். ஆகவே அதற்கேற்ற தோதான பெரிய மோட்டாரும் மின்கலமும் இருக்க வேண்டும். இன்றைய சந்தையில் மின் பேருந்துகளே சரக்குந்துகளை விட அதிகம் பயன்பாட்டில் வந்துள்ளன.
திறன் பொறித்தொடர் (Powertrain)
மின் கார்களில் பெரும்பாலானவை முன் சக்கரத்தை ஓட்டும் வகை (front wheel drive) என்று முன்னர் பார்த்தோம். ஆனால் கனரக வணிக ஊர்திகள் யாவையும் பின் சக்கரத்தை ஓட்டும் வகைதான் (rear wheel drive). இவை பெரும்பாலும் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார்களையே (Permanent Magnet Synchronous Motor – PMSM) பயன்படுத்துகிறன.
மின்சாரக் கார்கள் விரைவான முடுக்கமும், ஓட்டுநரின் செலுத்தல்படி விரைவாகச் செயல்படுமாறும் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் பேருந்து, சரக்குந்து போன்ற வணிக ஊர்திகளுக்கு செயல்திறன் என்றால் வேகத்தை விட முறுக்குவிசை (torque) மற்றும் சுமை திறன் (load capacity) மீது கவனம் செலுத்தவேண்டும். முக்கியமாக மின்சார சரக்குந்துகளுக்கு கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் அதிக சுமைகளைக் கையாளும் திறன் கொண்ட வலுவான திறன் பொறித்தொடர்கள் தேவைப்படுகின்றன.
அதிகத் திறன் கொண்ட மின்கலங்கள்
கார்களுக்கான மின்னேற்ற உள்கட்டமைப்பு பரவலாக வந்துகொண்டிருக்கிறது. நெடுஞ்சாலைகளில் வேகமாக மின்னேற்றம் செய்யும் நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் மின்சார சரக்குந்துகளும் பேருந்துகளும் அவற்றின் பணிமனைக்கே திரும்ப வந்து மின்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. பெரும்பாலான மின்சார கார்கள் 40 kWh முதல் 100 kWh வரையிலான மின்கலத் திறன் கொண்டவை. அதிக சுமைகளை இழுக்கவும் ஒரு மின்னேற்றத்தில் நீண்ட ஓடுதூரம் செல்லவும் மின்சார சரக்குந்துகளுக்கும் பேருந்துகளுக்கும் பெரிய மின்கலங்கள் (100 kWh முதல் 600 kWh வரை) தேவைப்படுகின்றன.
இரட்டைச் செருகி மின்னேற்றம் (Dual gun charging)
இம்மாதிரி கனரக மின்னூர்திகளில் பெரிய மின்கலம் தேவைப்படுகிறது என்று பார்த்தோம். ஆகவே இவற்றை மின்னேற்றம் செய்ய அதிக மின்னோட்டமும் தேவைப்படுகிறது. மின்னேற்றத்தைத் துரிதப்படுத்த சில கனரக ஊர்திகள் இரட்டைச் செருகிகளைப் பயன்படுத்துகிறன.
அச்சுப்போக்கு காந்தப்புலம் (axial flux) மோட்டார்கள்
அதே அளவு ஆற்றல் தரும் ஆரப்போக்கு (radial flux) மோட்டார்களைவிட அச்சுப்போக்கு மோட்டார்கள் எடையிலும் கொள்ளளவிலும் குறைந்தவை. இவையும் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் வகைதான். ஆனால் இவற்றை வடிவமைப்பதிலும் தயாரிப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இதனால் விலையும் ஏறிவிடும். இருப்பினும் சில நிறுவனங்கள் இந்தப் பிரச்சினைகளைச் சமாளித்துப் பேருந்து, சரக்குந்து போன்ற வணிக ஊர்திகளுக்கான அதிக ஆற்றல் கொண்ட அச்சுப்போக்கு மோட்டார்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஓட்டுநர்களுக்கு உதவிக் குறிப்புகள்
மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது. கியர் மாற்றுதல். ஓட்டும் முறைகள் (Drive Modes). வலுவற்று வீடு திரும்பல் (Limp Home Mode). கட்டி இழுத்தல் (Towing). மின்னூர்தியை நிழலில் நிறுத்துவது அவசியம்.