எளிய தமிழில் Electric Vehicles 21. இரு சக்கர மின்னூர்திகள்

மின்சாரத்தில் ஓடும் மிதிவண்டிகள் (bicycles), சிறுவர்களுக்கான உதைக்கும் ஸ்கூட்டர்கள் (kick scooters) போன்ற இலகுரக இரு சக்கர ஊர்திகள் பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன.

அடுத்து தற்போது சந்தையில் புதிய போக்கு என்னவென்றால் மின்சார ஸ்கூட்டர்கள் மின்சாரக் கார்களை விட அதிவேகமாக விற்பனை ஆகின்றன. வளரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய மாதிரிகளும் புதிய நிறுவனங்களும் பல சந்தையில் வந்துள்ளன.

மின் ஸ்கூட்டர் மோட்டார்கள்

சில குறைந்த திறன் கொண்ட ஸ்கூட்டர்களும், மோபெட்களும் சக்கரத்திலேயே மோட்டார் (hub motor) வைத்து வருகின்றன. இவை தொடியற்ற நேர்மின் மோட்டார் (Brushless DC – BLDC) வகை. இவற்றைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். அதிகத் திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் (Permanent Magnet Synchronous Motor – PMSM) வைத்து வருகின்றன.

திறன் பொறித்தொடர் (powertrain or drivetrain)

electric-two-wheeler-drivetrain

மின் மோட்டார் சைக்கிளின் திறன் பொறித்தொடர்

மின்சாரக் கார்களில் ஒற்றை குறைவேகப் பல்லிணை இருக்கும் என்று முன்னர் பார்த்தோம். இருசக்கர ஊர்திகளில் திறன் குறைவு, ஆகவே பல்லிணை தேவையில்லை. அதற்குப் பதிலாகப் பற்சக்கரமும் (sprocket) சங்கிலியும் அல்லது பல்வைத்த வார்ப்பட்டையும் (toothed belt) இருக்கும். சில வண்டிகளில் இரண்டு வார்ப்பட்டைகள் வைத்து இருகட்ட (2-stage) வேகக்குறைப்பு இருக்கலாம்.

கழற்றி மாட்டக்கூடிய மின்கலம்

சில ஸ்கூட்டர்கள் கழற்றி மாட்டக் கூடிய மின்கலம் வைத்து வருகின்றன. இதற்கு இருவேறு காரணங்கள் உள்ளன. அடுக்குமாடிக் கட்டடங்களில் ஸ்கூட்டரைக் கீழே நிறுத்திவிட்டு மின்கலத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு மேலே வீட்டில் மின்னேற்றம் செய்ய வசதியாக இருக்கும். சில நிறுவனங்களில் மின்சாரம் இறங்கிய மின்கலத்தைக் கொடுத்து விட்டு, கட்டணம் செலுத்தி, மின்னேற்றிய மின்கலத்தை மாற்றீடு (swap or replace) செய்து கொள்ளலாம். இது மின்னேற்றம் செய்யத் தாமதமாகாமல் உடன் தொடர்ந்து பயணிக்க வசதியாக இருக்கும். இது பற்றிப் பின்னொரு கட்டுரையில் விவரமாகப் பார்ப்போம்.

எடுத்துச் செல்லக்கூடிய மின்னேற்றி

இருசக்கர ஊர்திகளில் உள் மின்னேற்றி கிடையாது. வீட்டு மின்னேற்றி வாங்கி வீட்டில் நிறுவிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் தனியாக எடுத்துச் செல்லக்கூடிய மின்னேற்றியும் வாங்கிக் கொள்ளலாம். 

மின் மோட்டார் சைக்கிள்கள் பரவலாக சந்தையில் இன்னும் வரவில்லை

ஸ்கூட்டர்களையும் மொபெட்களையும் விட மின் மோட்டார் சைக்கிளை வடிவமைப்பது ஏன் மிகச் சிக்கலானது? மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது 3 முதல் 7 kW வரையிலான திறனில் இயங்குகின்றன. ஆனால் மோட்டார் சைக்கிள்களுக்கு இதைப்போலப் பலமடங்கு திறன் தேவை. இதற்கு அடிப்படையில் நிறைய புதுப்புனைவான  ஆராய்ச்சியும் மேம்பாடும் (Research and Development – R&D) செய்ய வேண்டும். ஆகவே உயர் செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது கடினம்.

நன்றி

  1. Schematic of electric motorcycle transmission system

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மூன்று சக்கர மின்னூர்திகள்

மோட்டார். திறன் பொறித்தொடர் (Power train). சரக்கு வண்டிகள். பயணி வண்டிகள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: