எளிய தமிழில் Electric Vehicles 19. மின்னூர்திப் பாதுகாப்பு

மின்கலத்திலும் மின்சார அமைப்பிலும் அதிக மின்னழுத்தமும் மின்னோட்டமும் இருப்பதன் காரணமாக மின்னூர்திகளுக்கு மின்சாரப் பாதுகாப்பு ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. 

Electric-vehicle-safety

மின்னூர்திப் பாதுகாப்பு

AIS 156 சான்றிதழ்

AIS 156 என்பது இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (ARAI) வழங்கும் சான்றிதழாகும், இது இந்தியாவில் இலகுரக மின்னூர்திகளுக்கான (light electric vehicles) பாதுகாப்புத் தரநிலை ஆகும். இந்தியாவில் விற்கப்படும் அனைத்து இலகுரக மின்னூர்திகளுக்கும் AIS 156 சான்றிதழைப் பெறுவது கட்டாயம். ஏனெனில் இது வளர்ந்து வரும் மின்னூர்தி சந்தையின் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதிப்படுத்த உதவுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட சோதனை முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு சோதனைகளிலும் ஆய்வுகளிலும் தேர்வு பெற்றால்தான் இந்தச் சான்றிதழ் கிடைக்கும்.

மின்சாரம் சார்ந்த பாதுகாப்புகள் 

AIS 156 சான்றிதழ் பெற மின்கசிவுகள், மிகைச்சுமை, மிகை மின்னழுத்தம் ஆகியவற்றைக் கையாளத் தேவையான பாதுகாப்புகள் மின்னூர்திகளில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கட்டற்று வெப்பம் பரவும் சோதனையில் (thermal runaway propagation test) தீப்பற்றல், வெடித்தல் ஆகியவற்றின் எந்த அறிகுறியும் இல்லாமல் வெற்றிகரமாக முடிக்க வேண்டும். ஒருக்கால் வெப்பம் எல்லையை மீறிச் சென்றால் மணி அடித்தல், மினுக்கும் விளக்குகள் மூலம் ஓட்டுநரை எச்சரிக்கவும் வேண்டும்.

மின்னேற்றம் தொடர்பான அம்சங்கள் 

AIS 156 சான்றிதழானது இலகுரக மின்னூர்திகளை மின்னேற்றுவது தொடர்பான அம்சங்களையும் குறிப்பிடுகிறது. வணிக மின்னேற்றிகளில் காரிலுள்ள செருகி பொருந்துதல், மின்னேற்றம் செய்ய எடுக்கும் நேரம், பொது மின்னேற்ற உள்கட்டமைப்புடன் இணக்கத்தன்மை ஆகியவையும் இதில் அடங்கும். மின்னூர்திப் பயனர்கள் தங்கள் ஊர்திகளை வசதியாகவும் திறமையாகவும் மின்னேற்றம் செய்வதை உறுதி செய்வதே இலக்காகும். இந்த ஊர்திகள் பரவலாகப் பயனுக்கு வருவதை ஊக்குவிக்க இது அவசியம்.

மின்கலம் செயல்திறன் 

AIS 156 சான்றிதழ் மின்கலத்தின் செயல்திறனுக்கான கடுமையான அளவுகோல்களை அமைக்கிறது. இதில் திறன், ஆயுட்காலம், வெப்ப நிலைத்தன்மை, மின்னேற்ற மேலாண்மை ஆகியவை அடங்கும். இந்தத் தரநிலைகளைக் கடைபிடிப்பதன் மூலம், உற்பத்தியாளர்கள் தங்கள் மின்னூர்திகள் போதுமான ஓடுதூரம், நீண்ட கால ஆயுள், நிலையான செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதை உறுதி செய்கின்றனர்.

பாதுகாப்பில் பயனரின் பங்கு

பயன்பாட்டில் இல்லாத போது அனைத்து மின்னேற்ற சாதனங்களையும் சிறுவர்களுக்கு எட்டாதவாறு வைக்கவேண்டும். தயாரிப்பாளரின் பராமரிப்பு வழிகாட்டுதல்களின்படி உங்கள் மின்னேற்ற நிலையத்தின் சாதனங்களைப் பராமரிக்க வேண்டும். அதிகப்படியான தேய்மானங்களின் அறிகுறிகள் இருந்தால் மின் அதிர்ச்சி இடரைக் குறிக்கலாம். சேதத்தின் வெளிப்படையான அறிகுறிகள் இருந்தால் மின்னேற்றியை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

மின்னூர்திகள் ஏன் சில சமயம் தீப்பிடிக்கின்றன? 

மின்கலம் அதிகம் சூடாவதும் மின்கசிவுகளும்தான் மின்னூர்திகள் தீப்பிடிக்க முக்கிய காரணங்கள். விபத்து ஏற்பட்டு மின்கலம் சேதமடைந்தாலும், மின்கலத்தில் தண்ணீர் புகுந்தாலும் கூட தீப்பிடிக்க வாய்ப்புண்டு.

AIS 048 மின்னூர்திப் பாதுகாப்புத் தரநிலை

AIS 048 என்பது ஒரு மின்னூர்திப் பாதுகாப்புத் தரநிலையாகும். மின்கலத்தில் ஒரு ஆணி ஏறினால் ஏற்படக்கூடிய மின்கசிவை (short circuit) உருவகப்படுத்துவதே இதில் முக்கிய சோதனையாகும். முழுமையாக மின்னேற்றிய மின்கலத்தில் ஒரு இரும்புக் கம்பியைச் செருகி சோதனை செய்வார்கள். தீப்பிடிக்கக் கூடாது, வெடிக்கக் கூடாது, கூறுகள் உருகிவிடவும் கூடாது.

நன்றி

  1. Everything you need to know about the safety of an Electric vehicle

இத்தொடரில் அடுத்த கட்டுரை: சறுக்குப்பலகை அடிச்சட்டகம்

சறுக்குப்பலகை அடிச்சட்டகம் (Skateboard Platform). உற்பத்திக்கான சிக்கலையும் செலவையும் குறைக்கிறது. புவியீர்ப்பு மையம் (center of gravity) தாழ்வாக இருக்கும். மோதலில் மின்கலத்துக்குப் பாதுகாப்பு.

ashokramach@gmail.com

%d bloggers like this: