எளிய தமிழில் Car Electronics 16. மின்னணு இயக்கத் தடுப்பி

கம்பிகளை நேரடியாக இணைத்துப் பழைய கார்கள் திருட்டு

எரியூட்ட சுவிட்சின் (Ignition switch) பின்னால் மின்கலத்திலிருந்து ஒரு கம்பி வரும், மற்றொரு கம்பி  ஓட்டத்துவக்கும் மோட்டாருக்குச் (Starter motor) செல்லும். அந்தக் காரின் சாவியை வைத்துக் காரின் பொறியை (Engine) ஓட்டத்துவக்கினால் இந்தக் கம்பிகள் இரண்டையும் மின் சுற்று (circuit) உள்ளுக்குள் இணைக்கும். உடன் பொறி ஓடத் துவங்கும். சாவியில்லாமல் காரைத் திருட முயல்பவர்கள் இந்த இரண்டு கம்பிகளையும் மானிப்பலகையின் (dashboard) பின்புறமாகக் கழற்றி நேரடியாக இணைக்க (Hot wiring) முயல்வார்கள்.

திருட்டைத் தவிர்க்க மின்னணு இயக்கத் தடுப்பி (Electronic Immobilizer)

Electronic-Immobilizer

கார் மின்னணு இயக்கத் தடுப்பி

இன்றைய ஊர்திச் சாவிகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை.  ஒரு கம்பியில்லாத அலை செலுத்துவாங்கி (transponder) இந்தச் சாவிகளின் ஒரு அங்கமாகும். இது காரில் சாவி இருக்கும்போது ஊர்தியின் இயக்கத் தடுப்பிக்குக் கடவுக்குறியீட்டை (encrypted pin) அனுப்பும். காரின் பொறியைத் துவக்குவதற்கு சாவி அனுப்பும் குறியீடும் இயக்கத் தடுப்பியின் குறியீடும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் காரின் பொறியைத் துவக்க இயலாது. 

சில பாகங்களை முடக்குவதன் மூலம் இயக்கத் தடுப்பி செயல்படுகிறது

ஊர்திகளின் இயக்கத்திற்கு உதவும் இரண்டு அல்லது மூன்று பாகங்களை முடக்குவதன் மூலம் இயக்கத் தடுப்பி செயல்படுகிறது. இந்த பாகங்கள் எரிபொருள் அமைப்பு, எரிபற்றல் மற்றும் துவக்கும் மோட்டார் ஆகும். சில கார்களில் ஒன்றுமே நடக்காது, மற்றவற்றில் பொறி திரும்பும் ஆனால் ஓடத் துவங்காது. பொறியைத் துவக்கத் தவறான குறியீடு பயன்படுத்தினால், பெரும்பாலான இயக்கத் தடுப்பிகள் எச்சரிக்கை ஒலி தரும். இவ்வாறாக இந்தச் சாதனம் நேரடியாகக் கம்பிகளை இணைத்தல் வழியாகக் கார் திருடர்கள் ஊர்தியின் பொறியைத் துவக்குவதைத் தடுக்கிறது.

இன்றைய திருடுதல் தவிர்ப்பு அமைப்புகள் மிகவும் கடினமானவை. மறைகுறியீடு (encryption) மற்றும் அடிக்கடி மாறும் குறியீடுகளைப் (rolling codes) பயன்படுத்துகின்றன. இதனால் குறியீட்டை எளிதில் திருட முடியாது.

பெரும்பாலான புதிய ஊர்திகள் இயக்கத் தடுப்பி பொருத்தியே வருகின்றன.  காரின் உரிமையாளராகிய நீங்கள் அதைச் செயல்படுத்த மெனக்கெடத் தேவையில்லை. அது தானாகவே செயல்படுகிறது. எச்சரிக்கை ஒலியெழுப்பக்கூடிய சாதனங்களைவிட இயக்கத் தடுப்பி கார் திருடு போகாமல் நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் பல கார் காப்பீட்டு நிறுவனங்கள் இவை பொருத்தப்பட்ட ஊர்திகளுக்குத் தள்ளுபடியை வழங்குகின்றன.

இந்த அமைப்பில் உள்ள சில சிக்கல்கள்

இந்த அமைப்பில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், ஊர்திச் சாவிகள் அதிக விலை கொண்டவை. மேலும் சாவி தொலைந்து போனால் மாற்றுவதற்குச் செலவு அதிகம் மட்டுமல்லாமல் காரை இழுத்துக்கொண்டு பணிமனைக்குச் செல்ல வேண்டி வரும்.

ஊர்தி ஓடும்போது சாவி இல்லாவிட்டால் எச்சரிக்கை சமிக்ஞையும் ஒலியும் வரும், ஆனால் கார் தொடர்ந்து இயங்கும். ஏனெனில் உங்கள் சாவியின் மின்கலத்தில் மின்சாரம் முழுவதும் வடிந்துவிட்டால் நெடுஞ்சாலையில் வண்டி நின்று பிரச்சினை ஆகும் அல்லவா? ஆனால் பொறியை நிறுத்தினால் திரும்பவும் துவக்க இயலாது. சாவியின் மின்கலத்தில் மின்சாரம் குறைந்துவிட்டது என எச்சரிக்கை வந்தால் உடன் மின்கலத்தை மாற்றிவிடுங்கள்.

நன்றி

  1. All You Ever Wanted To Know About Engine Immobilizers

இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

பிணையமும் (network) உட்பிணையமும் (bus). பிணையங்களுக்கு நெறிமுறை (protocol) அவசியம். ஊர்திகளில் பயன்படுத்தப்படும் சில நெறிமுறைகள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: