எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது எலக்ட்ரானிக்ஸ் துறையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் சில வதந்திகளை பற்றி தான்.
அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
kaniyam.com/category/basic-electronics/
பொதுவாகவே, அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தான் தரமானதாக இருக்கும்! எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. உண்மையிலேயே, 90களில் விற்கப்பட்ட எலக்ட்ரிக்கல் சாதனங்கள் தற்போதைய பொருளாதாரத்தோடு ஒப்பிடும்போது அதிக விலையிலேயே விற்கப்பட்டன.
என்னுடைய வீட்டில் 1994 ஆண்டு வாங்கப்பட்ட, தொலைக்காட்சி பெட்டியின் அப்போதைய விலை ரூபாய் 6500.
அதே 6500 ரூபாய்க்கு, அன்று அதிகபட்சமாக 15 கிராம் தங்கம் வாங்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இத்தனைக்கும் அந்த தொலைக்காட்சி பெட்டியில் 20 இன்ச்சுக்கும் குறைவான திரை தான் வழங்கப்பட்டிருந்தது. தற்பொழுது குறிப்பிடுவது போல, எச்டி 4k, டால்பி என விதவிதமான பெயர்கள் எல்லாம் அப்போதைய தொலைக்காட்சி பெட்டிகளில் இருந்ததில்லை.
கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியின் விலை தான் 6500. அதுவே, கலர் தொலைக்காட்சி பெட்டி வாங்க வேண்டும் என்றால் 10,000 ரூபாயை கடந்திருக்கும் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.
ஆனால், தற்காலத்தில் விலைக்கும் தரத்திற்கும் இடையேயான விகிதாச்சாரம் பெருமளவில் மாறுபடுகிறது. தற்காலத்தில், இருக்கக்கூடிய விலை மலிவான எலக்ட்ரானிக் பொருட்கள் கூட அதிகப்படியான நாட்கள் வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.
கவர்ச்சியாக தொலைக்காட்சிகளில் விளம்பரம் காட்டப்படும், எலக்ட்ரானிக் பொருட்கள் உண்மையிலேயே அந்த விலைக்கு சரியானதா? என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகிறது.
உதாரணமாக, ஒரு லேப்டாப் தயாரிக்க பத்தாயிரம் ரூபாய் ஆகிறது எனில், அதில் நிறுவன மேம்பாடு,விளம்பரம், அரசாங்க வரிகள் மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பார்கள்.
அதே போன்ற, ஒரு லேப்டாப்பை பெரியதாக விளம்பரம் செய்யாத நிறுவனம் 20,000 கீழே கூட விற்க முடியும்.
எனவே, நீங்கள் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கும் போது அவை உண்மையிலேயே நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்புடையதா? என்று பார்த்து வாங்குங்கள். அதிக விலை கொடுப்பதால் நீடித்த தரம் இருக்கும் என்பதெல்லாம், அந்த காலத்தோடு கடந்து சென்று விட்டது.
அடுத்ததாக, நம் அனைவரிடமும் தொற்றிக் கொண்டிருக்கும் காலாகாலமான பழக்கம் தான் டிவி ரிமோட்டுகளை அடித்தே சரி செய்வது, இதே போல,லேப்டாப்கள்,கம்ப்யூட்டர்கள் மற்றும் இன்ன பிற எலக்ட்ரானிக் பொருட்களை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் போல பஞ்ச் கொடுத்து சரி செய்யும் நண்பர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.
தற்காலத்தில் இருக்கக்கூடிய, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் எளிதில் உடையக்கூடியவை.மேலும், அதிகப்படியான கண்ணாடி நூல் இழைகள்(glass fibers) பயன்படுத்தப்படுகின்றன. தவறுதலாக, இந்த கண்ணாடி நூல் இழைகள், உங்களுடைய விரல் நகங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டால் பின்னாலில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மேலும், பேட்டரியுடன் கூடிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இவ்வாறு அதிக அழுத்தம் கொடுக்கும் போது, வெடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய வெள்ளத்தில் சிக்கினாலும், பொருளை வெயிலில் காய வைத்து எடுத்தால் போதும்! நன்றாக வேலை செய்யும் எனும் நம்பிக்கை இன்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையை சுற்றி வருகிறது.
அடிப்படையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நேரடியாக சூரிய ஒளியில் வைப்பது பழுதுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
மேலும், பேட்டரி போன்ற சாதனங்கள் எளிதில் தீப்பிடித்து வெடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
நான் பேட்டரியை தவிர மீதமுள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வெயிலில் வைக்கலாமே! என்று நீங்கள் சொன்னால், பேட்டரியோடு ஒப்பிடக்கூடிய, மின் தேக்கிகளும் (capacitors) எலக்ட்ரானிக் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை, உங்கள் கண்களில் புலப்படுவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு.
எனவே கதிரவனின் ஒளியில் அமர்ந்தால், மனிதர்களுக்கு வேண்டுமானால் விட்டமின் சத்துக்கள் கிடைக்கலாம்! எலக்ட்ரானிக் கருவிகளுக்கு,அது பாதகமாகவே அமையும்.
மற்றும் ஒரு பிரபலமான வதந்தி ஆப்பிள் போன்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது! என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆம்! உண்மையிலேயே ஆப்பிள் போன் மட்டுமல்ல! 50 ரூபாய்க்கு கிடைக்கும் விளையாட்டு ஃபோன்களில் கூட தங்கம் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
குறை கடத்தித் துறையில் தங்கமும் பயன்படுத்தப்படுகிறது. விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில், மா சூட்டலுக்காக குறிப்பிட்ட அளவு தங்கம் பயன்படுத்தப்படலாம்! விலை குறைந்த எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் கூட அவற்றின் தேவைக்கு ஏற்ப, விலைக்கு ஏற்ப தங்கம் பயன்படுத்தப்படலாம்.
அதற்காக, ஆப்பிள் போனில் இருக்கும் தங்கத்தை எடுத்து புதியதாக ஆடி கார் எல்லாம் வாங்கி விட முடியாது.
ஒரு கிராம் அளவிலான தங்கத்தை பிரித்து எடுப்பதற்கு உங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மேலும், அதற்கு சில நேரங்களில் நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள் கூட தேவைப்படும்.
சரி! கட்டுரையின் இறுதி பகுதியை நெருங்கி விட்டோம். கடைசியாக, மொபைல் போன் கேமராக்களில் குறிப்பிடப்படும் மிக முக்கியமான வதந்தியை தான் கவனிக்க வருகிறோம்.
அதிக கேமராக்கள் இருந்தால், படம் தெளிவாக தெரியும். அதிக மெகாபிக்சல்(mega pixel) என குறிப்பிடப்பட்டிருந்தால், எடுக்கப்பட்ட புகைப்படம் நாசா சேட்டிலைட்டுக்கு இணையாக இருக்கும். என்றெல்லாம், தொலைக்காட்சியில் விளம்பரம் வந்து பார்த்திருப்பீர்கள்.
கேமரா லென்ஸ் அளவு, அது தயாரிக்கப்பட்டு இருக்கக்கூடிய மூலப் பொருட்கள் மற்றும் கேமராவில் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய சென்சார் ஆகியவற்றின் அடிப்படையில் புகைப்படத்தின் தரம் தீர்மானிக்கப்படுகிறது
விளம்பரத்திற்காக, ஒன்றல்ல இரண்டல்ல போனுக்கு பின்னால் 20 கேமராவை கூட வைப்பார்கள்.
இவ்வளவு நாள், பார்த்த கட்டுரைகளிலேயே சற்றே வித்தியாசமாக இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com