எளிய தமிழில் Electric Vehicles 27. மின்னூர்திகளின் தரநிலைகள்

By | November 16, 2024

வண்டியை வாங்குவதற்கு முன் அதன் திறன் (power), முறுக்கு விசை (torque), முடுக்கம் (acceleration), ஓடுதூரம் (range) பொன்ற பல விவரங்களைக் குறிப்பாகப் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவரவர் வழியில் சோதனை செய்து வெளியிட்டால் உங்களால் இவற்றை ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. இவற்றைப் பொதுவாகச் சோதிக்கும் செயல்முறைகள் தேவை. மேலும் சார்பற்ற மையம் ஒன்று சோதனை செய்து அறிக்கை வெளியிட்டால்தான் வாங்குபவர்களுக்கு நம்பத்தக்கதாக இருக்கும். 

இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (Automotive Research Association of India – ARAI)

தானுந்து தொழில்துறைக்கு சேவைகளை வழங்க இந்தக் கூட்டுறவு தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்திகளையும் ஊர்தி பாகங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இந்திய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை சேர்ந்து இந்தக் கழகத்தைப் புனேயில் (Pune) அமைத்துள்ளனர். இவர்கள் தானுந்துகளுக்குத் தரநிலைகளைத் (Standards) தயாரித்து வெளியிடுவது, சோதனைகள் செய்து அறிக்கை கொடுப்பது, சான்றளிப்பது (certification) போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.

ஓடுதூரம் சோதிக்கும் செயல்முறை 

மாற்றியமைத்த இந்திய ஓட்டும் சுற்று (Modified Indian Driving Cycle – MIDC) என்பது மின்னூர்திகளின் ஓடுதூரம் (range) சோதிக்க ARAI வெளியிட்டுள்ள ஒரு செயல்முறையாகும். இது நகரங்களில் நாம் போக்குவரத்தில் ஓட்டுவதற்கு ஒத்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தயாரிப்பாளர்களின் ஊர்திகளையும் இதன்படி ARAI சோதனை செய்து அறிக்கையை வெளியிடுகிறது. 

ஊடுருவல் பாதுகாப்பு (Ingress Protection – IP) உறைகள்

Ingress-protection

தூசி, நீர் ஊடுருவல் பாதுகாப்பு

நீர் அல்லது தூசி கசியும் போது மின்சார சாதனங்களும் மின்னணு சாதனங்களும் பழுதடைகின்றன அல்லது முற்றிலும் செயலிழந்தே போகின்றன. கசிவுப் பாதுகாப்பு (Ingress Protection – IP) மதிப்பீடுகளைப் பன்னாட்டு மின் தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission – IEC) உருவாக்கியுள்ளது, இது தூசி அல்லது திரவங்களின் ஊடுருவலுக்கு எதிராக ஒரு உறை கொடுக்கும் பாதுகாப்பைத் தரப்படுத்துகிறது. முதல் எண் தூசி போன்ற திடப்பொருட்களுக்கு எதிரான பாதுகாப்பைக் குறிக்கிறது. 0 என்றால் பாதுகாப்பே இல்லை, 6 என்றால் தூசி அறவே நுழையாது. இரண்டாவது எண் திரவங்களுக்கு எதிரான பாதுகாப்பைக் குறிக்கிறது. 0 என்றால் பாதுகாப்பே இல்லை. 7 என்பது 30 நிமிடங்களுக்கு 1 மீட்டர் ஆழம் வரை தண்ணீரில் மூழ்கினாலும் கசியாத பாதுகாப்பு. இதன்படி ARAI சோதனை செய்து சான்றிதழ் கொடுக்கிறது.

நன்றி

  1. Body Control Module (BCM) in Automotive Industry

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்கலத்தை மாற்றீடு செய்தல்

எரிவாயு உருளையைப் போல் மின்கலத்தையே மாற்றீடு செய்தல் (swapping). இந்த சேவைக்குக் குறைந்த அளவு இடமே தேவைப்படும். அதிவேக மின்னேற்றம் செய்யவேண்டியதில்லை. ஒரு சேவையாக மின்கலம் (Battery as a Service). மின்னூர்தித் தொகுதிகள் (fleets).

ashokramach@gmail.com