தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் காரைக்குடி கிளையின் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4 வது சனிக்கிழமை மகரிக்ஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 10 2018 ல் நடைபெற்ற நிகழ்வில் ‘தமிழும் தொழில்நுட்பமும்’ என்ற தலைப்பில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. கணியம் அறக்கட்டளை சார்பாக லெனின் மற்றும் பாலபாரதி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கு கணினியில் ஒருங்குறியின் முக்கியத்துவம், தமிழ் விக்கிபீடியா, விக்கிமூலம் மற்றும் FreeTamilEbooks பற்றிய அறிமுகமும் அதன் முக்கியத்துவமும் விளக்கப்பட்டது. இது தவிர ஒரு எழுத்தாளர் தாங்கள் படைக்கும் படைப்பை வெளியிடுவதற்கு ஏற்படும் சிரமத்தையும், அதனை தவிர்த்து எப்படி தாங்களே தங்கள் படைப்புகளை வலைப்பூக்களிலும், மின்னூல்களாகவும் வெளியிடயிருக்கின்ற எளிய வாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. பாலபாரதி தன்னுடைய முதல் நூல் FreeTamilEbooks தளத்தில் வெளியிட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் முடிவில் எழுத்தாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தாங்கள் எழுதிய ஏற்கனவே வெளியிட்ட நூல்களை மின்னூல்களாக வெளியிட ஆர்வம் தெரிவித்து சில நூல்களையும் வழங்கினர். இனி வரும் நிகழ்வுகளில் இன்னும் இது பற்றிய விரிவான உரையாடல்களை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.