வீட்டில் இருந்து வேலை செய்தல் – சில குறிப்புகள்

தற்போது உள்ள கொரோனா காலத்தில், உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யக் கோருகின்றன. இது மிகவும் நல்ல செய்தி தான். அலுவலகத்துக்குப் போய் மட்டுமே வேலை செய்தோருக்கு இது மிகவும் புதிதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த மகிழ்ச்சி நிலைக்க, கீழே உள்ளவற்றை பின்பற்றுக.

எல்லா வேலைகளுமே வீட்டில் இருந்து செய்ய உகந்தவை அல்ல. நிரலாக்கம் தொடர்பான பணிகள், இணையம் வழியே தொடர்பு கொள்ளக்கூடிய பணிகள் என வெகு சில பணிகளே உகந்தவை.

வீட்டில் இருந்து வேலை என்பது பல நிறுவனங்கள், பணியாளர்கள், மேலாளர்கள், வாடிக்கையாளர்களுக்குமே மிகவும் புதிது.

வீட்டில் இருந்து வேலை என்பது ஒரே நேரத்தில் வரம். சாபம்.

வீட்டில் இருந்து வேலை என்பது எளிதாகத் தோன்றும். ஆனால், அலுவலகத்தை விட மிக அதிகமாக வேலை செய்ய நேரிடும். மிக அதிக கவனமும், ஒழுக்கமும் தேவைப்படும்.

எனது தற்போதைய, முந்தைய நிறுவனங்கள், எனக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கின. பல்வேறு தவறுகள் செய்து, பல அனுபவங்கள் பெற்றேன். இவற்றை முன்பே யாராவது சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். (நிச்சயம் எனது உடன் பணிபுரிந்தோர் சொல்லியிருப்பர். அதையெல்லாம் கேட்டு நடக்கவில்லை. பட்டுதான் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது எனக்கு.)

அதி தீவிர ஒழுக்கம்

வீட்டில் இருந்து மிக வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் வேலை செய்ய அதி தீவிர இராணுவ ஒழுக்கம் தேவைப்படுகிறது. பெரும்பாலும் வீட்டில் ஓய்வாக இருந்தே பழகி விட்டோம். சுற்றிலும் குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், தொலைக்காட்சி என கொண்டாட்டம் சூழ்ந்த வீட்டில், நமக்கு வேலை செய்ய தனி அறை இருக்காது. இச்சூழலிலும் நெடு நேரம் பணிபுரிய அதிக ஆற்றலும், ஒழுக்கமும், கவனமும் தேவை.

சூழல் எப்படி இருந்தாலும், வேலைக்காக கணினியைத் திறந்தவுடன், பணி முடியும் வரை அதில் மூழ்கி விட வேண்டும்.

மேசை, நாற்காலி

அலுவலகத்தில், நல்ல மேசை, நாற்காலிகள் இருக்கும். ஆனால் வீட்டில், படுத்துக் கொண்டும், கட்டில், சோபாவில் அமர்ந்து கொண்டும் வேலை செய்வோம். மடிக்கணினியை மடியில் அல்லது தலையணை மேல் வைத்துக் கொள்வோம். அதிக நேரம் இந்த நிலையில் இருப்பது தவறு. அடிக்கடி அல்லது நீண்ட நாள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் எனில், நல்ல மேசை, நாற்காலி, 21 அங்குல மானிட்டர், வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ் ஆகியவற்றை வாங்குவது உடல், மன நலத்துக்கு நல்லது. இவற்றால் மருத்துவனை அலைச்சல், மன உளைச்சல்களைத் தவிர்க்கலாம்.

வேலை நேரம்

வேலை செய்யும் நேரத்தை மிகவும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அலுவலகத்துக்கு உள்ளே போகும் நேரமும் வெளியேறும் நேரமும் தினமும் ஒன்றாக இருக்கும். இதனால், குறிப்பிட்ட அளவான பணிகளை தினமும் செய்து முடிப்போம். ஆனால், வீட்டில் எழுந்நவுடன் கணினி, இடையில் பல்வேறு இடைஞ்சல்கள், இரவு தூங்கும் வரை கணினி என்று இருப்போம். இது மிகவும் ஆபத்தில் போய் முடியும். எனவே வீட்டிலும் கணினியை தொடங்கி, நிறுத்தும் நேரத்தையும், வேலை செய்யும் நேரத்தையும் தீவிர ஒழுங்குடன் பேண வேண்டும். 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டாம். கணினியை கூடிய விரைவில் நிறுத்தி விட்டு, பிறகு வீட்டில் மகிழ்ச்சிகளை அனுபவியுங்கள்.

கவனச்சிதறல்கள்

வீட்டில் இருக்கும் போது குழந்தைகள் விளையாட அழைப்பர். வீட்டில் உள்ளோர் கடைக்கு போய் வரச் சொல்வர். தொலைக்காட்சியில் நல்ல படமோ, தொடரோ ஓடும். பக்கத்து வீட்டினர் சிரித்து பேசிக்கொண்டிருப்பர். எதிலும் மாட்டி விடக்கூடாது. உங்கள் வேலை நேரத்தை அனைவருக்கும் முன்பே அறிவித்து விடுங்கள். அந்த நேரத்தில் கண்டிப்பாக நீங்கள் வேலை தவிர வேறு எதையும் செய்ய மாட்டீர்கள் என்று உறுதியாக சொல்லி விடுங்கள்.

வேலை நேரத்துக்குப் பின்னர், அவர்களை கவனியுங்கள். அவர்களுக்கு உங்கள் முழு கவனத்தையும், நேரத்தையும், அன்பையும் முழுதாய்க் கொடுங்கள்.

இவ்வாறு செய்யத் தவறினால், வேலை நேரத்தில் பிற பணிகளை செய்து அவர்களை மகிழ்வித்து விட்டு, இரவெல்லாம் வேலை செய்வீர்கள். இது உங்களின் பணித்திறனை பெரிதும் பாதிக்கும்.

உங்கள் குழுவினருடம் எப்போதும் தொடர்பில் இருங்கள்

உங்கள் குழுவினர் அலுவலகத்திலோ, உலகெங்கும் பரவியோ இருக்கலாம். அவர்களிடம் வேலை நேரத்தில் எப்போதும் தொடர்பில் இருங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அறிவித்துக் கொண்டே இருங்கள். மின்னஞ்சல், மடலாடற் குழு, சாட், தொலைபேசி, வீடியோ சான், இஸ்யூ டிராக்கர் என்று உங்கள் குழு எதைப் பயன்படுத்துகிறதோ, அவற்றையெல்லாம் பயன்படுத்துங்கள். உங்கள் பணிகளை அவ்வப்போது அறிவித்துக் கொண்டே இருங்கள். இது உங்கள் மீதான நம்பிக்கையை பெரிதும் அதிகரிக்கும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரியாமல், நீங்கள் மறைந்து வாழ்ந்தால், எதிர்காலம் இருண்டு போகும். ‘நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று உங்களைப் பார்த்து யாரும் கேட்டு விடவே கூடாது.

தினசரி சந்திப்புகள்

குழுவினருடன் பணிகளைப் பற்றி தினமும் பேசுங்கள். status calls, sprint calls, daily calls என பலவித சந்திப்புகள் இருக்கும். அவற்றில் தவறாது இணையுங்கள். உங்களால் கலந்து கொள்ள முடியாமல் போனால், முன்னரே சொல்லி விடுங்கள். உங்கள் விடுமுறைகள், கடைக்குப் போதல், உணவு இடைவேளைகளை தவறாமல் சொல்லுங்கள். ஏதேனும் சந்தேகங்களுக்கு குழுவினரை தொலைபேசியில் அழையுங்கள், வீடியோ சாட்டில் திரையைப் பகிர்ந்து விவாதியுங்கள்.

தினசரி நடவடிக்கைகளை தனியே எழுதுக

நீங்கள் செய்யும் பணிகளை தினமும் தனியே எழுதி வையுங்கள். தினமும் குழுவினரிடம் பகிருங்கள்.

நேரவலயக் கணக்கீடுகள்

உங்கள் குழு, உலகெங்கும் பரவி இருந்தால், நேர வலயக் கணக்கீடுகளை தெரிந்து கொள்க.  AM,PM, GMT, day light savings போன்றவை மிகவும் முக்கியம்.

நாட்காட்டி மென்பொருளைப் பயன்படுத்துக

உங்கள் பணிகள், சந்நிப்புகளை மறக்காமல் இருக்க, நாட்காட்டி மென்பொருளில் எழுதி வையுங்கள். அலுவலகம் எனில் சந்திப்புகளுக்கு, பிறர் போகும் போது, நாமும் கும்பலில் ஒருவராகப் போவோம். வீட்டில் தனியே அவற்றை எளிதில் மறப்போம். எனவே நாட்காட்டியில் எழுதி, ரிமைண்டர் போட்டு வையுங்கள்.

சந்திப்புகளில் அமைதி காக்கவும்

இணைய வழி சந்திப்புகளில், ‘அமைதி/மியூட்/mute’ நிலையில் எப்போதும் இருங்கள். நீங்கள் பேசும் போது மட்டும் அவற்றை நீங்கி, பேசிவிட்டு, பின் அமைதி நிலைக்கு செல்க. இது பல்வேறு குழப்பங்களைத் தவிர்க்கும்.

நல்ல இணையம், பிற வசதிகளை வாங்குக

நல்ல வேலைத்திறனுக்கு, அகலக்கற்றை இணையம்(broadband) மிக அவசியம். மொபைல் இணையத்தைப் பகிர்வுது பயன்தராது. முக்கியமான நேரத்தில் மொபைல் இணையம் கைவிடலாம். UPS, Generator, Power Backup, Mic, Speaker, headphone, நல்ல கணினி இவற்றை வாங்குவது, பல சிக்கல்களைத் தீர்க்கும்.

ஒரே இணையத்தை வீட்டில் உள்ள ஸ்மார்ட் டீவி, தொலைபேசிகள், பக்கத்து வீட்டுகளுக்கு பகிர்கிறீர்கள் எனில் அதிக bandwidth ஐ வாங்குக. இந்தக் கருவிகள், இணையத்தை மொத்தமாக உறிஞ்சி காலி செய்ய வல்லவை. உங்கள் இணையப் பயன்பாட்டை அடிக்கடி கண்காணித்து வருக.

உடல் நலம் பேணுக

எப்போதும் கணினி முன்பே அமர்ந்து இருந்தால், குண்டுத் தக்காளி போல ஆகிவிடுவோம். ஒரு மணிக்கொருமுறை, சிறு நடை செல்க. தவறாமல் தினமும் உடற் பயிற்சி செய்க. ஓட்டம், நடை, நடனம் என எதையாவது செய்க. இவை உங்கள் கவனம்,வேலைத்திறனை அதிகரிக்கும்.

தூக்கம்

8 மணி நேர இரவுத் தூக்கம் அதி முக்கயம். இதை பல்வேறு உடல், மன, பணிச் சிக்கல்களை வராமலே தடுத்துவிடும்.

உங்களுக்கு உகந்த நேரம் எது?

எல்லோருக்குமே 9-5 என்பது சிறந்த நேரமாக இருப்பதில்லை. சிலர் இரவுப் பறவைகளாக இருப்பர். உங்களுக்கு உகந்த நேரத்தை அறிந்து, அந்த நேரத்தில் முக்கியமான வேலைகளை செய்யுங்கள். உகந்தநேரத்தை குழுவினருக்கு அறிவித்துவிடுங்கள்.

வேலை நேரத்தில் வேலை மட்டுமே செய்க

வேலை நேரத்தில் எல்லா சமூக வலைத்தளங்கள், இணைய செயலிகளை தவிருங்கள். இல்லையேல் இணைய போதைக்கு அடிமையாகிப் போவீர்கள்.

மனிதர்களோடு பேசுங்கள்

வேலைகளை விரைவில் முடித்துவிட்டு, வீட்டில் உள்ளோரிடம் பேசுங்கள். வெளியே போங்கள். கணினியை விட மனிதருடன் பழகும் நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.

வேலையில் திறமைசாலியா நீங்கள்?

உங்கள் வேலையில் திறமைசாலியாக இருங்கள். நிறையப் படியுங்கள். அடிப்படையான விசயங்கள் அனைத்தையும் பயிற்சி செய்யுங்கள். அதிகத் திறமை இருந்தால், குறைந்த நேரத்தில் வேலைகளை முடித்து விடலாம். கவனக் குறைவால் செய்த. சின்ன தவறுகளைக் களைய, நான் பல இரவுகளை இழந்துள்ளேன். ஒரு சிறு பிழை கூட அதிக நேரத்தைத் தின்று விடும்.

சுத்தம்

மேசையில் பழத்தோல்கள், சாப்பிட்ட தட்டுகள், காகிதங்கள், குப்பைகள் இருக்கவே கூடாது. உடனுக்குடன் மேசை, அறையை சுத்தம் செய்து விடுங்கள்.

குறைவான உணவு, அதிகத் தண்ணீர்

வீட்டில் உள்ளோர் அன்பின் மிகுதியை, அதிகமான உணவில் திணிப்பர். மேலும் நொறுக்குத்தீனிகளுக்கும் நிறைந்திருக்கும். ‘ஜ. சுடச்சுட வீட்டு சாப்பாடு’ என்று அலையாமல், உணவைக் குறைத்து, தண்ணீர் நிறையக் குடிப்பது மிகவும் அவசியம்.

வீடு மிக முக்கியம்

வீட்டில் உள்ளோருடன் மகிழ்ச்சியாக வாழவே நாம் வேலை செய்கிறோம். அவர்களுக்கான நேரத்தை திருடி வேலை செய்யாதீர்கள். வேலையோ, வீடோ, நேரத்தை முழுதாய்க் கொடுங்கள். உங்களுக்கான பொழுதுபோக்கு,உங்களுக்கான நேரம் என தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

திரையை பூட்டி, வெளியே செல்லுங்கள்

எனது மகன் வியன், நான் கணினியில் இல்லாத போது, பல சேட்டைகள் செய்துள்ளான். குழுவினருக்கு தாறுமாறாக சாட் செய்திகள் அனுப்பியுள்ளான். வீடியோ சாட்டில் அவனே பேசியுள்ளான். டெர்மினலில் up arrow அழுத்தி, சில சர்வர்களை halt செய்துள்ளான். rm கட்டளை இயக்கியுள்ளான். நல்லவேளை. அந்த சர்வர்கள் என் சொந்த சர்வர்கள். பணிக்கானவை அல்ல.

கணினியை விட்டு விலகும் போது, மறக்காமல், திரையை பூட்டுக.

நம்பிக்கை. அதானே எல்லாம்.

வேலை செய்கிறீர்களோ இல்லையோ, அதை குழுவினருக்கு அறிவியுங்கள்.  எப்போதும் உண்மையை சொல்லுங்கள். உங்கள் மீதான நம்பிக்கையை உங்கள் மூலதனம். இந்த நம்பிக்கையை உங்கள் நிறுவனத்தில் அனைவருக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய வழிவகுக்கும்.விடுமுறை எடுத்தாலோ, கடைக்கு சென்றாலோ, குழுவினருக்கு அறிவியுங்கள். அவர்கள் போன் செய்தால் எடுங்கள். திருப்பி அழையுங்கள்.

நிர்வாகத்தினருக்கு

  1. உங்கள் பணியாளர்களை நம்புங்கள்
  2. அனைவரையும் பிறரை நம்பச் சொல்லுங்கள்
  3. Chat, mail, issue tracker, wiki, knowledge base போன்ற தொடர்பு மென்பொருட்களை பயன்படுத்துங்கள்
  4. ரொம்ப அதிகமாக பணியாளர்களை நோண்ட வேண்டாம்.
  5. தினசரி குழு அழைப்புகளை திட்டமிடுங்கள்
  6. இணையம், மேசை, நாற்காலி. கணினிகளுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்
  7. அடிக்கடி அனைவரையும் வீட்டில் இருந்து வேலை செய்ய வையுங்கள்
  8. வாரம் ஒரு முறையாவது பணியாளருடன் தனியே அழைத்து பேசுங்கள்

ஒட்டு மொத்த குனு/லினக்சு இயக்கு தளமும், அதன் பல்லாயிரம் கட்டற்ற மென்பொருட்களும், உலகெங்கும் உள்ள தன்னார்வலர்களால் வீட்டில் இருந்தே உருவாக்கப்பட்டவை. சரியான பணிக்கொள்கை, கருவிகள் மூலம் எந்த நிறுவனமும் இவற்றை செய்யலாம்.

கொசுறு

ஆரம்ப காலங்களில் மேலே உள்ள எல்லாவற்றையும் நான் பல முறை செய்யத் தவறி உள்ளேன். அவற்றால், வீட்டிலும், அலுவலகத்திலும், உடல் நலத்திலும் பல்வேறு சிக்கல்களை உண்டாக்கினேன். சில ஆண்டுகளாக, மேலே உள்ளவற்றை ஒழுங்காகக் கடைப்பிடித்து, வீடு, வேலை, கணியம் பணிகளை ஒழுங்கே நடத்திச் செல்கிறேன். ஆனாலும் எப்படி ரொம்பவே சொதப்புகிறேன் என்று நித்யாவைக் கேளுங்கள். என்னைவிட என்னை அதிகம் அறிந்தவர் நித்யா. இன்னும் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறன.

என் மேல் கொண்ட நம்பிக்கைக்கு Collabnet, Netcalyx, TVFPlay குழுவினருக்கு நன்றிகள்.

 

த. சீனிவாசன்

tshrinivasan@gmail.com

ஆங்கில மூலம் – goinggnu.wordpress.com/2020/03/14/few-work-from-home-notes/

%d bloggers like this: