நீங்கள் ஒரு நிறுவனத்தின் சரக்கு அல்லது பயணிகள் ஊர்தித் திரளுக்கு (fleet) மேலாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரு விபத்து ஏற்பட்டால் நிறுவனம் தான் பொறுப்பு. மேலும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதும், ஊர்தியின் தேய்மானமும் ஓட்டுநரின் செயல்பாடுகளைப் பொறுத்து உள்ளது. உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே எங்கெங்கோ ஓடும் உங்கள் ஊர்திகளை எல்லாம் எவ்வாறு நீங்கள் கண்காணிக்க முடியும்? இதற்குத் தொலைக்கண்காணிப்புத் (Telematics) தொழில்நுட்பம் உதவி செய்கிறது.
ஓட்டுநர் செலுத்திய பாதை, செயலற்று நிற்கும் நேரம் (idling time), ஓட்டிய வேகம், நிறுத்திய இடம், நேரம் ஆகிய யாவையும் பதிவு செய்யப்பட்டு மேகக் கணினிக்குள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ஊர்திகளை மேலும் பாதுகாப்பாக இயக்குதல்
ஊர்தியை அதிவேகத்தில் செலுத்துதல், ஓட்டும்போது திறன்பேசியில் காணொளிகள் பார்த்தல், உரை அரட்டை செய்தல் (texting) இவையே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இம்மாதிரிப் பிரச்சினைகள் யாவும் தொலைக் கண்காணிப்பில் பதிவாகி விடுவதால் மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். ஆகவே ஓட்டுநர்களும் பாதுகாப்பாக ஓட்டுவார்கள்.
காப்பீடு தொடர்பான செலவுகளைக் குறைத்தல்
ஒரு விபத்து நடந்தால் யார் தவறு செய்தார்கள் என்பதைத் தீர்மானிப்பது சவாலானது. உண்மையிலேயே என்னதான் நடந்தது என்பதை முன்புறக் காணொளிக்கருவி (Dashcam) பதிவு செய்து விடுகிறது. இதன் மூலம் காப்பீடு தொடர்பான செலவுகளையும் குறைக்க முடியும்.
ஊர்தி தொடர்பான மோசடிகளைத் தவிர்த்தல்
ஊர்தியைத் தவறாகப் பயன்படுத்தல், பழுதடைந்து விட்டது என்று கூறி நேரத்தை வீணடித்தல், பெட்ரோல் டீசல் ஆகியவற்றைத் திருடுதல் போன்ற பலவிதமான மோசடிகளில் சில ஊழியர்கள் ஈடுபடக்கூடும். இவற்றையும் தொலைக் கண்காணித்தல் மூலம் தவிர்க்கலாம்.
ஊர்திகளை அரசாங்கக் கட்டுப்பாடுகளின்படி இயக்குதல்
தானுந்து தொழில்துறைத் தரம் 140 (Automotive Industry Standard – AIS-140) படி ஊர்தித் திரள்களுக்கு புவிநிலை காட்டி (GPS) அடிப்படையிலான ஊர்திக் கண்காணிப்பு அமைப்புகள் கட்டாயம் இருக்க வேண்டுமென்று அரசாங்கம் சட்டமியற்றியுள்ளது. நெருக்கடி நிலைப் பொத்தானும் (Panic Button) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பொத்தானை அழுத்தினால் ஊர்தி இருக்குமிடத் தகவல் அவசர சேவையகத்திற்கு உடன் அனுப்பப்படும்.
நன்றி
இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும்!