சில்லுவின் கதை 16. எதிர்காலம் ஒளிமயமாக இருக்க இப்போதே தீயை மூட்ட வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)

17:16 வரை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.

நாட்டிற்குள் புனைதல் ஆலைகள் இருப்பது தேசியப் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்தோம்

17:17 பின்னர் 2021-ல் கோவிட் நம்மைத் தாக்கியது. பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்கியதால், இந்தியா உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், சில்லுகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் விளைவாக ஊர்தித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. புனைவு ஆலைகள் உற்பத்தியை நிறுத்தாதபோதும் இது நிகழ்ந்தது. உண்மையில் அவர்கள் முன்பை விட அதிக அளவில் உற்பத்தி செய்தனர். அப்படியானால் ஊர்திகளுக்கு ஏன் சில்லுகள் பற்றாக்குறை? உற்பத்திக்கு முன்கூட்டியே பாகங்களை வாங்கி வைப்பதில்லை (just-in-time manufacturing) என்ற பரவலான நடைமுறை விநியோகத்தை மிகவும் பாதித்தது. ஊர்திகள் விற்பனையாகவில்லை. அதனால் ஊர்திகளுக்கான சில்லுகளின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. TSMC மற்றும் பிற புனைவு ஆலைகள் நல்ல தேவையில் இருந்த கணினி, திறன் பேசி மற்றும் பிற சில்லுகளை அதிக அளவில் தயாரிக்கத் தொடங்கின. ஆனால் ஊர்திகளுக்கான தேவை மீண்டும் அதிகரித்தபோது, சில்லுகளுக்கான புதிய ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இதன் விளைவாக விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. உலகளவில் ஊர்தித் துறையில் 200 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டது. சில்லு சிறியது, ஆனால் அதன் பற்றாக்குறை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அப்போதுதான் யாவரும் உணர்ந்தனர். மேலும் உள்நாட்டிற்குள் உற்பத்தியின் அவசியம் அனைத்து மட்டங்களிலும் உணரப்பட்டது. தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் உள்நாட்டிற்குள் புனைவு ஆலைகள் மிக முக்கியமானதாக உணரப்பட்டது. அமெரிக்கா CHIPS சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்காவிற்குள் உற்பத்தியை ஊக்குவித்தது இதன் விளைவாகத்தான்.

தைவானை சீனா ஆக்கிரமித்தால் சில்லு விநியோகம் தடைப்படக்கூடும்

20:33 நான் உங்களுக்குச் சீனா மற்றும் தைவானின் வரைபடத்தைக் காட்டினேன், அவை எவ்வளவு நெருக்கமாக உள்ளன, மேலும் குறுகிய தைவான் ஜலசந்தியால் (Taiwan Strait) மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளன என்பதையும் காட்டினேன். நீங்கள் உலகச் செய்திகளைப் பின்பற்றினால், அங்கு நிறையப் போர் விளையாட்டுகள் நடத்தப்பட்டது தெரிந்திருக்கும். அவை பயமுறுத்தும் வகையில் இருந்தன. இவ்வாறு நடப்பதையும், உலகில் 70% சில்லுகள் TSMCயிலிருந்து வருவதையும் பார்க்கும்போது, அனைவரும் தங்கள் விநியோகச் சங்கிலிகள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். சீனா தைவானை ஆக்கிரமித்தால், அவர்களின் விநியோகம் முழுக்க முழுக்க சீனாவின் விருப்பப்படியே இருக்கும். எனவே, அனைவரும் தங்கள் சொந்த நாட்டில் ஒரு புனைவு ஆலையைக் கட்டத் தொடங்கினர். பிரச்சினை என்னவென்றால் புனைவு ஆலைகள் வெற்றிடத்தில் இயங்கும் அமைப்புகள் அல்ல. பல நிறுவனங்களையும், பல நாடுகளையும் சார்ந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, EUV கருவியை உலகிலேயே நெதர்லாந்தின் ASML மட்டுமே தயாரிக்கிறது. எனவே, வினியோகத்துக்கு நெருக்கடி தரக்கூடிய இடங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இதன் விளைவாக, “நான் எல்லாவற்றையும் உள்நாட்டிற்குள் கொண்டு வருவேன், எனக்குப் பிரச்சினையே வராது” என்று நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது.

வெறும் புனைதல் ஆலை மட்டுமல்லாமல் நாம் முழு குறைக்கடத்தி கொள்முதல் தொடரிலும் கவனம் செலுத்துகிறோம்

22:00 அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw), மத்திய அரசின் குறைக்கடத்தி இலாகாவைக் கையாளும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (MEITy) அமைச்சராக உள்ளார். இப்போது முழு அரசாங்கமும் நம் குறைக்கடத்தி உற்பத்தித் திட்டத்திற்குப் பின்னால் உள்ளது. நம் அரசாங்கத்தின் அணுகுமுறையில் நான் மிகவும் விரும்புவது என்னவென்றால், புனைவு ஆலை என்பதை விட, நாம் முழு குறைக்கடத்தி கொள்முதல் தொடரிலும் (supply chain) கவனம் செலுத்துகிறோம். இது வடிவமைப்பு, புனைவு ஆலை மற்றும் தொகுப்புக்கான முழுமையான கொள்கையாகும். இது 1985 இன் நம் தைவான் தருணம். நாம் 40 ஆண்டுகள் தாமதமாகிவிட்டோம். பரவாயில்லை. நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். நாம் வேகமாக முன்னேறிச் செல்வோம்.

நாம் நிறைய சில்லு வடிவமைப்பு செய்கிறோம், ஆனால் அதன் அறிவுசார் சொத்து நம்முடையதல்ல

23:12 சரி, இப்போது குறைக்கடத்திப் புதிரின் வெவ்வேறு துண்டுகளைப் பற்றிப் பேசலாம். நான் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கும் வடிவமைப்பு (design) நம் நாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது, இருப்பினும் நான் அதைச் சற்று கிண்டலாகத்தான் சொல்கிறேன். உலகளவில் உள்ள அனைத்து சில்லு வடிவமைப்புப் பொறியாளர்களில் 20% பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தத் துறையில் வடிவமைப்பாளர்களான நீங்கள் செலவிடும் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க, உங்கள் மதிப்பு அதிவேகமாக அதிகரிக்கும். இது அளவீடு (analog) அல்லது எண்ணிமம் (digital) எதுவாக இருந்தாலும், பொதுவாக மின்சுற்று வடிவமைப்பிற்குப் பொருந்தும். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 வடிவமைப்பாளர்களால் சுமார் 3000 சில்லுகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த வகுப்பறையில் இருக்கும் நீங்கள் சில்லு வடிவமைப்பில் பயிற்சி பெறும் 160 பேர். இந்தியாவில் செய்யப்படும் சில்லு வடிவமைப்பு வேலையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், IP (Intellectual Property – அறிவுசொத்துரிமை) இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானது அல்ல. அது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் (MNCs) சொந்தமானது. நாம் நிறைய வேலை செய்கிறோம், ஆனால் வேறொருவர் அதற்கான பாராட்டைப் பெறுகிறார். இன்டெல், குவால்காம், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், என்விடியா, AMD, மைக்ரான், சாம்சங், ஆப்பிள் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்தியாவில் வடிவமைப்பாளர்களின் செலவு மிகக் குறைவு. மேலும் நாம் சராசரியாக நல்ல வேலை செய்கிறோம். எனவே, அனைவரும் இந்தியாவில் வடிவமைப்பு மையங்களை உருவாக்க விரும்புகிறார்கள்.

நீங்கள் இந்தியாவிலேயே வடிவமைப்பு அறிவுசார் சொத்தை உருவாக்குவீர்கள் என்பது எனது எதிர்பார்ப்பு

25:45 நமது மிகப்பெரிய பலம் என்ன? நாம் ஒரு இளம் தேசம். அதிக எண்ணிக்கையில் கல்லூரிகளில் இருந்து வெளியே வந்து பயிற்சி பெறும் மாணவர்கள் நம்மிடம் உள்ளனர். கல்வி முறையில் சில  குறைபாடுகள் இருந்தாலும், எடுத்துக்காட்டாக, எனது விரிவுரைகளை இணையத்தில் பலர் பார்க்கிறார்கள். நான் கற்பிக்கும் விரிவுரைகளிலிருந்து பலர் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் எனக்குப் பின்னூட்டங்களையும் அளிக்கிறார்கள் என்பதால் நான் இதை விரும்புகிறேன். நமது பலம் கல்வி இலவசம், அதாவது இணையத்தில் விரிவுரைகள் இலவசம். வேறு எந்த நாட்டிலும் இது நடக்காது. பெர்க்லி, ஸ்டான்ஃபோர்ட், கால்டெக் போன்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வலைத்தளங்களுக்குச் சென்றால், 20 ஆண்டுகள் பழமையான விரிவுரைகளை மட்டுமே நீங்கள் காண்பீர்கள். நம்மைப் பொறுத்தவரை, IIT பம்பாய் – CDEEP (Centre For Distance Engineering Education Programme – தொலைதூரப் பொறியியல் கல்வி திட்ட மையம்) உள்ளது. இது எங்கள் அனைத்து விரிவுரைகளையும் ஒளிபரப்புகிறது. இதன்மூலம் இந்தியா பயனடைகிறது. கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள வடிவமைப்பாளர்களை பணியமர்த்துவதற்காகப் பல நிறுவனங்கள் இங்கு கிளைகளை அமைக்கின்றன. ஆனால் இந்த வடிவமைப்புகளுக்கான காப்புரிமைகள் தாய் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருக்கும், மேலும் பணம் அவர்களால் சம்பாதிக்கப்படும். இதில் எந்தத் தவறும் இல்லை. நான் இப்போது இருக்கும் நடைமுறையில் உள்ள உண்மைகளைச் சுட்டிக்காட்டுகிறேன். தகவல் தொழில்நுட்ப சேவைகள் முக்கியத்துவம் பெற்ற 2000 ஆம் ஆண்டில் நமக்கு ஒரு தைவான் தருணம் கிடைத்தது. ஏனென்றால் நம்மிடம் மிகப்பெரிய இளம் மனித சக்தி இருந்தது. நாம் சம்பாதித்தோம், ஆனால் மற்றவர்களுக்காகச் செய்த வேலைக்கு நேரக் கணக்கில் சம்பளம் பெற்றோம். இது நல்ல வருமானம்தான், ஆனால் இது அறிவுசார் சொத்துக்குச் (IP) சொந்தமானதில் இருந்து வரும் அதிவேக வளர்ச்சி அல்ல. சில்லு வடிவமைப்பிலும், நல்ல வருமானம் இருக்கிறது, ஆனால் இது இந்தியாவிற்கு அதிவேகமானது (exponential) அல்ல. இது அவ்வளவு மோசமானது அல்ல, பயனுள்ளதுதான். ஆனால் இது இன்னும் என்னைத் தொந்தரவு செய்கிறது. சிக்னல்சிப் (Signalchip), சங்க்யா லேப்ஸ் (Sankya Labs), மோஸ் சிப் (MosChip), வெர்வ்செமி (Vervesemi), எம்பிட் (MBit), ஆராசெமி (AuraSemi) போன்றவை இந்திய சில்லு வடிவமைப்பு நிறுவனங்கள். உங்களில் சிலர் உங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியாவிலேயே வடிவமைப்பு அறிவுசார் சொத்தை உருவாக்குவீர்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. இந்த சவாலை ஏற்க வேண்டிய IITகள் மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த அதி திறமையான வடிவமைப்பு பொறியாளர்கள் நம்மிடம் உள்ளனர். DLI (Design Linked Incentive – வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை) மற்றும் Chip2Startup திட்டங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இவற்றில் நானும் பங்கு பெறுகிறேன். இவை இந்த சில்லு வடிவமைப்புத் துறையில் நுழைந்து IP-யைக் கட்டமைக்க மக்களுக்கு ஊக்கமளிப்பதாகும்.

எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும், ஆனால் நாம் இப்போதே தீயை மூட்ட வேண்டும்

28:54 செமிகான் இந்தியா திட்டம் மொத்தம் 18 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டுள்ளது. டாடா குழுமம் குஜராத்தின் தோலேராவில் தைவானின் PSMC (Powerchip Semiconductor Manufacturing Corporation) தொழில்நுட்பத்துடன் ஒரு வில்லை (wafer) உற்பத்தி ஆலையைக் (fab) கட்டமைத்து வருகின்றனர். டாடா குழுமம் அசாமில் ஒரு OSAT (Outsourced Semiconductor Assembly and Test – புறத்தயாரிப்புத் தொகுத்தலும், சோதனையும்) ஆலையையும் அமைக்கின்றனர். மைக்ரான், ரெனசாஸ் (CG பவர்) மற்றும் கீன்ஸ் ஆகியவை குஜராத்தின் சானந்தில் OSAT ஆலைகளைக் கட்டமைத்து வருகின்றன. இந்தத் திட்டங்களுக்கு CS (கணினி அறிவியல்) மற்றும் EE (மின் பொறியியல்) மட்டுமல்ல, அனைத்துத் துறைகளையும் சேர்ந்த பொறியாளர்கள் தேவை. இந்தத் திட்டங்களில் பணியாற்ற அனைத்துத் துறைகளின் பொறியாளர்களையும் வளர்க்க வேண்டும். எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும், ஆனால் நாம் இப்போது தீயை மூட்ட வேண்டும். நீங்கள் என்ன செய்ய முடியும்? இந்தத் துறையில் இருங்கள். TSMC யைப் போலவே BSMC (Bharat Semiconductor Manufacturing Corporation – பாரத் குறைக்கடத்தி உற்பத்திக் கழகம்) யைக் காண வேண்டும் என்பது எனது விருப்பம். இந்தியாவில் நடக்கவிருக்கும் அடுத்த பெரிய முன்னேற்றத்தில் நீங்கள் ஒரு பங்காளியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்! மிக்க நன்றி!

இத்துடன் இத்தொடர் முற்றும்!

தமிழாக்கம்: இரா. அசோகன்