சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)
பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல்
0:23 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு (San Francisco Bay Area) அருகில்தான் இந்த சிலிக்கான் சில்லுகள் தயாரிக்கப்பட்டன. இதனால்தான் இது சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்று பெயர்பெற்றது. 1965 இல் இங்கு தயார் செய்த சில்லுகளில் 95% இராணுவ மற்றும் விண்வெளி வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்தச் சிறிய எண்ணிக்கையிலான கொள் முதல் ஆணைகள் (purchase orders) மிகவும் லாபகரமாக இருந்தன. ஆனால் பாப் நொய்ஸ் (Bob Noyce) இவற்றை மட்டுமே சார்ந்து இருக்க விரும்பவில்லை. அவருக்குப் பேரளவு உற்பத்தி (mass production) செய்து செலவையும், விலையையும் பலமடங்கு குறைக்கவேண்டும் என்ற முன்னோக்குப் பார்வை இருந்தது. ஆகவே அவர் வணிக வேலைகளுக்கு இவற்றைப் பயன்படுத்தப் பெரும் முயற்சியெடுத்தார். இந்த முன்னோக்குப் பார்வை ஒரு புதுமையான தொழில்நுட்பம் இல்லை என்றாலும், இவற்றின் விலையைப் பலமடங்கு குறைத்து வணிகச் சந்தையில் பலரையும் இந்தச் சில்லுகளின் நன்மைகள் சென்றடைய வழிவகுத்தது.
மூரின் விதி (Moore’s Law) – சில்லுவில் டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரண்டாண்டுக்கு ஒரு முறை இருமடங்காகும்
2:30 1965 இல் கார்டன் மூர் எலக்ட்ரானிக்ஸ் இதழில் ஒரு கட்டுரை எழுதினார். 1959 முதல் 1965 வரையிலான தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில்லுவில் உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்தார். இது மூரின் விதிமுறை (Moore’s Law) என்று அறியப்பட்டது. பின்னர் அதையே இரண்டு ஆண்டுகளாக மாற்றினார்கள். இவ்வாறு ஒரு டிரான்சிஸ்டரின் அளவும் செலவும் செங்குத்தாகக் குறைந்துகொண்டே வந்தது. இதன் விளைவாக இன்று நாம் ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்களை வாங்கலாம்.
5:00 2021ல் கார்டன் மூரை ஒரு மாநாட்டில் சந்திக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு சில்லுவில் உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பது மூரின் விதிமுறை என்று பார்த்தோம். ஆனால் எந்த ஒரு அதிவேக வளர்ச்சியும் முடிவற்றதாக இருக்க முடியாது என்பதால் இந்த விதிமுறை வழக்கொழிந்துவிட்டதாகப் பலர் கூறினர். அது முடிவற்றதாக இருக்க முடியாது என்பதை கார்டன் மூர் ஒப்புக்கொண்டார். ஆனால் அதன் “முடிவைத் தள்ளிப் போட முடியும்” என்று கூறினார்.
2024 ஆம் ஆண்டில் ஒரு என்வீடியா (Nvidia) சில்லு 208 பில்லியன் டிரான்சிஸ்டர்களுடன் வெளிவந்தது
5:40 2020 இல் ஒரு சில்லுவில் உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை 50 பில்லியனை எட்டிவிட்டது. 2024 ஆம் ஆண்டில் என்வீடியா B 100 GPU சில்லு 208 பில்லியன் டிரான்சிஸ்டர்களுடன் வெளிவந்தது. இதை ஒலிம்பிக் அல்லது உலக சாதனை என்று சொல்லலாம். இந்த சில்லு என்விடியாவால் வடிவமைக்கப்பட்டு தைவான் செமிகண்டக்டர் நிறுவனத்தால் (TSMC) தயாரிக்கப்பட்டது.
6.55 ஸ்புட்னிக் என்ற முதல் செயற்கைக்கோளை ஏவியதன் மூலமும், முதல் மனிதன் யூரி ககாரினை புவியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியதன் மூலமும் சோவியத் ஒன்றியம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்ததை நாம் முன்பே பார்த்தோம். இருப்பினும், அவர்கள் சில்லுத தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருந்தனர். கல்வி பரிமாற்றத் திட்டங்கள் மூலம் அமெரிக்கா இந்தத் துறையில் என்ன செய்கிறது என்பதைக் கண்டறிய அவர்கள் முயற்சித்தனர். மேலும் அமெரிக்க சில்லுத் தொழில்நுட்பத்தை மீள்நோக்குப் பொறியியல் (reverse engineering) பயன்படுத்தி நகலெடுக்கவும் முயற்சித்தனர்.
8:30 அந்தக் காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் தலைவரான நிக்கிதா குருஷ்சேவ் (Nikita Khrushchev) மிகவும் போட்டி மனப்பான்மை கொண்டவராக இருந்தார். ஜெலனோகிராட் (Zelenograd) நகரம் முழுவதையும் சில்லு உற்பத்திக்கு அர்ப்பணிக்க ஷோகின் (Shokin) அவரது ஒப்புதலைப் பெற்றார். அவர்களால் சில்லுகளைத் தயாரிக்க முடிந்தாலும், குறைந்த விலையில் உயர்ந்த நம்பகத்தன்மையுடன் அவற்றைத் தயாரிக்க முடியவில்லை. மீள்நோக்குப் பொறியியல் பயன்படுத்தி நகலெடுப்பதற்கு முடிக்கப்பட்ட தயாரிப்புதானே (finished product) கிடைக்கும். அதை உற்பத்தி செய்ய என்ன செயல்முறை பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவராதல்லவா? இந்தக் குறைபாடு சோவியத் கண்டுபிடிப்புகளைப் பெருமளவில் பாதித்தது.
கையடக்கமான மிகச் சிறிய டிரான்சிஸ்டர் வானொலியை சோனி நிறுவனம் உருவாக்கியது
10:52 அகியோ மொரிட்டா (Akio Morita) ஜப்பானில் ஒரு இயற்பியலாளர் மற்றும் தொழில்நுட்ப நோண்டி (tinkerer) ஆவார். 1946 இல் அவர் மற்றொருவருடன் இணைந்து சோனி (Sony) நிறுவனத்தை நிறுவினார். அதுவரை வெற்றிடக் குழாய்கள் பயன்படுத்தி வானொலிகள் தயாரிக்கப்பட்டன. அதனால் அவை பருமனாக இருந்தன. அமெரிக்காவிலிருந்து டிரான்சிஸ்டர் தொழில்நுட்பத்திற்கு சோனி உரிமம் பெற்றது. நம் உள்ளங்கையில் கொள்ளும் மிகச் சிறிய டிரான்சிஸ்டர் வானொலியை உருவாக்கியது. இந்த டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தி ஜப்பானிய ஷார்ப் (Sharp) நிறுவனம் கையடக்கமான கணிப்பான்களைத் (calculators) தயாரித்தது. அமெரிக்கா அடிப்படை டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்து அவற்றைப் பேரளவு உற்பத்தி செய்தது. ஆனால் ஜப்பான் இந்த டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தி நுகர்வோருக்குப் பயனுள்ள பல மின்னணு சாதனங்களைத் தயாரிப்பதில் சிறந்து விளங்கியது. இந்தக் கூட்டுப் பிழைப்பு (symbiosis) இரு நாடுகளுக்கும் ஒத்து வந்தது.
18:40 நான் சொல்லும் கதைகள் பலவற்றிற்கும் இந்த இரண்டும் குறிப்பு நூல்கள் (reference books) ஆகும் – சில்லுப் போர் – கிரிஸ் மில்லர் (Chip War – Chris Miller), மிகவும் தீவிரமான சூழ்நிலை ஏற்படும் போது. – பிரணய் கோடஸ்தனே / அபிராம் மஞ்சி (When The Chips Are Down – Pranay Kotasthane / Abhiram Manchi).
இத்தொடரில் அடுத்த கட்டுரை: நுணுக்கமான கம்பிப் பிணைப்பு கைவேலைக்கு ஆசியப் பெண்கள்
சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை. வெடிபொருட்களில் மின்னணு கட்டுப்பாடுகளுக்கு ஒரு பயிற்சிக்கூடமானது வியட்நாம் போர். மின்தேக்கிகளை நினைவகமாகப் பயன்படுத்தல் கண்டுபிடிப்பு. பேரளவு உற்பத்தி மூலம் விலையை வீழ்த்துவதில் இன்டெல் சிறப்பிடம்.
தமிழாக்கம்: இரா. அசோகன்