க்னு/லினக்ஸின் கதை வித்தியாசமானது. உலகெங்கும் உள்ள மென்பொருள் வல்லுனர்கள், தங்கள் இருட்டு அறையில் அமர்ந்து தங்கள் நேரங்களை செலவிட்டு இதை உருவாக்கினர். ஆனாலும் க்னு/லினக்ஸ் பயன்படுத்த எளிதானதாக இல்லை. நிறுவுதலும் மிகவும் கடினம். தெளிவான உதவிக் குறிப்புகளும் ஆவணங்களும் இல்லை. க்னு/லினக்ஸ் பெரும்பாலும் ஒரு hobby-யாக ஒரு பொழுதுபோக்காகமட்டுமே இருக்கிறது. சாதாரண பயனர்கள் யாருக்கும் க்னு/லினக்ஸ் கடினமாகவே இருந்தது.
ஆனாலும் க்னு/லினக்ஸின் பின் உள்ள பல கோடி நிரலர்கள் அதனை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். நிரல்களை பகிர்ந்து வாழ்வதே தம் வாழ்வு நெறி என வாழ்கின்றனர். இவர்களின் சிறப்பும் தியாகமும் அறியாத பிற நிறுவனங்களும், வணிக அமைப்புகளும் இவர்களை எள்ளி நகையாடினாலும் ‘கருமமே கண்ணாக’ தமது பணிகளை தொடர்ந்து செய்கின்றனர்.
இதையே schmalensee தனக்கு சாதகமான விவாதங்களாக நீதிமன்றத்தில் வைக்கிறார். க்னு/லினக்ஸ் கணிப்பொறி உலகில் windows-க்கு ஒரு சிறந்த மாற்றாக உள்ளது. பெரும் போட்டியாய் உருவாக்கி விட்டது. எந்த நேரமும் பொது மக்களும், நிறுவனங்களும் மைக்ரோசாப்டை விட்டுவிட்டு gnu/linux-க்கு மாறி விடலாம். இந்த போட்டி மைக்ரோசாப்டை பெருமளவில் பயமுறுத்துகிறது!
இவ்வாறு பலவகையிலும் அவர் மைக்ரோசாப்டின் பரிதாப நிலையை விவரிக்கிறார். ஆனால் தொடர்ந்த விசாரணையில் அவர் ஒப்புக்கொண்ட சில உண்மைகள்.
“இந்த MAC, Be OS, GNU/Linux போன்றவை பெரும் போட்டிகள் அல்ல. சந்தையின் 50% கூட அவை பெற வில்லை. அவை இன்னும் வளரவே இல்லை. ஆனாலும் அவை பெரும் போட்டிகளே. இவற்றை எதிர்கொள்ளும் மைக்ரோசாப்ட் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஒரு சாதாரண போட்டியாளர் மட்டுமே. மைக்ரோசாப்ட் போட்டிகளை அழிப்பதில்லை. ஆனால் வெற்றி பெற மேலும் முயன்று வருகிறது.”
இவ்வாறு நடந்த விவாதங்கள் மூலம் மக்கள் பல உண்மைகளை தெரிந்து கொண்டனர். Macintosh-ன் முடிவுகளும் கொள்கைகளும் அதற்கு வெற்றியை தரப் போவதில்லை. ஆனாலும் அது சந்தையில் தொடர்ந்து இருக்கும்.
இது என்ன? Be OS, GNUழLinux? இதுவரை யாருமே கேள்விப்படவே இல்லை. ஆனால் மைக்ரோசாப்டோ பெரும் போட்டியாளர் என வர்ணிக்கிறது. யார் அதன் உரிமையாளர்கள்? இந்த நிறுவனங்கள் எங்கே இருக்குகின்றன? நாம் அதை பார்க்க வேண்டுமே? எங்கே வாங்கலாம் இவற்றை? ஆப்பிள், மைக்ரோசாப்ட்க்கு விளம்பரங்கள் வருகின்றன. தொலைக்காட்சி, வணிக பத்திரிகைகளில் இவற்றின் விளம்பரங்களை பார்க்கலாம். ஆங்காங்கே வியாபார நிலைகளை காணலாம் விற்பனை முகவர்களை பார்க்கலாம்.
Be OS-இன் முதல்வரோ பெரும் புகழ் பெற்றவர். அவரால் Be OS-ஐ அறியலாம். க்னு/லினக்ஸ்? யாருடையது அது? இதுவரை யாரும் க்னு/லினக்ஸ் பற்றி அறிந்ததே இல்லை. யாரும் விளம்பரம் செய்ய வில்லை. பணம் இல்லாமல் எப்படி ஒரு நிறுவனம் வளர முடியும்? இலவசமாக வழங்கப்படும் ஓர் மென்பொருள் எப்படி ஒரு மென்பொருள் நிறுவனத்தை எதிர்க்க முடிகிறது?
இதனிடையே மைக்ரோசாப்ட் தனது மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக தர முன்வந்தது. உலகமே வியந்து கைகொட்டி சிரித்தது. உலகின் ஒரு சில மனிதர்கள் செய்யும் நிரல்கள், பெரிய நிறுவனமான மைக்ரோசாப்டையே அதிர வைத்துள்ளன. இலவசமாய் தந்துவிட்டால் அவர்கள் அனைவரையும் அடக்கி விட முடியுமா?
மைக்ரோசாப்ட் ஏன் இலவசமாய் மென்பொருட்களை தர வேண்டும்? பயம் வந்து விட்டதோ? எங்கோ ஓரிடத்தில் பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறப்பதால் அமெரிக்காவில் புயல் ஏற்படுமா என்ன? ஆனால் வீட்டில் இருந்தே மக்கள் சிலர் எழுதும் நிரல்கள் மைக்ரோசாப்டையே ஆட்டம் காண வைத்துவிட்டன.
அனைவரும் க்னு/லினக்ஸ் பற்றி ஆராயத் தொடங்கினர். உலகின் சில பகுதிகளில் இது பரவத் தொடங்கி விட்டது. பல web server-கள் க்னு/லினக்ஸ் அல்லது அதே போன்ற Free BSDகொண்டு இயங்குகின்றன. Apache என்ற வெப் சர்வர், 50%-க்கும் மேலான சர்வர்களில் இயங்குகிறது. க்னு/லினக்ஸ் அல்லது Free BSD கொண்டு இயங்கும் Apache இலவசமாகவே வழங்கப்படுகிறது. பல்லாயிரம் டாலர் தந்து வாங்க வேண்டிய மைக்ரோசாப்டின் web server-ஐ விட மிகச்சிறப்பாக இயங்குவதால் பலரும் Apache வெப் சர்வரையே நாடினர்.
மேலும் பல்துறை வல்லுனர்களும் தங்கள் பணிகளுக்கு gnu/linux-ஐயே தேர்ந்தெடுத்தனர். இயற்பியல் , உயிரியல், வேதியியல், கணித வல்லுனர்கள், ராணுவம் மற்றும் ஆயுத தயாரிப்பாளர்கள் என அனைவரும் தமது பணிகளை க்னு/லினக்ஸ் கொண்டே செய்கின்றனர். நாட்டின் பல ஆய்வகங்கள், பல மலிவான கணிப்பொறிகளை க்னு/லினக்ஸ் மூலம் ஒன்றாக இணைத்து super computer எனப்படும் மிக சிறந்த, மிக வேகமான கணிப்பொறிகளை அமைத்தனர். சில நிறுவனங்கள் வெறும் 3000 டாலருக்கு super computer-ஐ வழங்கத் தொடங்கின. இது மிகவும் குறைந்த விலையாகும். இவை அனைத்தும் க்னு/லினக்ஸ் கொண்டே இயங்கி வருகின்றன.
க்னு/லினக்ஸ் மேலும் பல பெருமைகளையும் கொண்டது. க்னு/லினக்ஸ் கணிப்பொறிகள் மிக அரிதாகவே பழுதடைந்தன. ஆண்டுக்கணக்கில், தமது க்னு/லினக்ஸ் கணிப்பொறிகள் பழுதின்றி இயங்குவதாக பலரும் மகிழ்வுடன் சொல்கின்றனர். மாறாக, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் கணிப்பொறிகள் அடிக்கடி பழுதந்தன. விண்டோசின் பழுது மற்றும் பிழை செய்தியை கூறும் ‘நீலத்திரை’ (Blue screen of death) உலகெங்கும் பெரும் கேலிச் சிரிப்பை ஏற்படுத்தியது.
க்னு/லினக்ஸின் CLI இடைமுகப்பும், GUI-ம் மிக சிறப்பு வாய்ந்தது. சில ஆண்டுகள் முன்பு வரையிலும், க்னு/லினக்ஸ் கற்றவர்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால் இன்று, மிக எளிதாய் மாறிவிட்டது. கண்ணுக்கு இனிய GNOME மற்றும் KDE இடைமுகப்புகள், gnu/linux-ஐ பொது மக்களிடையே கொண்டு சென்றன. குழந்தைகள், முதியோர், மகளிர், இளைஞர் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் க்னு/லினக்ஸ் அழகிய தோற்றம் கொண்டது. பொதுவாக கணிப்பொறி கற்ற எவரும் க்னு/லினக்ஸை எளிதாக பயன்படுத்த முடியும்.
Super computer-ம் web சர்வரும் எளிதானவை அல்ல. விளையாட்டு சாதனங்களும் அல்ல. பெருமளவு பண முதலீடும், வியாபார வளர்ச்சி நோக்கமும் கொண்டவை. இவற்றில் க்னு/லினக்ஸின் பரவுதல் கண்டு மைக்ரோசாப்டின் அச்சம் உண்மையானது.
இதே போல, ஒருவேளை க்னு/லினக்ஸ் வீடு மற்றும் அலுவலக கணிப்பொறிகளிலும் நுழைந்துவிட்டால், மைக்ரோசாப்டின் கதி? இது ஒரு பெரும் போட்டி அல்லவா? இனி மைக்ரோசாப்ட் என்ன செய்யப் போகிறது?
ஆலன் காக்ஸ்
வேல்ஸ் நகரின் தெற்கு கடற்க்கரை நகரம். இங்கு ஒரு அமைதியான வீட்டில் Alon cox வசிக்கிறார். இரவுக் கோழியான இவர் பகல் 2 மணி வரை உறங்குபவர். மைக்ரோசாப்டை மிரட்டும் திறந்த மூல நிரல்கள் எழுதுபவர்.
பழுப்பு நிற குறுந்தாடி கொண்டவர். ஆழமாக யோசனை செய்பவர். உறுதியான மனநிலை கொண்டவர். கையில் எடுத்த செயல்கள் அனைத்தையும் மிகவும் சிறப்பாக செய்து முடிப்பவர். விளையாட்டுகளிலும் வீட்டு வேலைகளிலும், தனது சோதனை, ஆய்வுகளிலும் தனது முழு கவனத்தையும் செலுத்தி அதில் சிறப்பான திறமை பெறுவார். தன் மனைவி Telsa-க்காக, coffee-maker இயந்திரத்தை கணிப்பொறியுடன் இணைத்து, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சில் இருந்தார்.
அவர் லினக்ஸ் கெர்னெல் எனப்படும் மென்பொருளை மேம்படுத்தும் குழுவில் முதன்மையானவர். லினக்ஸ் வளர்ச்சியை வழி நடத்தி செல்பவர். மைக்ரோசாப்டால் முதன்மையான எதிரியாக கருதப்படுபவர். லினக்ஸின் தந்தையான லினக்ஸ் டோர்வால்ட்ஸ், இவரை மிகவும் நம்புகிறார். முக்கியமான முடிவுகளை இவரது ஆலோசனைக்குப் பின்பே எடுக்கிறார். பல்வேறு மக்கள் அளிக்கும் புதுப்புது யோசனைகளுக்கு செயல்வடிவம் தருபவர். பலர் அளிக்கும் நிரல்களை, ஒன்று சேர்த்து, குறைகள் கண்டறிந்து, குறைகளை நீக்கி, எல்லா நிரல்களும் சிறப்பான முறையில் இயங்குவதை இவரே உறுதி செய்கிறார். இவரது சோதனைக்குப் பின்பே லினக்ஸ் கெர்னலின் நிரல்கள் உலகிற்கு வெளியிடப்படுகின்றன
ஆலனுக்கும் டோர்வால்ட்ஸ்க்கும் அடிக்கடி கருது வேறுபாடுகள் ஏற்படும். எதையும் மிகவும் சிறப்பாக மட்டுமே செய்யும் ஆலன் காக்ஸ், தன் கருத்துகளை ஆணித்தரமாக வெளியிட்டு, மிகவும் தரமான நிரல்களை மட்டுமே அங்கீகாரம் செய்வார்.
1980-களில் எல்லா மென்பொருள் நிறுவனங்களும், நிரல்களை தம்முடன் மட்டுமே வைத்துக்கொண்டன. வாடிக்கையாளர்களுக்கு வெறும் பயன்பாடுகளை மட்டுமே அளித்தன. மூல நிரல்களை அளித்தால், போட்டி நிறுவனங்கள் தம்மை அழித்துவிடும் என அவை நம்பின. இதனால் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனங்களுக்கு அடிமை போல் ஆயினர். தமது மென்பொருட்களில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த, அந்த பெரும் நிறுவனங்களையே நாட வேண்டியிருந்தது. பெரும் தொகை தரப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது.
ஆனால் , 1996ல் லினக்ஸ் டோர்வால்ட்ஸ் தனது மென்பொருளை இலவசமாகவே அளிக்க முன்வந்தார். அவர் முழு மூல நிரல்களையும் உலகிற்கு அளித்தார். பிற நிரல்கள் மூல நிரல்களை இலவசமாகப் பெறலாம்; அவற்றை ஆராயலாம்; விவாதிக்கலாம்; குறைகள் கண்டால், அவற்றை திருத்தலாம். தமக்கேற்றபடி மாற்றியும் கொள்ளலாம்; பிறருக்கும் கொடுக்கலாம். இவரது இந்த முடிவு உலகில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்தது. ஒரு ஏழை சிறுவனின் தாராள மனம் அளித்த கொடையான இந்த நிரல்கள் உலகெங்கும் பரவத் தொடங்கின. இன்டர்நெட்டில் இருந்து பலரும் இவற்றை பதிவிறக்கம் செய்தனர்.
மென்பொருட்களை பகிர்ந்து கொள்வது என்பது அப்போது ஏற்கனவே பிரபலம் ஆகத் தொடங்கி இருந்தது. இக்கருத்தை வலியுறுத்துபவர் MIT-ன் சிறந்த நிரலரான Richard Stallman. இவரது கருத்துப்படி மூல நிரல்களை மறைப்பது என்பது ஒரு பாவம். மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான ஒரு செயல். மூல நிரல்களை பகிர்பவர்கள், பிறரின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்.
Closed source software எனப்படும் மூடிய நிரல் மென்பொருட்களால் யாரும் எதையும் கற்றுக்கொள்ளமுடியாது. அறிவு வளர்ச்சி ஏற்படாது.
1984-ல் MIT-ல் இருந்து வெளியேறிய ரிச்சர்ட் ஸ்டால்மன், Free Software Foundationஎன்ற அமைப்பை தோற்றுவித்தார். இந்த அமைப்பு அவரது GNU திட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்தது. 1980-ல் ஸ்டால்மன் Emacs என்ற உரை எழுதும் text editor மென்பொருளை GPL உரிமத்துடன் அளித்தார். Emacs-ன் மூலம் மக்கள் தமக்கு தேவையான ஆவணங்களை தயாரித்து அச்சிட்டுக் கொள்ளலாம். நிரல்கள் எழுதலாம். Emac-ன் துணை கொண்டு பலவகையான மென்பொருட்கள் எழுதப்பட்டன. விளையாட்டுகள், driver-கள், கணித , வானவியல், ராணுவ, உயிர்நுட்ப, இயற்பியல் மென்பொருட்கள் என அனைத்து துறைசார் மென்பொருட்கள் எழுதப்பட்டன. இவை அனைத்துமே GPL உரிமத்துடன் இலவசமாக மட்டுமே வழங்கப்பட்டன. இதே Emacs கொண்டுதான் நமது லினஸ் டோர்வால்ட்ஸ், linux kernel நிரல்களை எழுதினார் அவரும் தனது மென் பொருட்களை GPL உரிமத்துடன் இலவசமாகவே வழங்கினார். டோர்வால்ட்சின் படைப்புகள் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. இலவசம் என்பதால் அவற்றை எல்லோரும் பெற்றனர். பணம், கடன் அட்டை, வங்கி கணக்கு எண் , purchase order, மேலாளர்களின் ஒப்புதல்(approval) இவை ஏதும் இன்றி எல்லோரும் மென்பொருட்களை பெற முடிந்தது.
ஆலன் காகஸ் போன்ற பலரும் டோர்வால்ட்சின் நிரல்களை கண்டனர். பெரிதும் ஆர்வம் கொண்டனர். மூல நிரல்களே இலவசமாய் கிடைப்பதால் அனைவரும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்தனர். நிரல்களை ஆராய்ந்தனர். அவர்களது அறிவுப்பசிக்கு இந்த நிரல்கள் சிறந்த தீனியாக இருந்தன. இரவு, பகல் பாரது பலரும் நிரல்களை சோதனை செய்ததால் அதில் உள்ள பிழைகளும் குறைகளும் கண்டறியப்பட்டு திருத்தப்பட்டன. இதனால் நிரல்களின் தரம் உயர்ந்தது.