குனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இதில் பேரேடு, இறுதிக் கையிருப்பு, இருப்புநிலைக் குறிப்பு, இலாபநட்டக் கணக்கு ஆகிய அறிக்கைகளை மாதவாரியாக, காலாண்டு வாரியாக, ஆண்டு வாரியாகப் பெறமுடியும். இதில் பொருட்களுக்கும், அளிக்கும் சேவைகளுக்கும் என தனித்தனியே விலைப்பட்டியலைத் தயார் செய்யமுடியும். குறிப்பிட்ட பட்டியல் எந்த நாளில் எந்த எண்ணில் எந்த பொருளிற்கு அல்லது எந்த சேவைக்கானது என எளிதாகத் தேடிபிடித்திடமுடியும். கையிருப்பு பொருட்களை எளிதாகக் கையாளமுடியும்.
சரக்கு சேவை வரி (GST)
மிகமுக்கியமாக, சரக்கு சேவை வரிக்கேற்றவாறு (GST) கணக்கு பதிவியலை மேம்படுத்திக் கொள்ளமுடியும். பயன்படுத்திக்கொள்வதற்காக இதனை எளிதாகச் செயல்படச் செய்திடலாம். அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்வதும் மிக எளிது.
பள்ளிகளில் கணக்கு பதிவியல் வகுப்புகளுக்கு பாடமாக
இந்த குனுகதா எனும் கட்டற்ற பயன்பாட்டினை டேலி எனும் பயன்பாட்டிற்கு பதிலாக மேல்நிலைப் பள்ளிகளில் கணக்கு பதிவியல் வகுப்புகளுக்கான ஒரு பாடமாக கூட இதனைப் பரிந்துரைக்கலாம். இதனை மேற்கண்ட முகவரிக்கு சென்று நேரடியாக இணையத்தின் வாயிலாக பதிவுசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக் கொள்வதற்கான கையேடு இதே இணையதளத்தில் தயாராக உள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து படித்தறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்க எனப் பரிந்துரைக்கப்படுகின்றது.
முனைவர் ச. குப்பன்