எளிய தமிழில் Electric Vehicles 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

சந்தையில் வளர்ந்து வரும் விற்பனை 

2023 இல் உலகம் முழுவதிலும் விற்பனையான புதிய கார்களில் 18% கார்கள் மின்சாரக் கார்களாகும். இந்தியாவில் 2023-24 இல் 9 லட்சம் இரு சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் 2023-24 இல் 5.8 லட்சம் மூன்று சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த மூன்று சக்கர ஊர்திகள் விற்பனையில் பாதிக்கு மேல் (54%). இவ்வாறு மின்னூர்திகள் (Electric Vehicles – EV) விற்பனை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

மின்னூர்திகளின் சிறப்புகளும் குறைபாடுகளும்

advantages-disadvantages-ev

மின்னூர்திகளின் சிறப்புகளும் குறைபாடுகளும்

மின்னூர்திகள் எவ்வாறு பெட்ரோல் டீசல் ஊர்திகளை விடச் சிறப்பானவை?

  1. குறைந்த இயக்கச் செலவு.
  2. நேரடியான உமிழ்வே சுத்தமாகக் கிடையாது. ஆகவே இதன் மூலம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லை. இருப்பினும் நிலக்கரி பயன்படுத்தும் அனல்மின் நிலையம், சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கும் லித்தியம், குப்பையில் போடப்படும் பழைய மின்கலங்கள் ஆகியவற்றால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு உண்டு.
  3. மிகக் குறைவான பாகங்கள்தான் தேவை. ஏனெனில் பெட்ரோல், டீசல் ஊர்திகளைப் போல உரசிணைப்பி (clutch), பல்லிணைப்பெட்டி (gearbox), உமிழ்வு கட்டுப்பாடு அமைப்புகள் ஆகியவை தேவையில்லை. எஞ்சினுக்கோ பல நூறு பாகங்கள் தேவை ஆனால் மோட்டாரில் ஒருசில பாகங்கள் மட்டுமே உண்டு. பழுதடையும் வாய்ப்புகள் குறைவு, ஆகவே பராமரிப்புச் செலவும் குறைவு.
  4. பெட்ரோல், டீசல் ஊர்திகளுடன் ஒப்பிடும்போது, மின்னூர்திகளின் சத்தமும், அதிர்வும் மிகக்குறைவாக இருக்கும். 
  5. நம்நாடு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வெளிநாடுகளை நம்பி இருப்பதைக் குறைக்கும். 
  6. சக்தியின் செயல்திறன் அதிகம். அதாவது கருத்தியல்படி உள்ள திறனில் பெரும்பங்கு நமக்கு நடைமுறையில் திறனாகக் கிடைக்கிறது. 

மின்னூர்திகள் எவ்வாறு பெட்ரோல் டீசல் ஊர்திகளை விடக் குறைபாடுடையவை?

  1. ஒருமுறை மின்னேற்றினால் குறுகிய தூரம்தான் செல்ல முடியும். இதுவே மின்னூர்திகளின் முக்கியக் குறைபாடு.
  2. பெட்ரோல் டீசல் ஊர்திகளைப் போல வழியில் சில நிமிடங்களில் எரிபொருள் நிரப்பிக்கொண்டுத் தொடர்ந்து பயணிக்க இயலாது. நாம் போகும் வழியில் இடையில் மின்னேற்றி வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும் மின்னேற்றம் ஓரிரு மணி நேரங்களாவது எடுக்கும்.  
  3. நிலைக்காந்த மோட்டார்கள் தயாரிக்க நியோடைமியம் (Neodymium) போன்ற புவியிலேயே அரிதான மூலகங்கள் (rare earth elements) சில தேவைப்படுகின்றன. மின்கலத்துக்கான லித்தியமும் தற்போது இந்தியாவில் கிடைக்காததால் இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம். 

அரசாங்க மானியங்கள்

இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் ஒரு சிறு பங்கு மட்டுமே நமக்கு உள்நாட்டிலேயே கிடைக்கிறது. ஆகையால் நாம் இதைப் பெருமளவு இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. இதற்கான அந்நியச் செலாவணி செலவும் ஏறிக்கொண்டே போகிறது. இந்த அந்நியச் செலாவணி செலவைக் குறைப்பது, தவிரவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைப்பது ஆகிய முக்கிய நோக்கங்களில் ஒன்றிய அரசாங்கம் மின்னூர்திகள் தயாரித்து விற்பனை செய்வதை ஊக்கப்படுத்துகிறது. மின் மற்றும் கலப்பின ஊர்திகளைத் துரிதமாகப் பயன்பாட்டில் கொண்டுவருதல், உற்பத்தி செய்தல் (Faster Adoption and Manufacturing of Electric and Hybrid Vehicles in India – FAME II) திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர சில மாநிலங்களிலும் மின்னூர்திகளுக்கான மானியங்கள் உள்ளன. மின் கட்டணத்திலும் சலுகைகள் உண்டு. சில மாநிலங்கள் பதிவுக் கட்டணத்தையும் சாலை வரியையும் தள்ளுபடி செய்கின்றன.

பரவி வரும் மின்னேற்ற சேவை நிலையங்கள் (Charging service stations)

2023 ஆம் ஆண்டு இறுதிவரை இந்தியாவில் சுமார் 800 நகரங்களில் 10,000 மின்னேற்ற சேவை நிலையங்கள் வந்துவிட்டன. மேலும் பல நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இறங்கி மின்னேற்ற சேவை நிலையங்களை அமைத்து வருகின்றன. இவற்றின் உதவியால் மின்னூர்திகளில் செல்லுமிடங்களில் நீங்கள் வழியில் நிறுத்தி மின்னேற்றம் செய்துகொண்டு பயணத்தைத் தொடர இயலும்.

மின்னூர்தித் தொழில்துறையில் பெருகிவரும் வேலைவாய்ப்புகள்

இம்மாதிரி வளர்ந்துவரும் மின்னூர்தித் தொழில்துறையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சில வல்லுநர்கள் முன்கணிப்பு செய்துள்ளார்கள். மின்னூர்திகளில் மின்னணு சாதனங்களும், கணினிகளும் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் மென்பொருள் பொறியாளர்களும், வன்பொருள் பொறியாளர்களும் அதிக அளவில் தேவைப்படுவார்கள். கணினி அறிவியல், மென்பொருள் மேம்பாடு, தரவு அறிவியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் தேவைப்படும். மேலும் மின்கலப் பொறியாளர்கள், தானுந்து வடிவமைப்பாளர்கள், தயாரிப்புப் பொறியாளர்கள் ஆகிய திறன்களுக்கும் அதிகத் தேவை உள்ளது. உற்பத்தித் தொழற்சாலையில் வரிசைத்தொகுப்புப் (assembly line) பணியாளர், மின்பணியாளர் (electrician), மின்னணுப்பணியாளர் (electronic technician) போன்ற பல வேலைவாய்ப்புகள் பெருகும். சந்தைப்படுத்தல் (marketing), விற்பனையாளர், விற்பனைக்குப்பின் பராமரிப்புப் (after-sales service) பணியாளர் ஆகியவை மற்ற சில வேலை வாய்ப்புகள்.

நன்றி

  1. What are 3 disadvantages to an electric car?

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்னூர்தி வகைகள்

மின்கல மின்னூர்திகள் (Battery Electric Vehicles – BEV). கலப்பின மின்னூர்திகள் (Hybrid Electric Vehicle – HEV). மென் கலப்பின மின்னூர்திகள் (Mild Hybrid Electric Vehicles – MHEV). செருகு கலப்பின மின்னூர்திகள் (Plug-in Hybrid Electric Vehicle – PHEV). வேதி மின்னூர்திகள் (Fuel Cell Electric Vehicles – FCEV).

ashokramach@gmail.com

%d bloggers like this: