கணினி சுட்டி எப்படி வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 40

By | March 6, 2025

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் குறித்து பார்த்திருக்கிறோம். குறிப்பாக சமீபத்தில் தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். ஆனால் இந்த தொடுதிரை(Touch screen)தொழில்நுட்பமானது, இன்றளவும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

அடிப்படையில் தொடுதிரை என்பது விலை உயர்ந்தது மற்றும் எளிதில் சேதம் அடையக் கூடியது. கணினி மற்றும் தொலைக்காட்சி பற்றி போன்றவற்றிற்கு தொடுதிரைகள் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை. தற்காலத்தில் வெளியாக கூடிய, கணினி திரைகளில்(Monitors amd displays)கூட பெரும்பாலும், தொடுதிரைவசதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. மாறாக, சுட்டி என அழைக்கப்படும் மௌசுக்கு(Mouse) தான் மவுசு அதிகம்.

பார்ப்பதற்கு எலி போல இருப்பதால் இதற்கு மௌஸ் என பெயர் வைத்து விட்டார்கள்! என்று பல்வேறு கதைகள் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், இதற்குப் பின்பு இருக்கக்கூடிய தொழில்நுட்பம் சற்று சுவாரசியமானது.

வழக்கம் போல இதற்குள்ளும் ஒரு உள்ளார்ந்த மின்சுற்றுதான்(Integrated circuit )அமைக்கப்பட்டிருக்கும். சில மின்தடைகள்(Resistors) மற்றும் மின் தேக்கிகளை(Capacitors) கொண்டு போதியமான அளவு மின்னழுத்தம் மற்றும் மின்சாரமானது பராமரிக்கப்படும். அதற்குப் பின்பாகத்தான், இதன் செயல்முறை வடிவமானது வெளிப்படுகிறது. ஒரு பந்து போன்ற அமைப்பு(rolling ball)இருக்கும். இந்த பந்து போன்ற அமைப்புதான் நாம் அனைத்து இடங்களில் நகர்த்தும்போதும் அதற்கு ஏற்றார் போல சுட்டியை நகர்த்துகிறது.

சரி நாம் சுட்டியை நகர்த்துவதை எப்படி கணினி புரிந்து கொள்கிறது. நீங்கள் சுட்டியை திருப்பி வைத்து பார்த்தால் பின்னாடி ஒரு விளக்கு எறிவது போல தெரியும்(Thats actually IR beam). தற்போது வெளியாக கூடிய சுட்டிக்களில் led பல்பு போல ஒரு சிறிய அமைப்பு மட்டுமே இருக்கும். ஆனால் அதில் எரியக்கூடிய விளக்கு பெரும்பாலும் தெரிவதில்லை(Invisible IR). பழைய வடம் இணைக்கப்பட்ட சுட்டிகளில்(Wired mouses)உங்களுக்கு ஒரு சிவப்பு நிற விளக்கு எரிவது தெரியும். நான் ரிமோட்டுகள் குறித்த கட்டுரையில் முன்பே குறிப்பிட்டிருந்தது போல தான் நாம் சுட்டியை நகர்த்தும்போது, இந்த விளக்கில் இருந்து வரும் வெளிச்சம் மாறுபடுகிறது, காரணம் சுட்டிக்கு பின்னால் நகர்த்தும்போது அதனோடு சேர்ந்து நகரக் கூடிய வகையில் ஒரு சுருள் அமைப்பு போல(wheel mechanism) வைக்கப்பட்டிருக்கும்.

இது நகரும்போது வெளிச்சத்தை மறைக்கும் பின்பு வெளிவிடும், பின்பு மறைக்கும் பின்பு வெளிவிடும்(it’ll block and allow light when movement). இதன் மூலமே இயக்கம் கண்டறியப்படுகிறது. மேலும் இந்த வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக ஒளிமின் டையோடுகளும்(Receivers – photo voltaic cell)பொருத்தப்பட்டு இருக்கும். இந்த ஒளிமின் டையோடுகளில் மாறி மாறி வெளிச்சம் பட்டும்,படாமலும் இருப்பதை வைத்து சுட்டு இயக்கத்தில் இருப்பதை கண்டுபிடித்துக்கொள்ளலாம். மேலும், இந்த ஒளி எந்த வகையில் பட வேண்டும், என்பதற்காக சிறிய கண்ணாடி போன்ற ஒரு வழிகாட்டி(light guide)அமைப்பும் இருக்கும்.

கேட்பதற்கு சற்றே குழப்பமாக இருந்தால் கீழே வழங்கி இருக்கும் புகைப்படத்தை பாருங்கள் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

ஆனால், தற்காலத்தில் வரக்கூடிய சுட்டிகளில் இது போன்ற பந்து போன்ற அமைப்புகள் இல்லாத வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.

அத்தகைய சுட்டிகள் எப்படி வேலை செய்கிறது என்று உங்களுக்குள் குழப்பம் இருக்கலாம். மோஷன் சென்சார் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பொருள் நகர்வதை வைத்து அதன் இயக்கத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த இடத்தில் led விளக்கு மட்டுமே இந்த வேலையை பார்த்துக் கொள்வதால் இந்த அடிப்படையில் இயங்கக்கூடிய சுட்டிகளும் உங்களுக்கு காண கிடைக்கும்.

அதற்குப் பிறகு என்ன சுட்டியில் ஒவ்வொரு இடமாக நகர்த்துவதற்கு மேலே உருட்டும் சக்கரம் போன்ற ஒரு அமைப்பு காணப்படும்.இரண்டு பக்கமும் கிளிக் செய்வதற்கு வசதியாக இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தற்கால சுட்டிகளில்,Latency என்னும் ஒரு வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் வைத்திருக்கும் சுட்டியின் Lattency மதிப்பானது ஆயிரம்(1000) என வைத்துக் கொள்வோம்.அதாவது உங்கள் கையில் இருக்கும் சுட்டியானது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக தகவல்களை வழங்கக்கூடியது. இதுவே வீடியோ கேம் விளையாடும் சுட்டிகளில் இந்த மதிப்பானது லட்சங்களை கூட தாண்டும். அப்போதுதான் வீடியோ கேம் விளையாட்டில் எதிரி உங்களை சுட வரும்போது உடனடியாக நகர்ந்து அவரின் மீது குறி வைக்க முடியும்.

இதுபோன்ற சுட்டிகள் பெரும்பாலும் பேட்டரிகளின் மூலமே மின்னாற்றலை பெற்றுக் கொள்கிறது. இவை இயங்குவதற்கு மிகக் குறைவான மின்னாற்றலே போதும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால், நான் முன்பு குறிப்பிட்ட வீடியோ கேமுக்கு ஏற்ற சுட்டிகளுக்கு உங்களுக்கு அடிக்கடி பேட்டரிகளை மாற்ற வேண்டிய தேவை இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் எந்த அளவிற்கு ஒரு எலக்ட்ரானிக் பொருளின் செயல் திறன் சிறப்பாக இருக்கிறதோ! அதற்கு ஏற்றார் போல நாம் மின் ஆற்றலையும் அதிகமாக வழங்க வேண்டியிருக்கும். அதற்கு ஏற்றார் போல மின்ஏற்றம்(Rechargeable )செய்யக்கூடிய வகையிலான சுட்டிகளும் மார்க்கெட்டுகளில் கிடைக்காமல் இல்லை.

இந்தச் சுட்டியின் சமிக்ஞைகள் அனைத்தும் உள்ளே வழங்கப்பட்டிருக்கும், உள்ளார்ந்த மின்சுற்றின் மூலம் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் கணினிக்கு கடத்தப்படுகிறது. இந்த கடத்தப்படும் வேலை இரண்டு வகையில் நடைபெறும் ஒன்று நீங்கள் வைத்திருக்கக்கூடிய சுட்டி வயர் அல்லது வயர்லெஸ் அடிப்படையிலானதாக இருக்கும்

அதாவது ப்ளூடூத் தொழில்நுட்பத்தோடு அல்லது அதற்கென வழங்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய பென் டிரைவ் போன்ற tongle அமைப்பு மூலமோ தரவுகள் கடத்தப்படும். வழக்கமான, கம்பி வட வகையில் வழங்கப்பட்டிருக்கும்(wired)வடத்தின் மூலமாக தரவுகள் உடனுக்குடன் கணினிக்கு கடத்தப்படும்.

உள்ளே பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஆப்டிகல் எல்இடி எலக்ட்ரானிக் பொருட்கள், உள்ளார்ந்த மின்சுற்று மற்றும் இன்ன பிற பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுட்டியின் விலையும் அமையும். தற்காலத்தில் குறைந்தபட்சம் 80 ரூபாயில் தொடங்கி 8000 ரூபாய்க்கு கூட சர்வ சாதாரணமாக சுட்டிகள் கிடைக்கிறது.

ஆனால், கணினியை எளிமையாக பயன்படுத்துவதற்கு ஒரு இன்றியமையாத கருவி இந்தச் சுட்டி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தக் கட்டுரையில் சுட்டியின் அடிப்படையான செயல்முறை குறித்து மட்டுமே நான் விளக்கி இருக்கிறேன். அடுத்த முறை சுட்டியை எடுத்து டிக் டிக் டிக் என தட்டும் போது அதன் பின்னால் இருக்கும் அறிவியலையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com