தற்காலத்தில் மொபைல் கருவிகள் லேப்டாப்கள் உள்ளிட்ட கணினி மற்றும் கணினியோடு தொடர்புடைய சாதனங்கள் பலவற்றிலும், மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது தொடு திரை வசதி.

2010 காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் கருவிகளின் வருகை தொடங்கியிருந்தது. இருந்த போதிலும், சிம்பியான் விண்டோஸ் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களைக் கொண்டு இயங்கிய ஸ்மார்ட் மொபைல் கருவிகளும் பெரும்பாலும் சந்தைகளில் காண கிடைத்தன. இத்தகைய மொபைல் கருவிகளில் தொடுதிரைவசதியானது(Touch screen)அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தொடக்க காலகட்டத்தில், தொடுதிரை மொபைல் போன் வைத்திருப்பவர் நிச்சயம் வசதி படைத்தவராக இருப்பார் எனும் பிம்பமும் இருந்தது. பின்னாளில் சீன மொபைல் கருவிகளின் வருகை மற்றும் அதிகரித்த உதிரிபாக உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் ஸ்மார்ட் தொடுதிரை மொபைல் திரைகளின் விலை பெருமளவு குறைந்தது. எனக்கு கடைசியாக நினைவிருந்தவரை, குறைந்தபட்ச அளவில்(limited specifications) பயன்படுத்தக்கூடிய தொடுதிரை மொபைல் கருவியின் விலையானது, இணையத்தில் 2000 ரூபாய்க்கு கீழ் கூட விற்கப்பட்டது.
இவ்வளவு தூரம் பயன்படுத்தப்படும் தொடுதிரை தொழில்நுட்பத்திற்குள் என்னதான் இருக்கிறது? என்று எனக்குள்ளேயே பல ஆண்டுகள் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு, இன்று அது குறித்து கட்டுரை எழுதலாம் என குறிப்புகளை தேடிக்கொண்டிருந்தேன். நான் தேடிக் கண்டுபிடித்த மற்றும் நான் ஏற்கனவே கணித்திருந்த சில தகவல்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அதற்கு முன்பாக என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
முதலில் என்னுடைய கணிப்பில் இருந்து ஆரம்பிப்போம்! தொடுதிரை என்பது செயல்பட வேண்டுமானால், நிச்சயமாக நாம் கை வைக்கும் போது ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும். ஒருவேளை அந்த மாற்றமானது மின்புலத்தில் ஏற்படலாம் அல்லது மின்தடையில் ஏற்படலாம். உண்மையில் நான் கணித்தது போல இந்த அடிப்படையிலேயே பெரும்பாலான தொடுதிரைகள் செயல்படுகிறது.
பொதுவாக தொடுதிரைகளில் மூன்று வகைகள் காணப்படுகிறது.அவை எவை எவை என்று தான் இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கிறோம்.
முதலாவது வகை தொடுதிரையானது மின் தடை அடிப்படையிலான தொடுதிரை(Resistive Touch)என அறியப்படுகிறது. எல்சிடி ஒளி திரைக்கு மேலே, மின்தடை அடிப்படையிலான ஒரு திரை பொருத்தப்பட்டு இருக்கும். இந்தத் திரை ஒளியை வெளியிடும்(transparent) வகையில் இருக்க வேண்டும். இதற்காக இண்டியம் தகர ஆக்சைடு(Indium tin oxide)அடிப்படை இலான பூச்சு வழங்கப்படுவதை அறிந்து கொள்கிறோம் முடிகிறது.

சரி இந்த மின்தடை அடிப்படையிலான? தொடுதிரை எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். இந்த தொடு திரையில் இரண்டு வகையான அடுக்குகள் இருக்கும் ஒரு அடுக்கில் மின்புலத்தைக் கொண்ட திரை இருக்கும். அதற்கு மேலே மின்தடை உலோக அடிப்படையிலான அடுக்கு(resistive metal layer)இருக்கும். மின்புலத்தைக் கொண்ட திரையில் கடத்தும் பொருட்கள்(conductive materials)பயன்படுத்தப்படும். நீங்கள் திரைக்கு மேலே அழுத்தத்தை செலுத்தும் போது, அந்த அழுத்தத்திற்கு ஏற்ப மொபைல் கருவியில் இருக்கும் உணர்வுகளைக் கொண்டு நீங்கள் எந்த இடத்தில் அழுத்துகிறீர்களோ? அதற்கு ஏற்ற சமிக்ஞையானது பெறப்பட்டு அதற்கு ஏற்றால் போல் வேலை செய்யப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், நீங்கள் அழுத்தம் கொடுத்தால் மின்தடை மாறும். அதனால்,அந்த குறிப்பிட்ட இடத்திற்கான பணி அரங்கேற்றப்படுகிறது.( Resistence changes and the IC detects it and execute the command)
இத்தகைய திரையில் நீங்கள் வெறும் கைகளால் அழுத்தம் கொடுத்தாலும் சரி அல்லது ரப்பர் கையுறைய அணிந்து கொண்டு அழுத்தம் கொடுத்தாலும் சரி. ஏனெனில் இத்தகைய தொடுதிரைகளில் அழுத்தத்தை மட்டும் (pressure is enough for its function) கொண்டே செயல்படுகிறது. இதுபோன்ற, தொடு திரைகள் பிறவற்றை ஒப்பிடும்போது, விலை மலிவானது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், இத்தகைய தொடுதிரையை பயன்படுத்தும் போது, ஒளிதிரையில் இருந்து வெளிப்படக்கூடிய சுமார் 75% ஒளி மட்டுமே நமக்கு வெளியீடாக(only we get 75% light output from the main display)கிடைக்கும். எனவே விலை மலிவான கருவிகளில், பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தொடுதிரையாக இருக்கிறது. ஆரம்ப காலத்தில் வெளியான நோக்கியா மொபைல் கருவிகளில் மொபைல் கருவிகளில் உள்ளே பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு சிறிய குச்சியின் (stylus) வழங்கப்பட்டிருக்கும். பெரும்பாலான அத்தகைய திரைகள் மின்தடை அடிப்படையிலான தொடுதிரை தான்.

அடுத்ததாக,நாம் பார்க்க இருக்கும் தொடு திரையானது மின் தேக்கி அடிப்படையிலான தொடுதிரை ஆகும்.
இத்தகைய தொடுதிரையில் சுற்றி மின்புலமானது அமைக்கப்பட்டிருக்கும். திரையில் சிறு சிறு துவாரங்களில் மின்னாற்றல் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் கை வைக்கும் போது சிறிய அளவிலான மின் ஆற்றலானது உங்களுடைய உடலுக்குள் பாயும் இந்த மின்னாற்றல் உங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அதே நேரம் திரையில் காணப்படும் மின்னழுத்தத்தில் மிகப்பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும், மின்புலத்திலும் மாற்றத்தை உண்டாக்கும். இந்த மாற்றத்தை கண்டறிந்து கொள்ளும் உணர்விகள்(sensors) அதற்கு ஏற்ற சமிக்ஞைகளை அனுப்புகிறது.

அவற்றைக் கொண்டு நாம் எந்த கட்டளையை பிறப்பித்து இருக்கிறோம் என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ப வேலை நடத்தப்படுகிறது. இத்தகைய தொடுதிரைகளில் உங்களுக்கு 90 சதவிகித அளவிலான ஒளி வெளியீடானது கிடைக்கிறது. எனவே முன்பு பார்த்த மின்தடை அடிப்படையிலான தொடுதிரையை காட்டிலும், இதில் தெளிவான படத்தை காண முடியும். அதற்கு ஏற்றார் போல இதன் விலை ஆனது மின்தடை அடிப்படையிலான தொடு திரையை விட சற்றே அதிகமானதாகும்.
ஆனால்,இந்த தொடுதிரையில் உங்களால் விரலை வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு மாறாக பிளாஸ்டிக் குச்சியை வைத்தால் எல்லாம் வேலை செய்யாது. முன்பு குறிப்பிட்ட தொடுதிரையில் மின் கடக்காத பொருட்களை பயன்படுத்தலாம்
ஆனால் இந்த தொடுதிரையில் மின் கடத்தும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக நாம் பார்க்க இருக்க கூடிய தொடுதிரை வகையானது ஒலிஅலை வடிவிலான தொடுதிரை(surface acoustic touch screen)ஆகும்.

இத்தகைய தொடுதிரையில் x அச்சு மற்றும் y அச்சில் முறையே மீயோலி அலைகளை உருவாக்க கூடிய அமைப்பு(ultra sonic sound generator) மற்றும் அவற்றை வாங்கக் கூடிய அமைப்பு(receiver) ஆகியவை இருக்கும். இத்தகைய தொடுதிரைகளை நீங்கள் தொடவே வேண்டாம்.அதற்கு மேலாக கைகளை கொண்டு சென்றாலே மேலே அமைக்கப்பட்டு இருக்கும் உணர்வுகளின் மூலம் ஒலி கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, அதிலிருந்து கட்டளைகளைப் பெற்று செயல்பட தொடங்கும். ஆனால் இத்தகைய தொடுதிரையின் விலை சற்றே அதிகம் தான்.
இத்தகைய தொடுதிரையில் நேரடியாக ஒளித்திரையில் இருந்து வெளிப்படும் அனைத்து ஒளியும் நேரடியாக வெளியீடாக கிடைக்கிறது(100% light output). ஏனெனில் இதற்கு மேலே எந்தவித தொடுதிரையும் ஒட்டப்படவில்லை. நேராக மீ ஒலி அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
ஏதோ எளிமையாக தொடுகின்ற மொபைல் தொடுதிரை என்று சொல்லுகிறீர்களே! அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் ஒளிந்திருக்கிறது. வெறும் தொடுதிரைக்கு மட்டும் தான் இந்த விளக்கம் அதற்கு உள்ளே செயல்படக்கூடிய அமைப்புகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றால்! மொபைல் திரை எலக்ட்ரானிக் என்று சிறு தொடர் எழுத வேண்டி இருக்கும்.
ஒருவேளை வாசகர்கள் விருப்பப்பட்டால், நிச்சயம் அது தொடர்பாகவும் ஒரு தொடர் எழுத காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் நீங்கள் ஆவலோடு எதிர் நோக்கும் லாஜிக் கதவுகள் தொடர்பான அடுத்த கட்டுரை வரும் நாட்களில் வெளியாகும்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது. மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com
,