உங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள்.
முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம் நீங்கள் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பு தொடங்க உதவும் திட்டமாகும். உங்கள் திறந்த மூல பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறீர்களா? நீங்கள் GitHub இல் முதல் பங்களிப்பு திட்டத்தின் “இதை முதலில் படிக்கவும்” (Readme) இல் உள்ள பயிற்சியில் கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
திறந்த மூல திட்டங்களுக்கு நீங்கள் ஏன் பங்களிக்க வேண்டும்?
திறந்த மூல திட்டங்களுக்கு உதவுவதால் உங்களையொத்த மனநிலையுள்ள மற்ற பலரை சந்திப்பது, அற்புதமான வழிகாட்டிகள் பெறுவது, உங்கள் திறமைகளை மேம்படுத்துவது மற்றும் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான தற்குறிப்பை உருவாக்குவது போன்ற பல மகிழ்ச்சியான அனுபவங்களை அடைய முடியும்.