எளிய தமிழில் சி பகுதியில் ஆரம்பக் கட்டுரைகளிலேயே பொங்கல் வாழ்த்து சொல்வது எப்படி? என ஒரு சுவாரசிய கட்டுரையை எழுதி இருந்தேன். இருந்த போதிலும் கூட, அந்த கட்டுரையில் C மொழியில் அச்சிடுவதற்கான சில விதிமுறைகளை முறைப்படி எழுதவில்லை. எந்த ஒரு மொழியிலேயுமே அச்சிடுவது(print statement)தான் மிக முக்கியமான ஒரு பகுதி. நீங்கள் ஒரு மதிப்பை அச்சிடும்போது தான், நீங்கள் எழுதி இருக்கும் நிரலின் தேவையான பகுதிகளை பயனர்களுக்கு வழங்க முடியும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு கணிப்பானுக்கான நிரலை எழுதி இருக்கலாம். ஆனால் அந்த கணிப்பான் நிரலை பயனர் படிக்கப்போவதில்லை. மாறாக, அந்த கணிப்பானை மட்டும் தான் அவர் பயன்படுத்தப் போகிறார் . எப்படி நீங்கள் கடைகளில் இருந்து, ஒரு கணிப்பானை வாங்கும் போது, அதன் பட்டன்களை மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களோ! அதுபோலதான் பயனரும் செயல்படுவார். மாறாக, நிரல் எழுதுவது என்பது கணிப்பானுக்கு உள் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் சுற்றுக்களை அமைப்பது போன்றது. இதுபற்றி பயனருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால்,நீங்கள் ஒன்றாம் என்னை அழுத்தினால் திரையில் ஒன்று தோன்ற வேண்டும். அப்பொழுதுதான் கணிப்பான் சரியாக வேலை செய்யும். அதேபோல,நிரல் எழுதும் போதும் இது போன்ற குறிப்பிட்ட விஷயங்களை அச்சிடும்போது பயனர்கள் புரிந்து கொள்ள முடியும். எனவே, அச்சிடுவது என்பது முழுக்க முழுக்க பயனர்களுக்கானது தான். உள்ளார்ந்த சிக்கலான மற்றும் முழுக்க முழுக்க கணினி நுட்பம் சார்ந்த நிழல்களில் பெரும்பாலும் அச்சிட வேண்டிய தேவை இருக்காது.
குறிப்பிட்ட ஒரு செயல் நிறைவடைந்து விட்டது என்று அச்சிட்டால் போதுமானது. ஆனால், தற்காலத்தில் வடிவமைக்கப்படும் செயலிகள் குறிப்பாக பயனர்கள் பயன்படுத்தும்(GUI )செயலிகளில் இது போன்ற அச்சிடும் பணிகள் மிக மிக முக்கியமானது. இத்தகைய, அச்சிடல் பணியை அடிப்படை கணினி மொழிகளில் ஒன்றான C மொழியில் செய்வது மிக மிக எளிதான்.

மேற்காணும் நிரலில் இருப்பது போல printf() எனும் செயல்பாட்டை பயன்படுத்தி எளிமையாக அச்சத்து விட முடியும்.
ஆனால், பைத்தான் போன்ற கணினி மொழிகளை படித்துவிட்டு, C/C++ போன்ற பழமையான மற்றும் சக்தி வாய்ந்த கணினி மொழிகளின் பக்கம் வருபவர்களுக்கு நிறைய சிக்கல்கள் காத்திருக்கிறது. பைத்தான் மொழி சக்தி வாய்ந்தது மற்றும் மிக மிக எளிமையானது. அங்கே உங்களுக்கு print என வழங்கினால் மட்டும் போதுமானது. மற்றபடி எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. ஆனால், இத்தகைய மொழிகளில் மேற்கோள் குறிகள்,அடைப்பு குறிகள், அரை நிறுத்தக் குறிகள் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிறிய தவறுகள் செய்தால் கூட மீண்டும் மீண்டும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்படும். எளிமையாக புரியும் வகையில் நாம் தொடக்கத்தில் செய்யக்கூடிய தவறுகளை கீழே உள்ள நிரலின் மூலம் விளக்கி இருக்கிறேன்.
Wrong print statments
1). printf(‘car”); // wrong quotation mark
2). printf(‘car’); // single quote used
3). printf(“car”) // no semicolon
4). Printf(5) // we can’t print numbers without quotes
மேல் காணும் வகைகளில் நீங்கள் தவறு செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. C மொழியைப் பொருத்தமட்டில், நீங்கள் இரட்டை மேற்கோள் குறிகளை(double quotation marks “)மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு print statement முடிந்த பிறகும் அரை நிறுத்த குறி(semicolon ; ) கொண்டு முடிக்க வேண்டும்
பைத்தான் போன்ற மொழிகளில் இருப்பது போல நேரடியாக உங்களால் எண்களை அச்சிட முடியாது. மேலும், நான் ஏற்கனவே எழுதி இருந்த அடுத்த வரிக்கு செல்வது எப்படி எனும் கட்டுரையில் வருவது போல,C C மொழியில் நீங்கள் எழுதும் போது ஒவ்வொரு முறையும் அடுத்த வரிக்கு செல்வதற்கான /n கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் நீங்கள் தனித்தனியாக print கொடுத்தாலும் கூட ஒரே வரியில் தான் உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்.
அதற்கான ஒரு எடுத்துக்காட்டு புகைப்படமும் கீழே வழங்குகிறேன்.

ஆனால், தவறுகளை போட தான் கற்றுக்கொள்வீர்கள். எனவே, ஒருமுறை தவறு நடந்து விட்டது என வருந்திக் கொண்டிருக்க வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். மேலும், ஒரு இடத்தில் தவறு வருகிறது என்றால் அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். திரும்பத் திரும்ப அதே வகையிலான நிரல்களை எழுதிப்பாருங்கள். இது அனைத்து விதமான கணினி மொழிகளுக்கும் பொருந்தும்.
மீண்டும் ஒரு எளிய தமிழில் c கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com