தமிழ் மொழியில் கற்றுக்கொள்ள அதிகமான எழுத்துகள் உள்ளன என்ற ஒரு கருத்து நிலவுகிறது. தமிழில் 12 உயிர், 18 மெய் எழுத்துகள், ஒரு ஆய்த எழுத்து ஆக மொத்தம் 31 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தும் ஒவ்வொரு உயிரெழுத்துடன் சேர்ந்து மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன என்பது உண்மைதான். மெய்யெழுத்தை எழுதி, சேர்க்க வேண்டிய உயிரெழுத்து அடையாளம் 11 தெரிந்தால் போதும். ஆகவே மேற்கண்ட கருத்து சரியா என்று நீங்களே சொல்லுங்கள்.
மொழியைக் கற்பிப்பதில் பல பெரிய மேம்பாடுகளைத் தகவல் தொழில்நுட்பம் கொண்டுவந்துள்ளது. ஆகவே மொழியைக் கற்பிப்பதில் ஏற்கனவே வந்து விட்ட மற்றும் அடுத்து வரும் போக்குகள் என்ன என்று பார்ப்போம்.
திறன் பேசி அல்லது கைக்கணினி உதவியுடன் கற்றல்
நீங்கள் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பினால், குறுந்தகடுகள் அல்லது புத்தகங்களை விட செயலிகளில் பல வசதிகள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமானவை அவற்றின் ஊடாடல் (interactive) பண்புகள். எங்கு சென்றாலும் இவை உங்கள் கையிலிருப்பதால் பயணம் செய்யும் போதும், வரிசையில் காத்திருக்கும் போதும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தலாம்.
திறன் பேசி அல்லது கைக்கணினிகளில் கற்பதை ஆங்கிலத்தில் MALL (Mobile Assisted Llanguage Learning) என்று சொல்கிறார்கள். இதில் பல வசதிகள் உள்ளன. நீங்கள் கற்றுக் கொள்ளும் மொழியில் ஒரு உரையாடலுக்குச் சற்று முன்னர் சட்டென்று ஒரு சிறு பயிற்சி செய்து கொள்ளலாம். உரையாடல் முடிந்தவுடன் எந்த இடத்தில் சிறு முன்னேற்றங்கள் செய்யலாம் என்று பயிற்சி செய்யலாம். மேலும், ஒத்திசைந்த குழுக்களில் கற்றல் செயல்முறையைப் பகிர்ந்து கொள்வது எளிது.
எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாகக் கற்றுக் கொள்வதில்லை, ஒரே வேகத்தில் கற்றுக் கொள்வதில்லை. எனவே, மொழி கற்றல் பயிற்சிகள், ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்திற்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். பலவீனமான இடங்களை வலுவூட்ட வேண்டும், ஏற்கனவே தெரிந்த அல்லது விரைவாகக் கற்றுக் கொண்ட தலைப்புகளைக் கடந்து செல்லலாம். ஒருவருக்குக் கடினமாக இருக்கும் அதே இடத்தில் இன்னொருவருக்கு இருப்பதில்லை. ஆகவே கற்பதற்கான வழிமுறைகளைப் பயனருக்குத் தகுந்தவாறு தனிப்பயனாக்கலாம்.
கற்றலை விளையாட்டாக ஆக்குதல்
கற்றலை விளையாட்டாக ஆக்கி மதிப்பெண் கொடுத்தால் சக மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கற்கவும் ஈடுபாடு கொள்ளவும் வாய்ப்பு அதிகம். விளையாட்டாக்குதலைத் திறம்படச் செய்ய நிறைய படைப்பாற்றலும் கற்பனையும் தேவை.
டுவோலிங்கோ (Duolingo) மற்றும் மைண்ட்ஸ்நாக்ஸ் (MindSnacks) போன்ற இயங்குதளங்கள் கற்பவர்களை ஈடுபடுத்துவதற்கும், அவர்கள் மொழியைத் திறம்படக் கற்பதற்கும் விளையாட்டாக்குதலைப் பயன்படுத்துகிறார்கள். ஈடுபாட்டு நிலைகளை விளையாட்டாக்குதல் அதிகரிக்கிறது மற்றும் “வேடிக்கைத்” தன்மை தொடர்ந்து இருப்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள்.
தொடர்ந்து பின்னூட்டங்கள் கொடுத்தல்
அடிக்கடி பின்னூட்டங்கள் கொடுப்பது மாணவர்களை சரியாக வழிநடத்தவும் தேவையான மேம்பாடுகளைச் செய்யவும் உதவுகிறது. மாணவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், பயிற்றுநர்கள் சிறந்த வழிமுறையை அடைவதற்கும் உதவும்.
பல்வேறு இணையக் கருவிகள் கல்வியாளர்களை நேரடியாக தனிப்பட்ட கருத்துகளை வழங்க அனுமதிக்கின்றன, இதனால் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடங்களில் எளிதாக உடன் அடையாளம் காட்ட முடியும்.
மொழிப் பயிற்சிக்கு டுவோலிங்கோவும் (Duolingo) மெம்ரைசும் (Memrise) மைண்ட்ஸ்நாக்சும் (Mindsnacks)
டுவோலிங்கோவில் (Duolingo) மைண்ட்ஸ்நாக்சிலும் (Mindsnacks) இன்னும் தமிழ்ப் பயிற்சி வரவில்லை. மெம்ரைசில் ஓரளவுதான். எனினும் டுவோலிங்கோவில் 500 மில்லியன் பேருக்கு மேல் பல மொழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே நவீன தொழில்நுட்பம் பற்றி அறிய இவையே தலைசிறந்தவை. டுவோலிங்கோ திறந்த மூலம் அல்ல. ஆனால் மொழியை இலவசமாகக் கற்றுக் கொள்ளலாம். ஆன்டிராய்டு, ஐபோன், ஐபாட் செயலி அல்லது இணைய தளத்தில் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் விளம்பரங்கள் வரும். கட்டணம் கட்டினால் விளம்பரங்கள் வராது. தன்னார்வலர்கள் பங்களிப்பை வைத்து, இந்தி பேசுபவர்கள் ஆங்கிலம் பயில்வதும் சேர்த்து, இதுவரை 73 மொழி இணைகள் வந்து விட்டன. தமிழ் பேசுபவர்கள் ஆங்கிலம் பயில வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் பயிற்சிக்கு வேலை தொடங்கவில்லை.
உள்நுழையும்போது நீங்கள் என்ன கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பதற்கான ஒரு வரைபடத்தை முகப்புத் திரையில் காட்டுகிறது. அடுத்து உங்களுடைய இலக்கை உள்ளிடும்படி அறிவுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு நாளும் கற்பது, நாளொன்றுக்கு 30 புள்ளிகள் சம்பாதிப்பது. ஒரு பாடத்துக்கு பத்து புள்ளிகள் சுமார் ஐந்து நிமிடங்கள் எடுக்கும். உங்கள் இலக்குகளை நீங்கள் அடைந்தால், திரையில் மகிழ்ச்சியான செய்திகளை அளிப்பதுடன் கூடுதல் உள்ளடக்கங்களையோ அல்லது அம்சங்களையோ அணுக வழி செய்கிறது.
பயிற்சிகள் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. உங்கள் முன்னேற்றம் படி சரியான நேரத்தில் சொற்கள் மற்றும் கருத்தாக்கங்கள் அறிமுகப்படுத்தப்படும். பன்முகத் தெரிவு வினாக்கள், ஒலியைக் கேட்டு எழுதும் பயிற்சிகள், மொழிபெயர்ப்பு பயிற்சிகள் மற்றும் பேச்சுப் பயிற்சிகள் ஆகியவையும் உள்ளன. இம்மாதிரிப் பயிற்சி புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்குபவர்களுக்கு மிகவும் பொருத்தமானது
மெம்ரைசு ஒரு சொல்லை அதன் பொருளுடன் இணைக்கப் பல உத்திகளைக் கையாளுகிறது. ஒரு பொதுவான எடுத்துக்காட்டு புதிய சொற்களை ஞாபகப்படுத்த உதவுவதற்கு நினைவூட்டல்கள்.
தமிழ் கற்க மற்ற செயலிகளும் இணைய தளங்களும்
தமிழை சீக்கிரம் கற்றுக்கொள்ளுங்கள் (Learn Tamil Quickly) சுமார் அரை மில்லியன் பேர் பதிவிறக்கி 5000 பேர் தரமதிப்பீடு செய்து 5 க்கு 4.3 வாங்கி முதலிடத்தில் உள்ளது “தமிழை சீக்கிரம் கற்றுக்கொள்ளுங்கள் Learn Tamil Quickly” செயலி. ஆன்டிராய்டு மற்றும் ஐபோன் / ஐபாட் ஆகியவற்றின் செயலிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் பாடங்களில் விளம்பரங்கள் உண்டு. வினாடி-வினாக்கள், நினைவூட்ட அட்டைகள் (flash cards) மற்றும் உங்கள் சொந்த சொற்றொடர்களை பதிவு செய்வதன் மூலம் கற்கலாம். உடல், நேரம், கால அட்டவணை, நிறங்கள், திசைகள், உடல்நலம் போன்ற 33 பிரிவுகளில் 1200 க்கும் மேல் தமிழ்ச் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவர்களின் தெளிவான உச்சரிப்பின் தரமான ஒலிப்பதிவு உங்கள் உச்சரிப்பு மற்றும் நேர்த்தியான குரல் ஒலிக்கும் உதவும். மற்றும் கேலு (Kelu) செயலியை சுமார் நூறாயிரம் பேர் பதிவிறக்கி 800 பேர் தரமதிப்பீடு செய்துள்ளனர்.
“தமிழ் 2.0 தமிழ் எழுத்துகள்” ஆன்டிராய்டு செயலி நினைவூட்ட அட்டைகள் மூலம் தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொள்ள உதவும். இது சிறுவர்களுக்குப் பிடித்த மாதிரி அசைவூட்டம் மற்றும் ஊடாடல் கொண்டது.
இந்தப் பாடத்திட்டங்கள் மூலம் ஓரளவு முன்னேற்றம் அடைந்தபின், உங்கள் சொற்களஞ்சியம் அதிகரித்து, ஏற்கனவே நீங்கள் கற்றுக்கொண்டதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்ற ஒரு நிலையை நீங்கள் அடைவீர்கள். இதற்கு மனப்பாடம் செய்ய உதவும் திறந்த மூல செயலி ஆன்கி ஏற்றது. மற்றவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சொல் பட்டியலைப் பதிவிறக்கி உங்களுக்குப் பிடித்தவாறு மாற்றலாம், அல்லது உங்கள் சொந்தச் சொல் பட்டியலை உருவாக்கலாம். இணையதளம் மற்றும் ஆன்ட்ராய்டு, ஐபோன் செயலிகள் உள்ளன.
நீங்கள் ஒரு ஆசிரியருடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ இருந்தால், அவர்கள் உங்கள் உச்சரிப்பைக் கேட்டுத் திருத்த முடியும். அது இல்லாவிட்டால், கூகிள் ஜிபோர்ட்டில் (GBoard) தமிழ் சொல்வதெழுதல் (dictation) திறன் உள்ளது. இதை ஆன்ட்ராய்டு, ஐபோன், ஐபாடில் நிறுவலாம். இதில் உங்கள் உச்சரிப்பை முயற்சி செய்து, சரியான சொற்களை அடையாளம் காண்பதை உறுதி செய்யலாம்.
நீங்கள் எப்படியும் இசையைக் கேட்கிறீர்கள், அதேபோல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியையும் பார்க்கிறீர்கள். ஓரளவு பரிச்சயமானபின், இதை ஏன் கற்றுக்கொள்ளும் புது மொழியில் செய்யக்கூடாது? நீங்கள் முதலில் புரிந்து கொள்ளப் போவதில்லை, ஆனால் இந்தக் கட்டத்தில் அது அவ்வளவு முக்கியம் இல்லை. இங்கே நாம் செய்ய முயற்சிப்பது ஒரு புதிய மொழியின் நுணுக்கங்களில் காதுகளுக்குப் பயிற்சி கொடுப்பதுதான்.
————-
இத்தொடரில் அடுத்த கட்டுரை: தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம்
விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுதி அல்லது தமிழாக்கம் செய்து பழகிக் கொள்ளுங்கள். கட்டற்ற திறந்த மூல மென்பொருட்களின் பயனர் இடைமுகம் மற்றும் கையேடுகள் எழுதலாம் அல்லது தமிழாக்கம் செய்யலாம். உங்களுக்கு மிகவும் பிடித்த நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள். கணினி உதவி மொழிபெயர்ப்பு.