மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – Musings on Linux and Open Source by an Accidental Revolutionary – version 3.0
பேராலயமும் சந்தையும் – எரிக் ரேமண்ட் – ஒரு தற்செயலான புரட்சியாளரின் லினக்ஸ் மற்றும் திறந்த மூலம் பற்றிய சிந்தனைகள் – பதிப்பு 3.0
தமிழாக்கம்: இரா. அசோகன் ashokramach@gmail.com
உங்கள் கைகளில் உள்ள புத்தகம் கணினி நிரல் எழுதுவதில் வல்லுநர்கள் செயல்படும் முறை மற்றும் கலாச்சாரம் பற்றியது. இது நிரலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மேலாளர்களுக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வாசகராகிய நீங்கள் கேட்கக்கூடிய கண்கூடான (எனினும் முற்றிலும் நியாயமான) கேள்வி: “நான் ஏன் இதில் அக்கறை காட்ட வேண்டும்?”
உலகப் பொருளாதாரத்தில் கணினி மென்பொருள் மிக முக்கியமான அம்சமாகி விட்டது
இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் என்னவென்றால், உலகப் பொருளாதாரத்திலும் வணிக நிறுவனங்களின் வியூகக் கணக்கீடுகளிலும் கணினி மென்பொருள் மிக முக்கியமான அம்சமாகி விட்டது. இந்நூலை நீங்கள் படிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால் தகவல் பொருளாதாரம், எண்ணிம யுகம் மற்றும் இணைய உலகம் பற்றிய இன்றைய பல உண்மைகளை நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். நான் அவற்றை இங்கு திரும்பக் கூற மாட்டேன். சிறந்த தரமான, அதி நம்பகமான மென்பொருளை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய நமது புரிதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தால் அது மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திறந்த மூலம் செலவையும் குறைத்து மென்பொருள் தரத்தையும் மேம்படுத்துகிறது
இந்நூலில் உள்ள கட்டுரைகள் அத்தகைய அடிப்படை முன்னேற்றத்தைப் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இவை ஒன்றை விவரிக்கின்றன. அதுதான் திறந்த மூல மென்பொருள். அதாவது திறந்த மேம்பாட்டை முறையாகப் பயன்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் செலவையும் குறைத்து மென்பொருள் தரத்தையும் மேம்படுத்துவதற்காக பரவலாக்கப்பட்ட சக ஆய்வு (decentralized peer review). திறந்த மூல மென்பொருள் ஒரு புதிதாக உதித்த யோசனை அல்ல (அதன் மரபுகள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் தொடக்கத்திற்குச் செல்கின்றன). ஆனால் சமீபத்தில்தான் தொழில்நுட்ப மற்றும் சந்தை சக்திகள் ஒன்றிணைந்து அதை ஒரு குறுகிய பங்கிலிருந்து பரவலாக வெளியே கொண்டுவந்துள்ளன. இன்று திறந்த மூல இயக்கம் அடுத்த நூற்றாண்டின் கணினிசார் உள்கட்டமைப்பை (computing infrastructure) வரையறுக்க வலுவாக முனைகிறது. இது கணினியை நம்பியிருக்கும் யாவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சங்கதி.
கொந்தர்கள் (hackers) லினக்ஸ் மற்றும் பல திறந்த மூல மென்பொருட்களை உருவாக்குகிறார்கள்
நான் “திறந்த மூல இயக்கம்” என்று குறிப்பிட்டேன். வாசகர் இதில் அக்கறை காட்ட இன்னும் ஆர்வமூட்டும் காரணங்கள் உள்ளன என்பதை இது கோடி காட்டுகிறது. திறந்த மூலம் என்ற நூதன எண்ணம் இந்த முப்பது வருடங்களாக இணையத்தைச் சார்ந்த ஒரு தீவிரமான மரபினரால் பின்பற்றப்பட்டு, நடைமுறையில் நிகழ்த்தப்பட்டு, போற்றப்பட்டது. தங்களைப் பெருமையுடன் “கொந்தர்கள் (hackers)” என்று அழைத்துக்கொள்ளும் நபர்கள் இவர்கள்தான். இப்போது ஊடகங்கள் இச்சொல்லைக் கணினிக் குற்றவாளி (computer criminal) என்று பொருள்பட முறை தவறிப் பயன்படுத்துகிறார்கள். இவர் ஓர் ஆர்வலர், ஒரு கலைஞர், ஒரு நோண்டி (tinkerer), பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர், ஒரு நிபுணர்.
கொந்தர்களின் மரபினர், கடினமான தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பெரும்பான்மையின் அலட்சியம் மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராகப் பல பத்தாண்டுகளாகத் தெளிவற்ற நிலையில் போராடி, சமீபத்தில்தான் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இவர்கள் இணையத்தை உருவாக்கினர்; இவர்கள் யூனிக்ஸ் (Unix) கட்டுமானம் செய்தனர்; இவர்கள் உலகளாவிய வலையை உருவாக்கினர்; இவர்கள் இன்று லினக்ஸ் மற்றும் திறந்த மூல மென்பொருளை உருவாக்குகிறார்கள். மேலும், 1990 களில் ஏற்பட்ட அதீத இணைய வளர்ச்சியைத் தொடர்ந்து, உலகின் பிற பகுதிகள் இறுதியாக இவர்கள் மீது முன்னதாகவே அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று கண்டறிந்துள்ளனர்.
எதிர்காலத்தில் வாழ்ந்து வேலை செய்ய வேண்டிய யாவருக்கும் கொந்தர் கலாச்சாரம் ஆர்வமூட்டும்
கொந்தர் கலாச்சாரம் மற்றும் அதன் வெற்றிகள் மனித உந்துதல், வேலையின் அமைப்பு, தொழில்முறையின் எதிர்காலம் மற்றும் நிறுவனத்தின் வடிவம் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளை முன்வைக்கிறது. மேலும் 21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் உள்ள தகவல் வளம் மிகுந்த, பற்றாக்குறைக்குப் பிந்தைய பொருளாதாரங்களில் இவை அனைத்தும் எவ்வாறு மாறும் மற்றும் பரிணமிக்கும் என்ற கேள்வி எழுகிறது. மனிதகுலம் தங்கள் பொருளாதாரச் சூழலுடன் தொடர்பு கொள்ளும் மற்றும் மறுவடிவமைக்கும் விதத்தில் சில ஆழமான மாற்றங்களுக்கு முன்னோடியாகக் கொந்தர் கலாச்சாரம் இருக்கக்கூடும். கொந்தர் கலாச்சாரத்தைப் பற்றி நமக்குத் தெரிய வந்தது எதிர்காலத்தில் வாழ்ந்து வேலை செய்ய வேண்டிய யாவருக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும்.
ஏதாவது உங்களுக்குப் புரியாவிட்டால் அவற்றைத் தயங்காமல் ஒதுக்கி முன்செல்லவும்
இந்நூல் முதலில் இணையத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. கொந்தராட்சியின் சுருக்கமான வரலாறு (A Brief History of Hackerdom) முதலில் 1992 இல் வெளியிடப்பட்டது, ஆனால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு திருத்தப்பட்டது. மற்றவை பிப்ரவரி 1997 மற்றும் மே 1999 க்கு இடையில் எழுதப்பட்டன. அவை அக்டோபர் 1999 இல் முதல் பதிப்பிற்காக ஓரளவு திருத்தப்பட்டு விரிவாக்கப்பட்டன. மேலும் ஜனவரி 2001 இரண்டாவது பதிப்பிற்காக மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் தொழில்நுட்ப சொல்லாட்சியை அகற்றவோ அல்லது பொது வாசகர்களுக்காக அவற்றை அதிகம் அணுகக்கூடியதாக (அறிவார்ந்த கருத்துகளை எளிதாக்குதல் போன்ற) தீவிர முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. வாசகர்களை சலிக்கவைத்து அவமானப்படுத்துவதை விட புதிர் போட்டு சவால் விடுவது மரியாதைக்குரியது என்று நான் நினைக்கிறேன். குறிப்பிட்ட தொழில்நுட்ப அல்லது வரலாற்றுக் கருத்துகள் அல்லது ஏதாவதொரு கணினி அஃகுப்பெயர் (acronym) உங்களுக்குப் புரியாவிட்டால், அவற்றைத் தயங்காமல் ஒதுக்கி முன்செல்லவும். முழு நூலும் ஒரு கதையைச் சொல்கிறது. மேலும் உங்களுக்குப் பின்னர் தெரியவருவது முன்னர் உங்களுக்குப் புரியாததைத் தெளிவுபடுத்தக்கூடும்.
இக்கட்டுரைகள் உருவாகி வரும் ஆவணங்கள் என்பதையும் வாசகர் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைப்பற்றிக் கருத்து எழுதும் அல்லது சரிசெய்யும் நபர்களின் பின்னூட்டங்களின் முக்கிய முடிவுகளை நான் அவ்வப்போது இணைக்கிறேன். இந்நூலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு. எனினும், இது திறந்த மூல மென்பொருள் போன்ற ஒரு சக மதிப்பாய்வு செயல்முறையால் பயனடைந்துள்ளது. மேலும் இங்கு பட்டியலிட முடியாத அளவுக்கு அதிகமான நபர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கியது. இப்பதிப்புகள் நிலையான அல்லது இறுதி வடிவங்கள் அல்ல. மாறாக, இவை விவரிக்கும் கலாச்சாரத்தின் பல உறுப்பினர்கள் பங்கேற்கும் தொடர்ச்சியான விசாரணையின் அறிக்கைகளாக இவை கருதப்பட வேண்டும்.
இறுதியாக, இந்நூலுக்கு வழிவகுத்த பலருக்கும் மற்றும் தொடர்ந்து நல்வாய்ப்பாகக் கூடிவந்த சூழ்நிலைகளுக்கும் எனது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்….
நீண்ட கால நட்பு மற்றும் இந்நூலின் உள்ளடக்க வேலைகளுக்கு ஆதரவளித்தவர்களுக்கு சில குறிப்பிட்ட நன்றிகள். நன்றி, லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds). நன்றி, லேரி அகஸ்டின் (Larry Augustin). நன்றி, டாக் சியர்ல்ஸ் (Doc Searls). நன்றி, டிம் ஓ’ரெய்லி (Tim O’Reilly). நீங்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் என்று அழைப்பதில் நான் பெருமைப்படுகிறேன். குறிப்பாக: நன்றி, கேத்தரின் ரேமண்ட் (Catherine Raymond) — என் அன்பு மனைவி மற்றும் எனது நீண்ட கால ஆதரவாளர்.
நான் ஒரு கொந்தர்
நான் ஒரு கொந்தர். இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறேன். அந்த நேரத்தில், உலகிலுள்ள சில சுவாரசியமான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த மனிதர்களுடன் வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும், ஆர்வத்தைத் தூண்டும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் (ஒரு சில சந்தர்ப்பங்களில்) உண்மையிலேயே புதிய மற்றும் பயனுள்ளவற்றை உருவாக்குவதற்கும் எனக்குப் பாக்கியம் கிடைத்தது. மதிப்புமிக்க பாடங்கள், நாங்கள் பகிர்ந்த கைத்திறன் மற்றும் பல சங்கதிகளைப் பற்றி இங்கே பெயரிட இயலாத பலர் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். இந்நூலில் உள்ள கட்டுரைகள் அவர்களுக்கு எனது நன்றிக்கடன்.
இக்கட்டுரைகள் எனக்கும் கண்டுபிடிப்பின் கட்டங்களாக இருந்தன. இவை ஒரு கவர்ச்சிகரமான பயணத்தின் அறிக்கைகள் போன்றவை. இப்பயணத்தில் நீண்ட காலமாகப் பழகியவற்றைப் புதிய ஆழமான கண்ணோட்டத்தில் பார்க்கக் கற்றுக்கொண்டேன். இப்பயணத்தைப் பற்றிய என் அறிக்கைகள் திறந்த மூலம் பெரும்பான்மை நடைமுறையில் வருவதற்கு ஊக்கமளிக்கும் விளைவை ஏற்படுத்தியது என்பது அப்போது மட்டுமல்ல தொடர்ந்து எனக்கு பிரமிப்பை அளிக்கிறது. எனது பயண அனுபவங்களைப் படிப்பவர்கள் இப்பயணத்தின் உற்சாகத்தையும் பெரும்பான்மை வணிக உலகும் நுகர்வோரும் இதே பாதையில் தங்கள் முதல் அடிகளை எடுத்து வைப்பதால் இன்று நம் முன் விரியும் அற்புதமான வாய்ப்புகளைப் பற்றிய உற்சாகத்தையும் பகிர முடியுமென்று நம்புகிறேன்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பேராலயமும் சந்தையும்
நூல் சுருக்கம். பேராலயமும் சந்தையும். சிக்கலான மென்பொருட்களுக்கு பேராலயங்களைப் போல மையக் கட்டுப்பாடும் திட்டமிட்ட அணுகுமுறையும் தேவை என்று நான் நம்பினேன். இரைச்சல் மிகுந்த சந்தைக்கடையாக இருந்த லினக்ஸ் சமூகம் மிக நன்றாக வேலை செய்வது ஆச்சரியமாக இருந்தது. சந்தை பாணியில் ஒரு திறந்த மூல திட்டத்தை இயக்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சந்தை பாணியில் நான் இயக்கிய அந்தத் திறந்த மூல திட்டத்தின் கதைதான் இந்நூல்.