தொழிற்சாலைகளில் உற்பத்தியின்போது கீழ்க்கண்ட அம்சங்களை அளவிட சீரொளி உணரிகளைப் பயன்படுத்தலாம்:
- உளது அல்லது இருப்பது (presence)
- இடப்பெயர்ச்சி (displacement)
- தூரம் (distance)
- இருப்பிடம் (position)
- தடிப்பளவு (thickness)
ஒரு பொருள் இருப்பதையும் (presence) இல்லாததையும் (absence) கண்டறிதல்
குறைந்த தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டறியக்கூடிய அருகாமை உணரிகளைப் (inductive proximity sensors) பயன்படுத்தலாம். ஒளிமின்னழுத்த (Photoelectric) உணரிகள் ஒரு பொருள் இருப்பது அல்லது இல்லாததைக் கண்டறிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஆனால் கண்ணாடி அல்லது நெகிழி (plastic) குடுவை போன்ற ஒளிபுகும் பொருட்களைக் கண்டறிய இவை நம்பகமான வேலை செய்வதில்லை.
தூரம் (distance) மற்றும் இருப்பிடத்தை (position) அளவிடுதல்
நில அளவை (land survey) எடுக்கும் போது ஒரு தெரிந்த நீளமுள்ள நேர்கோட்டை ஆதாரமாக வைத்துக்கொள்வார்கள். அதன் இரு முனையிலிருந்தும் தூரத்திலுள்ள புள்ளியின் கோணத்தைத் துல்லியமாக அளவிடுவார்கள். இவ்வாறு முக்கோணத்தின் ஒரு பக்கமும் இரண்டு கோணங்களும் தெரியவரும். ஆகவே மற்ற இரண்டு பக்கங்களின் நீளத்தைக் கணக்கிடலாம். இதை முக்கோணமுறை அளவீடு (triangulation) என்று சொல்கிறோம். சீரொளி உணரி இந்த முக்கோணமுறை அளவீட்டைத்தான் தூரம் (distance) மற்றும் இருப்பிடம் (position) அளவிடப் பயன்படுத்துகிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: இடர்மிகுந்த வேலைகளில் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு
சுரங்கப் பணியாளர்களின் உயிர் காக்கும் கேனரி (canary) பறவை. தொழில்நுட்ப ரீதியான கேனரி. இடர்பாடான முறைகளில் வேலை செய்கிறார்களா எனக் கண்காணித்தல்.