எளிய தமிழில் IoT 20. பழுதடைவதை முன்னறிந்து பராமரித்தல் (Predictive maintenance)

பழுதடைந்தவுடன் பராமரித்தல் (Breakdown Maintenance)

தொழிற்சாலைகளில் சிலநேரங்களில் எந்திரங்களின் மின்பொறி (electric motor) அளவுக்கு மேல் சூடாகி எரிந்து போய் விடுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதிக செலவு செய்து செப்புக்கம்பியை மீள்சுற்று (rewinding) செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. உறுதி கூறிய நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க இயலாமல் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரலாம். இதைத் தவிர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று பார்க்கலாம்.

பழுதடைவதைத் தவிர்க்கப் பராமரித்தல் (Preventive Maintenance)

கவனமாக மேலாண்மை செய்யும் நிறுவனங்கள் பழுதடைவதைத் தவிர்க்கும் வகையில் கால அட்டவணை போட்டு பராமரிப்பு வேலைகளைச் செய்வார்கள். இது உங்கள் கார், மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் சர்வீஸ் செய்வது போலத்தான். முன் அனுபவத்தை வைத்து எவ்வளவு ஓடியவுடன் சர்வீஸ் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்று முடிவு செய்வார்கள். ஆனால் இது சராசரியை வைத்து முடிவு செய்வது. பல நேரங்களில் தேவையற்ற சர்வீஸ் செய்து கொண்டிருப்போம்.

பழுதடையக்கூடுமென முன்னறிந்து அதைத் தடுக்கப் பராமரித்தல் (Predictive Maintenance)

பழுதடையக்கூடுமென முன்னறிந்து அதைத் தடுக்கப் பராமரித்தல்

பழுதடையக்கூடுமென முன்னறிந்து அதைத் தடுக்கப் பராமரித்தல்

மேற்கண்டவாறு மின்விசை எரிந்து போய் விட்டால், அடடா, மின்விசை சூடாகிறது என்று முன்னெச்சரிக்கை கிடைத்திருந்தால் தடுத்திருக்கலாமே என்றுதானே தோன்றும். IoT அமைப்பு மூலம் இம்மாதிரி முன்னெச்சரிக்கை கிடைக்க வழி செய்யலாம். இதில் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, இயந்திரங்கள் பழுதடைவதற்கான காரணங்களைக் கண்காணிக்கலாம்:

  • உயவிடல் (Lubrication)
  • மின்சார ஓட்டம் (Current flow)
  • மின்னழுத்தம் (Voltage)

இரண்டாவது, இயந்திரங்கள் பழுதடையுமுன் ஏற்படும் குறிகாட்டிகளைக் (Indicators) கண்காணிக்கலாம்:

  • வெப்பநிலை (Temperature)
  • இரைச்சல் (Noise)
  • அதிர்வு (Vibration)

இவற்றைவிட மேலாக இரண்டையுமே கண்காணிக்கலாம்.

இதேபோல காற்றுக்குமிழி அரிமானம் (cavitation erosion) என்பது பம்புகளில் அடிக்கடி ஏற்படக்கூடிய பிரச்சினை. இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பம்புகளில் திடீரென்று ஏற்படக்கூடும் மற்றும் விரைவில் உட்பாகங்களை சிதைத்துவிடும். நீங்கள் கால அட்டவணை போட்டு இவற்றைக் கவனமாக ஆய்வு செய்யும்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரே மாதத்தில் பிரச்சினை திடீரென ஏற்பட்டு பம்பு வீணாகிவிடக்கூடும். உணரிகள் பொருத்தி, தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமே இம்மாதிரிப் பிரச்சினைகளைக் கண்டுபிடித்துத் தவிர்க்க முடியும்.

நன்றி

  1. A Complete Guide To Predictive Maintenance

இத்தொடரில் அடுத்த கட்டுரை: சீரொளி (Laser) உணரிகள்

ஒரு பொருள் இருப்பதையும் (presence) இல்லாததையும் (absence) கண்டறிதல். தூரம் (distance) மற்றும் இருப்பிடத்தை (position) அளவிடுதல்.

ashokramach@gmail.com

%d bloggers like this: