தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா?

ஆங்கிலம் மற்ற மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கிறதா?

உலகமயமாக்கல், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பேரலைகளின் மேல் ஏறி உலகில் இதுவரை எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. சீன அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் வேற்று மொழியாளர்களுடன் பேசும் போது அவர்களும் ஆங்கிலம்தான் பேச வேண்டியிருக்கிறது. மேலும் பிணைப்பு பெருகி வரும் உலகின் குடிமக்களாக ஆக்குவதற்காக அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். “அனைவருக்கும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகி விட்டது” என்று கலிபோர்னியாவில் இர்வின் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் தகவல் தொடர்புத்துறை பேராசிரியரான மார்க் வார்ஷூவர் கூறுகிறார். “உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் கல்வி பயின்றவர் என்றால் ஆங்கிலம் தெரிந்தவர் என்ற நிலை வந்துவிட்டது.”

ஆங்கில ஆதிக்கமும் உலகமயமாக்கலும் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் பரவின. “உலகளாவிய மொழி ஒன்று இருப்பது உலகமயமாக்கலுக்கு உதவியது, உலகமயமாக்கல் உலகளாவிய மொழியை ஒருங்கிணைத்தது,” என்று வார்ஷூவர் கூறுகிறார். தொடர்ச்சியாக ஆங்கில மொழி பேசும் இரண்டு பேரரசுகள், ஆங்கிலேயர்கள் மற்றும் அமெரிக்கர்களின் ஆதிக்கத்தில் அந்தப் போக்குத் தொடங்கி இன்று இணையத்தின் புதிய மெய்நிகர் பேரரசு மூலம் தொடர்கிறது.

பரவலாக ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்கத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், துரித உணவகங்கள் மற்றும் நுகர் பொருட்கள் ஆகியவை அமெரிக்க கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்டி பிற நாடுகளின் பாரம்பரிய கலாச்சாரங்களை முற்றுகையிடுகின்றன. இதைவிட முக்கியமாக இவை இளைய தலைமுறையினரை எளிதில் வயப்படுத்தத்தக்க வயதில் கவர்ந்து வாழ்நாள் முழுவதும் ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. இந்த இருண்டு வரும் ஆங்கில மொழி ஆதிக்கமென்ற மேக மூட்டத்தின் கீழ் மாட்டிக்கொண்ட தமிழ் போன்ற மொழிகளுக்கு சிறு கீற்றொளிக்குக் கூட வழி கிடையாதா?

பிரான்ஸ் எக்காலத்திலும் ஒரு ஆங்கில மொழி பேசும் நாடாக மாறப்போவதில்லை

ஒரு பிரபலமான விவாதக்குழுவில் “ஆங்கிலம் மற்றெல்லா மொழிகளையும்  அழிக்கிறதா?” என்ற கேள்விக்கு ஒருவர் கூறுகிறார், “இந்தக் கேள்வியின் பிற பதில்கள் ஆங்கில ஆக்கிரமிப்பின் மற்ற விளைவுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் பிரான்ஸ் எக்காலத்திலும் ஒரு ஆங்கில மொழி பேசும் நாடாக மாற வாய்ப்பேயில்லை. சீனா, ரஷ்யா, தாய்லாந்து போன்ற ஆங்கில மொழி பேசாத மற்ற நாடுகளும் இதேபோல்தான். ஆகவே நாடுகள் இருக்கும் வரை ஆங்கில கலாச்சார ஆதிக்கம் வளரக்கூடும், ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் வளர வாய்ப்பில்லை.”

15 ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழிக்கு ஒளிமயமான எதிர்காலம் என்றுதான் எண்ணினார்கள்!

“15 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் மனநிலையில் இருந்தால் லத்தீன் மொழிக்கு எதிர்காலம் மிகவும் ஒளிமயமாக இருக்கிறது என்றுதான் நினைப்போம்” என்று லத்தீன் வரலாற்றை எழுதிய நிக்கோலஸ் ஓஸ்ட்லர் கூறுகிறார். இன்று கத்தோலிக்க தேவாலயத்தின் வழிபாட்டு மொழியாக மட்டுமே லத்தீன் பிழைத்துள்ளது. “20-ஆம் நூற்றாண்டின் உலகின் மனநிலையில் நீங்கள் இருந்தால், ஆங்கில மொழிக்கு எதிர்காலம் மிகவும் ஒளிமயமாக இருக்கிறது என்று நினைப்பதும் அதேபோல்தான்.” ஆனால் நிக்கோலஸ் ஓஸ்ட்லர் மாதிரி நினைப்பவர்கள் மிகச் சிறுபான்மையிலேயே இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவர உதவிய அதே தொழில்நுட்பமே அதை மீண்டும் கீழே இழுக்கவும் முடியும்

இறுதியில் ஆங்கிலத்தை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவர உதவிய அதே தொழில்நுட்பமே அதை மீண்டும் கீழே இழுக்கவும் முடியும் என்று ஓஸ்ட்லெர் கூறினார். கூகிள், மைக்ரோசாப்ட் பிங் மற்ற பெரிய நிறுவனங்களின் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் ஏற்கெனவே ஓரளவு நன்றாக வேலை செய்கின்றன. இறுதியில் ஒரு அதி உன்னத மொழிபெயர்ப்பு இயந்திரத்தை உருவாக்கி விட்டால் ஒரு பொதுவான மொழி தேவையற்றது என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. “முன்னேற்றம் வர வர, இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் தானியங்கி உரை விளக்கம் பற்றிய பிரச்சினைகள் தீர்ந்துவிடும்,” என்று ஓஸ்ட்லெர் கூறினார், “தொழில்நுட்ப ரீதியாக ஒரு பொதுவான மொழி தேவையற்றுப் போய்விடும்.”

நீங்கள் ஒரு திருப்பூர் பின்னிய உள்ளங்கி வழங்குநர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் திறன்பேசியை எடுத்து ஜெர்மனியில் உள்ள உங்கள் வாடிக்கையாளரைக் கூப்பிடுகிறீர்கள். அவர்கள் எடுத்தவுடன் நீங்கள் தமிழில் பேசுகிறீர்கள், அவர்களுக்கு ஜெர்மானிய மொழியில் கேட்கிறது. அவர்கள் ஜெர்மானிய மொழியில் பதில் சொல்ல உங்களுக்குத் தமிழில் கேட்கிறது. இவ்வாறே பேசி வணிக வேலைகளை முடிக்க முடியுமென்றால் ஆங்கிலக் கல்வி தேவையற்றுப் போகாவிட்டாலும் அவசியம் குறைந்து விடுமல்லவா? அவரவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே பேசலாமே! இந்த நிகழ்வோட்‌டம் ஒரு காலத்தில் கேட்டால் அறிவியல் புனைகதை போல இருந்தது. ஆனால் இன்று சந்தையில் வந்திருக்கும் பயணத்திற்கான மொழிபெயர்ப்புச் செயலிகளைப் பார்த்தால் அந்த நாள் வெகு தூரத்திலில்லை என்றே தெரிகிறது.

ஆங்கிலமா, சீன மொழியா?

ஆங்கிலமா, சீன மொழியா?

அடுத்த குறிக்கோள் பத்தாயிரம் கன்பூசியஸ் சீன மொழி கல்விக் கூடங்கள் நிறுவுவதா?

2008 இல் நிக்கோலஸ் ஆஸ்ட்லெர் ஃபோர்ப்ஸ் இதழில் ஒரு கட்டுரை எழுதினார். இதில் சீன மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உலகெங்கிலும் 100 கன்பூசியஸ் கல்விக் கூடங்கள் நிறுவும் திட்டத்தின் மூன்றில் ஒரு பகுதியாக சீனா உள்ளது என்றார். அப்போது 23 நாடுகளில் இக்கல்விக் கூடங்கள் இருந்தன. இது 2010 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 100 மில்லியன் மக்கள் சீன மொழியைப் படிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதி. 2014 இல் ஆறு கண்டங்களில் 480 க்கும் மேற்பட்ட கன்பூசியஸ் கல்விக் கூடங்கள் வந்து விட்டன. 2020 ஆம் ஆண்டுக்குள் 1,000 கன்பூசியஸ் கல்விக் கூடங்கள் நிறுவுவதே இவர்களது இப்போதைய குறிக்கோள்.

சீன மொழி உலகளாவிய மொழியாக ஆங்கிலத்தின் இடத்தைப் பிடிக்குமா?

சிங்கப்பூரில் ஒரு பல்லூடக நிறுவனத்தை நடத்தும் லீ ஹான் ஷி, சீனாவில் வணிகம் செய்ய மேற்கத்திய வாடிக்கையாளர்களை அழைத்து வருகிறார். இவருக்கு வணிக ரீதியில் ஆங்கிலம் அவ்வளவு முக்கியமில்லை என்று கூறுகிறார். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் தான், ஆனால் நீங்கள் சீன மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். சீனாவின் பொருளாதார வலிமை வளர்ந்து வரும் நிலையில், சீன மொழி ஆங்கிலத்தை முந்தி விடும் என்று லீ நம்புகிறார். ஏற்கனவே இதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் ஆங்கில மொழிச் சரிவு அமெரிக்க டாலரின் வீழ்ச்சியைத் தொடரும் என்றும் நம்புகிறார். நாடுகளிடையே பரிவர்த்தனைக்கான அடுத்த நாணயமாக டாலருக்குப் பதிலாக சீன நாணயமான ரென்மின்பி மாறினால், நீங்கள் சீன மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். பிரேசில் மற்றும் சீனா போன்ற இடங்களில், அமெரிக்க டாலர் பயன்படுத்தாமல் ரென்மின்பியில் வணிகம் செய்து வருவதால், ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மற்ற வெளிநாட்டு மொழிகளுடன் ஒப்பிடும்போது சீன மொழியைக் கற்றுக்கொள்வது மிகக் கடினம்தான். ஆனால் தொழில்நுட்பம் இதை எளிதாக்க உதவுகிறது. டாக்டர் விக்டர் மேயர் தனது மொழி பற்றிய பதிவில் நவீன எண்ணிம கருவிகள் சீன மொழியின் ஆய்வு மற்றும் பயன்முறையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை விவாதிக்கிறார். எடுத்துக்காட்டாக, எழுதுவதை நம் சாதனங்கள் கையாளும் போது, நாம் ஏன் ஆயிரக்கணக்கான எழுத்துக்குறிகளை மீண்டும் மீண்டும் எழுதிப் பழக வேண்டும்? நம்முடைய நேரத்தை நடைமுறையில் பேசுவதிலும் நமது சொல்லகராதியைப் பெருக்குவதிலும் அதிகம் செலவழிக்கலாமே என்கிறார்.

————————–

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி?

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. கடந்த முன்னூறு ஆண்டுகளில் கட்டலான் மொழி இருமுறை தடை செய்யப்பட்டது. இருப்பினும் இன்று கட்டலான் மொழியின் நிலை, மக்கள் தொகை மற்றும் மொழியின் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், எதிர்பார்ப்பதை விடச் சிறந்த வடிவில் உள்ளது. இதன் மூலகாரணங்களை ஆராய்வோம்.

%d bloggers like this: