சிட்டங்கட்டல் (Sintering) முறையில் துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்கலாம் என்று பார்த்தோம். உலோகம் போன்ற துகள்களை படிவம் படிவமாக உருக்கி இணைப்பதன் (Powder bed fusion) மூலமும் உருக்கிப் பீச்சுதல் (Material Jetting) மூலமும் நமக்குத் தேவையான வடிவங்களை உருவாக்கலாம்.
உலோகங்களை இளக்குவதும், கையாளுவதும் மிகக் கடினமான வேலை
வெப்பத்தால் இளகும் நெகிழிகள் (thermoplastics) பெரும்பாலும் 110 முதல் 200 பாகை செல்சியசில் இளகத் தொடங்கும். சுமார் 150 முதல் 300 பாகை செல்சியசில் திரவமாகும். ஆனால் உலோகங்களோ 600 முதல் 2000 பாகை செல்சியசில்தான் திரவமாகும். ஆகவே நெகிழிகளுடன் ஒப்பிடும்போது உலோகங்களை இளக்குவதும், கையாளுவதும் அவ்வளவு எளிதான வேலையல்ல. எனினும் பல தயாரிப்புகளில் உலோகத்தின் வலுவும், விறைப்பும், வெப்பத்தைத் தாங்கும் திறனும் தேவைப்படுகின்றன.
மூலப்பொருளை உருக்கிப் பீச்சுதல் (Material Jetting – MJ) மற்றும் இணைக்கும் பசையைப் பீச்சுதல் (Binder Jetting – BJ)
நாம் காகிதத்தில் அச்சிடப் பயன்படுத்தும் மைவீச்சு (inkjet) அச்சுப்பொறி இரு பரிமாணங்களில் மட்டுமே அச்சிடவல்லது. அதாவது காகிதத்தின் நீளம் மற்றும் அகலவாக்கில் மையை வீசும். மை பயன்படுத்தாமல் அதற்குப் பதிலாக உருக்கிய உலோகத்தை வீசவல்ல அச்சுப்பொறியைக் கற்பனை செய்து பாருங்கள். இதுதவிர ஒரு அடுக்கு முடிந்த பின்னர் அடுத்த அடுக்குக்கு உயரவாக்கிலும் நகர்ந்து உருக்கிய உலோகத்தை வீசவல்லதுதான் உருக்கி இணைக்கும் முப்பரிமாண அச்சுப்பொறி. மூலப்பொருளை உருக்கிப் பீச்சுதல் (Material Jetting – MJ) இந்த வகையைச் சேர்ந்தது. உலங்கூர்தியில் பயன்படுத்தப்படும் தாங்கி (Helicopter bracket) போன்ற அதிக பளு தாங்கும் பாகங்களையும் இம்முறையில் உருவாக்குகிறார்கள். மூலப்பொருள் துகள்களை இணைக்கும் பசையைப் பீச்சுவது (Binder Jetting – BJ) இதில் சிறிதளவு மாற்றிய செயல்முறை.
வடிவமைப்புக்கான பகுதிகளை மட்டும் சீரொளியால் உருக்குதல் (Selective Laser Melting – SLM)
இது நாம் முன்னர் பார்த்த சீரொளி நேரடி உலோக சிட்டங்கட்டல் (Direct Metal Laser Sintering – DMLS) முறையை ஒத்ததுதான். ஆனால் இந்த முறையில் தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் சீரொளியால் உருக்குகிறோம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பொருள்சேர் உற்பத்தியா, பொருள்நீக்கு உற்பத்தியா?
சிக்கலான உள் வடிவியல் கொண்ட பாகங்களுக்கு முப்பரிமாண அச்சிடல் இன்றியமையாதது. விலையுயர்ந்த மூலப்பொருட்கள் சேதமாவது குறையும். பேரளவு தயாரிப்பில் (mass production) பொருள்நீக்கு உற்பத்திதான் செலவைக் குறைக்கும். சீரான மேற்பரப்புக்கு CNC எந்திரங்கள் தோதானவை.