சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)
ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிட 10 மடங்கு நம்பகமானவை
0:00 பில் ஹியூலெட் (Bill Hewlett), டேவ் பேக்கார்ட் (Dave Packard) சேர்ந்து 1930 களில் கலிபோர்னியாவில் தங்கள் கார் கொட்டகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அவர்கள் மின் மற்றும் மின்னணு கருவிகளை உருவாக்கினர். இந்த நிறுவனம் பின்னர் HP எனப் பிரபலமானது. அவர்கள் குறைக்கடத்தி சில்லுகளுக்கான ஆரம்பகால வாடிக்கையாளர்களாகத் தொடங்கினர். பின்னர் மிகப்பெரிய அளவில் சில்லுகள் கொள்முதல் செய்வோர் ஆனார்கள்.
அவர்கள் அமெரிக்க இன்டெல் நிறுவனத்தின் DRAM (Dynamic random access memory) நினைவகம் வாங்கினார்கள். அவர்களின் பொறியாளர்களில் ஒருவரான ராபர்ட், நிறுவனம் வாங்கிய ஒவ்வொரு பாகத்தையும் சோதனை செய்து பார்ப்பார். ஜப்பானிய சில்லுகள் 10 மடங்கு நம்பகமானவை என்று அவர் கண்டறிந்தார். அமெரிக்க சில்லுகளின் பழுது விகிதம் 0.2% ஆகவும், ஜப்பானிய சில்லுகளின் பழுது விகிதம் 0.02% ஆகவும் இருந்தது.
சோவியத் ரஷ்யாவால் மீள்நோக்குப் பொறியியல் (reverse engineering) மூலம் சில்லுகளை நகலெடுக்க இயலவில்லை
2:20 அமெரிக்கா புத்தாக்கத்தில் (innovation) கவனம் செலுத்தியது. சோவியத் ரஷ்யா அதை நகலெடுக்க முயன்றது. மீள்நோக்குப் பொறியியல் (reverse engineering) மூலம் நகலெடுக்கும் முறை பெரிய இயந்திரங்களுக்குப் பலன் அளித்தது. ஆனால், சில்லுகளுக்கு அது அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை. அழுத்தம், வெப்பநிலை மற்றும் நேர அளவு (duration) போன்ற செயல்முறை மாறிகளை (process variables) முடிக்கப்பட்ட தயாரிப்புகளிலிருந்து நகலெடுக்க முடியவில்லை. மாறாக, ஜப்பான் அமெரிக்காவிடமிருந்து சில்லு தொழில்நுட்பத்திற்கு உரிமம் பெற்று, பின்னர் அந்தச் செயல்முறையைச் சிறப்பாகச் செயல்படுத்த முயன்றது.
ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே உயர் தரம் என்று நாட்டின் பெருமையையே அகியோ மொரிட்டா உயர்த்தினார்
3:20 அகியோ மொரிட்டா, டிரான்சிஸ்டர் வானொலிகள் போன்ற பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே உயர் தரம் என்று நாட்டின் பெருமையை உயர்த்தினார். உள்ளங்கை அளவிலான சோனி வாக்மேன் (Sony Walkman) ஒரு புரட்சிகரமான தயாரிப்பு. அதற்கு முன்பு, மக்கள் பெரிய நாடாப் பதிவுக்கருவிகளையும், கேட்புக்கருவிகளையும் பயன்படுத்தி வந்தனர். உலகம் முழுவதும் மொத்தம் 400 மில்லியன் வாக்மேன்கள் விற்பனையாயின. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சில்லுகளும் ஜப்பானிலேயே தயாரிக்கப்பட்டவை.
6:15 இவ்வாறு அகியோ மொரிட்டா தனி ஒருவராக ஜப்பான் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றினார். நான் இந்தக் கதையை இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக உங்களுக்குச் சொல்லக் காரணம், நமக்கு இந்தியாவில் நம் நாட்டைப் பற்றிய உலகின் கண்ணோட்டத்தை மாற்ற ஒரு வாய்ப்பு தற்போது எழுந்துள்ளது. நாம் இன்று இருக்கும் அதே நிலையில் ஜப்பானியர்கள் அன்று இருந்தனர். அதாவது, சில்லு உற்பத்தியில் நுழையும் நிலையில். உலகின் மற்ற நாடுகளை விடச் சிறப்பாக ஏதாவது செய்ய இதுவே நமக்கு ஒரு வாய்ப்பு. இது நிச்சயம் வரும், இது நடக்கும். “ஜப்பான் தயாரிப்பு” என்றால் அதுவரை “மலிவானது” என்றுதான் பொருளாக இருந்தது. ஆனால் அகியோ மொரிட்டா தனி ஒருவராக அதை “உயர் தரம்” என்று பொருள்படும்படி மாற்றினார்.
நம் நாட்டின் ஜுகாடு (जुगाड़) மனநிலையை மாற்ற வேண்டும்
7:00 இந்தியாவில் தற்போதைய மனநிலை “ஜுகாடு” அல்லது “மலிவானது”. இன்றைய உரையிலிருந்து நீங்கள் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், அது இந்த இந்திய “ஜுகாடு” மனநிலையை நாம் மாற்ற வேண்டும் என்பதுதான். நாம் எல்லோரையும் விடச் சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும்.
ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்காவை முந்தத் தொடங்கியது
7:35 ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்காவை முந்தத் தொடங்கியது. குறைந்த ராணுவச் செலவு, முதலீடுகளுக்கு மிகக் குறைந்த வட்டி போன்ற வசதிகள் அவர்களுக்கு இருந்தன. எடுத்துக்காட்டாக, இன்டெலின் DRAM சந்தைப் பங்கு 100% இல் இருந்து 2% ஆகக் குறைந்தது. மீதமுள்ள சந்தையில் ஜப்பானிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தின.
10:26 GCA என்பது ஒளிப்பட அச்சுக் (photolithography) கருவிகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனம். இவர்கள் ஸ்டெப்பர் (stepper) எனப்படும் அச்சிட்டு, நகர்த்தி, திரும்பவும் அச்சிடும் (step-and-repeat) நிழல்படக்கருவியைக் கண்டுபிடித்தனர். இந்த ஸ்டெப்பர், வில்லையில் ஒரே மாதிரியான நுண்ணிய வடிவத்தைப் பல முறை நம்பகத்தன்மையுடனும் துல்லியமாகவும் மீண்டும் மீண்டும் அச்சிட உதவியது. பின்னர் ஜப்பானில் நைக்கான் (Nikon) மற்றும் கேனான் (Canon) நிறுவனங்களும், ஐரோப்பாவில் ASML நிறுவனமும் போட்டித்தன்மையுடன் ஒளிப்பட அச்சுக் கருவிகளைத் தயாரிக்கத் தொடங்கின. ஜப்பான் 70% சந்தைப் பங்கைக் கைப்பற்றியதால், GCA இந்த வணிகத்திலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
குறைக்கடத்திகள் கச்சா எண்ணெய் போன்றவை
13:09 ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர்ஸில் (Fairchild Semiconductors) பணிபுரிந்த ஜெர்ரி சாண்டர்ஸ் (Jerry Sanders), AMD நிறுவனத்தைத் தொடங்கினார். அவர், குறைக்கடத்திகள் கச்சா எண்ணெய் போன்றவை என்று கூறுவார். வரலாற்று ரீதியாக கச்சா எண்ணெய் தொழில்துறை வளர்ச்சியைத் தூண்டியது போலவே, எண்ணிம யுகத்தில் (digital age) குறைக்கடத்தத்திகள் (semiconductors) இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் தரவு உற்பத்தி, சேமிப்பு மற்றும் பரிமாற்றத்தை இவை சாத்தியப்படுத்துகின்றன. அந்த சமயத்தில், கச்சா எண்ணெய்க்காக எல்லோரும் மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருந்தது போல, குறைக்கடத்திகளுக்கு அனைவரும் ஜப்பானைச் சார்ந்திருக்க வேண்டியியதாயிற்று.
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர்
எந்தத் தயாரிப்பு தேவை என்று நுகர்வோரால் சொல்ல இயலாது, ஏனெனில் எதைத் தயாரிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது. மிகவும் போட்டித்தன்மை கொண்ட ஒரு போராளி. எக்கணமும் ஆபத்து வரக்கூடும் என்று எச்சரிக்கையாக இருப்பவர்கள் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும். ஒரு தொழிற்சாலையில் வெற்றி என்றால் மற்ற தொழிற்சாலைகளும் அதே செயல்முறையையே நகலெடுத்தல். DRAM தயாரிப்பதை நிறுத்திவிட்டு நுண்செயலிகளில் மட்டும் கவனம் செலுத்த இன்டெல் முடிவு. மளிகை வியாபாரத்தில் தொடங்கிய சாம்சங் நிறுவனர் தென் கொரியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கை உருவாக்க விரும்பினார்.
தமிழாக்கம்: இரா. அசோகன்