எளிய தமிழில் CAD/CAM/CAE 18. எண்சார்ந்த பகுப்பாய்வு (Numerical Analysis)

உங்கள் முன்னிருக்கும் ஒரு பொறியியல் வடிவமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுக்கு ஒரு நூதனமான எண்ணம் உதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கருத்துரு நடைமுறையில் செயல்படுமா என்பதை எவ்வாறு நிரூபணம் செய்வது? மேட்லாப் (MATLAB) போன்ற கணித ரீதியான “முன்மாதிரி” மற்றும் சிமுலிங்க் (Simulink) போன்ற அமைப்புகள் “கருத்துருக்கான ஆதாரம் (proof of concept)” அமைப்புகளை உருவாக்குவதற்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கின்றன. அதன் பின்னர்தான் அந்த கருத்துருவை மேம்பாடு செய்து செயல்முறைக்குக் கொண்டுவர ஒரு குழுவை அமைக்கவும் முதலீடு செய்யவும் நிறுவனத்தின் தலைவர்கள் முன் வருவார்கள்.

மேட்லாப் உடன் சிமுலிங்க்

இந்த மேட்லாப் போன்ற மென்பொருட்கள் எந்த விதத்தில் சிறப்பானவை? பொறியியல் மற்றும் அறிவியல் பிரச்சினைகளைக் கணித ரீதியாக வரிசைகளும் பத்திகளும் கொண்ட தளவணிகளாக (matrix) உருவகிக்கலாம். இந்தத் தளவணிகளைக் கையாளுவதை (matrix manipulations) இவை சிறப்பாகச் செய்கின்றன. மேலும் செயல்பாடுகள் மற்றும் தரவுகளை கட்டப்படமாக வரைதல் (charting), வினைச்சரங்களைச் செயல்படுத்தல் (implementation of algorithms) ஆகியவற்றையும் செய்யமுடியும். ஜாவா, பைதான், சி போன்ற நிரல் மொழிகளுடன் இணைந்து வேலை செய்யக்கூடிய இடைமுகம் கொண்டவை. 

சிமுலிங்க் மென்பொருள் மாதிரியில் தொடங்கி வடிவமைத்தல் (Model-Based Design) வேலை செய்யக்கூடியது. மேலும் இது பாவனையாக்கல் (simulation) மற்றும் தானியங்கி நிரல் இயற்றல் (automatic code generation) செய்யக்கூடியது.

வாகனம் (automobile) மற்றும் வானூர்தித் (aeronautics) துறைகளில் பொறியியல் வேலைகளுக்கு, மேட்லாப் மற்றும் சிமுலிங்க் போன்ற எண்சார்ந்த பகுப்பாய்வு வணிகக் கருவிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

குனு ஆக்டேவ் (GNU Octave)

உங்களுக்கு மேட்லாப் நிரல் மொழி தெரிந்திருந்தால், குனு ஆக்டேவ் மேட்லாப் க்கு சிறந்த திறந்த மூல மாற்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஆக்டேவ் நிரல் மொழியின் சொற்றொடர் (syntax) பெரும்பாலும் மேட்லாப் உடன் ஒத்துப்போகும். மேலும், இது லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளிலும் இயங்குகிறது. இருப்பினும், இத்துடன் சிமுலிங்க் போன்ற துணைக்கருவி இல்லை.

குனு ஆக்டேவ் 3D கண்ணி வரைபடம்

குனு ஆக்டேவ் 3D கண்ணி வரைபடம்

ஓபன்மாடலிகா (OpenModelica)

திறந்த மூல ஓபன்மாடலிகா சிமுலிங்க் க்கு ஒரு மாற்று மட்டுமல்ல, பல அம்சங்களிலும் இதன் நிரல் மொழி சிறந்தது என்று பலர் கூறுகிறார்கள். 

சைலேப் (Scilab) உடன் எக்ஸ்காஸ் (Xcos)

மேட்லாப் போன்ற எண்ணியல் கணக்கீட்டுத் திறனையும், மாதிரி தொகுப்பு வேலைகளுக்கு சிமுலிங்க் போன்ற மாதிரி தொகுப்பி மற்றும் நூலக உலாவியைக் கொண்ட சூழலையும் கொண்ட ஒரு திறந்த மூல மென்பொருளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இதுதான் நல்ல தீர்வு.

நன்றி தெரிவிப்புகள்

  1. GNU Octave 

இத்தொடரில் அடுத்த கட்டுரை: சிஎன்சி நிரல் இயற்றல் (Computer Aided Manufacturing – CAM)

கயெக நிரல் இயற்றிகள் எவ்வாறு நிரல் எழுதும் வேலையை எளிதாக்குகின்றன. 2D பக்கத்தோற்ற வெட்டு (profile cutting). சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router). சிஎன்சி கடைசல் இயந்திரம் (Lathe). சிஎன்சி துருவல் இயந்திரம் (Milling Machine). சிஎன்சி கடைசல் மையம் (Turning Centre). சிஎன்சி துருவல் மையம் (Machining Centre – VMC & HMC). சிஎன்சி நிரல் இயற்றத் திறந்தமூல மென்பொருட்கள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: