திறந்த மூல கயெக பாவனையாக்கிகள் (CNC Simulators)

ஏன் பாவனையாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்?

கயெக நிரலாக்கம் (CNC Programming) பற்றிய அடிப்படைகளை முந்தைய கட்டுரையில் காணலாம். புதிதாக நிரல் பயில்வோர் தங்கள் நிரலை ஓட்டிப் பார்க்க ஒரு எளிதான வழி தேவை.  கயெக எந்திரங்கள் விலை உயர்ந்தவை. மேலும் உற்பத்திக்குப் பயன்படும் எந்திரங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

அனுபவமுள்ள நிரலாளர்கள்கூட கயெக நிரலாக்கத்தில் மிகப் பெரும் இடர் என்ன என்பது பற்றிக் கவனம் வைக்க வேண்டும். நீங்கள் நிரலில் இட்ட கட்டளைகளைக் கணினி கண்ணை மூடிக்கொண்டு அப்படியே செய்யும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். பணிப்பொருளின் மீது தேவையான வெட்டு ஆழம் வைத்து உளியை நகர்த்தினால் உலோகத்தை வெட்டும். இதுதான் நாம் எதிர்பார்க்கும் விளைவு. இதற்கு மாறாக நாம் தவறி உளியை இயந்திரத்தின் பாகங்களின் மேல் நகர்த்தினால் அவை சேதமடையும். அத்துடன் உளியும் உடைந்து தெறிக்கும். இம்மாதிரி விபத்தை மோதல் (collision) என்று சொல்கிறோம். இந்த மோதல்தான் கயெக நிரலாக்கத்தில் மிகப் பெரும் இடர். சில நேரங்களில் நாம் உளியை எதிர்பாராத அளவு இயந்திர பாகங்களின் அருகில் கொண்டு செல்லக்கூடும். இம்முறை மோதல் ஆகவில்லை என்றாலும் இதுபோல் மயிரிழையில் தப்பினால் (near-miss) நம் கணிப்பில் ஏதோ தவறு உள்ளது என்பது நிச்சயம். அடுத்த முறை மோதல் நிகழக் கூடும். இம்மாதிரி மோதல்களையும் மோதக்கூடிய நிலைகளையும் தவிர்க்க கயெக பாவனையாக்கிகள் பெரிதும் உதவுகின்றன.

நாம் எழுதும் G நிரல் என்ன செய்கிறதென்று உடன் பின்னூட்டம் கிடைத்தால்தான் நம்மால் விரைவாகக் கற்றுக் கொள்ள முடியும். மேலும் நிரலில் மாற்றங்கள் செய்தால்  என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளவும் கயெக பாவனையாக்கிகள் இன்றியமையாதவை.

அனுபவமுள்ள நிரலாளர்களும் எவ்வளவு தெளிவாகக் கணிப்பு செய்திருந்தாலும் உளிப்பாதையை வரைபடமாகப் பார்ப்பதுபோல் விரைவு சரிபார்த்தலுக்கு (quick sanity check) வேறு சிறந்த வழி கிடையாது.

காற்று வெட்டுதல்

கயெக எந்திரத்திலேயே பணிப்பொருளிலிருந்து உயரமான இடத்தில் சுழிப்புள்ளியை வைத்து உளி எதையும் வெட்டாமல் நிரலை மட்டும் ஓட்டிப் பார்ப்பதற்கு “காற்று வெட்டுதல்” என்று கூறுகிறார்கள். இது பாக நிரலை நிரூபிக்க ஒரு வழி. இயந்திரத்தின் நேரம் வீணாகும். ஆனால் பாவனையாக்கிகளில் தெரியாத வழுக்களையும் இம்மாதிரி எந்திரத்தில் நேரடியாக ஓட்டிப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.

கயெக பாவனையாக்கிகள் என்ன செய்கின்றன?

G நிரலை ஓட்டி பணிப்பு விசைப்பொறியையும் சுழலியையும் சுழற்றுவதற்குப் பதிலாக கயெக பாவனையாக்கிகள் ஒரு வரைகலை காட்சித் தொகுப்பை உருவாக்குகின்றன. இது அந்த நிரலை ஓட்டினால் கயெக எந்திரம் என்ன செய்யும் என்பதைப் படமாகக் காட்டுகிறது. இக் காட்சித் தொகுப்பை உளிப்பாதை (Backplot) என்று பொதுவாகச் சொல்கிறார்கள்.

நிரல் தொடக்கப் புள்ளியில் (program origin) ஒருங்களவுகள் யாவும் சுழி என்பதால் இந்தப் புள்ளிக்கு சுழிப் புள்ளி (zero point) என்றும் பெயர். படத்தில் சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளவை X, Y மற்றும் Z அச்சுகள். இவை மூன்றும் சந்திக்கும் புள்ளிதான் சுழிப் புள்ளி.

ஒரு நல்ல கயெக பாவனையாக்கி உங்களுக்கு பயனுள்ள தகவல்கள் பலவற்றையும் சொல்ல முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எதிர்பார்க்கும் பாதையில் உளி செல்கிறதா என்பதை இக்காட்சித் தொகுப்பைப் பார்த்தால் ஒரே பார்வையில் உடன் சொல்லலாம். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் பகுதிக்கு வெளியே எந்த விளக்கப்படாத காரணங்களுக்காகவும் திடீரென்று நகர்ந்தால் அதைக் கவனித்துப் பாருங்கள். சிவப்புக் கோடுகள் உளியின் விரைவு இயக்கத்தைக் காட்டுகின்றன. இவை சிவப்பு நிறத்தில் இருப்பது ஏனெனில் பணிப்பொருளுக்குள் விரைந்து நுழையக் கூடாது. வெள்ளை அல்லது பச்சைக் கோடுகள் உளி ஊட்ட வேகத்தில் இயங்குவதைக் குறிக்கின்றன.

இணைய G நிரல் (Web G Code)

இணைய G நிரல் ஒரு திறந்த மூல கயெக பாவனையாக்கி. இதை நீங்கள் பதிவிறக்கி நிறுவிப் பயன்படுத்தலாம். இன்னும் எளிதாக இணையதளத்திலேயே பயன்படுத்தவும் முடியும்.

இணைய G நிரல்

இணைய G நிரல்

இடதுபுறம் உள்ள பெட்டியில் G நிரலை உள்ளீடு செய்து “Simulate” பொத்தானை அழுத்தினால் வலதுபுறம் உள்ள பெட்டியில் உளிப்பாதையை முப்பரிமாணத்தில் காட்டும். இடது பொத்தானை அழுத்திக் கொண்டு சுட்டியை நகர்த்தினால் முப்பரிமாண உளிப்பாதையை சுழற்றித் தேவையான கோணங்களில் பார்க்க முடியும. மேலும் சுட்டியின் சக்கரத்தைப் பயன்படுத்தித் தேவையான அளவுக்கு பெரிதாக்கலாம்.

நிரலில் எந்தவொரு கோட்டிலும்  நிலை காட்டியை (cursor) நிறுத்தினால் அந்த ஒரு நிரல் செய்யும் வேலையை படத்தில் தடித்தக் கோடாகக் காட்டும். இது வழு நீக்க மிகவும் வசதியானது.

கேமோட்டிக்சு (CAMotics)

உபுண்டு 16.04 இல் camotics_1.1.1_amd64.deb கோப்பைப் பதிவிறக்கம் செய்தேன். பின்னர் கீழ்க்கண்ட கட்டளை கொடுத்து நிறுவினேன்:

sudo dpkg -i Downloads/camotics_1.1.1_amd64.deb

ஆனால் செயலியைத் துவக்க முயற்சித்தால் ஏதோ தடங்கல் ஏற்பட்டு நின்றுவிடும். பிரச்சினை என்னவென்று தெரியவில்லை. முனையத்தில் துவங்க முயற்சித்தபோது libv8 என்ற நிரல் தொகுப்பை ஏற்றுவதில் பிரச்சினை என்று தெரியவந்தது. பின்னர் libv8 நிரல் தொகுப்பின் அண்மைய வெளியீட்டைக் கீழ்க்கண்ட கட்டளை கொடுத்து நிறுவினேன்:

sudo apt-get install libv8-dev

இதையடுத்துக் கேமோட்டிக்சு செயலியைத் துவக்க முடிந்தது. அத்துடன் வந்த ஒரு முன்மாதிரி .tpl கோப்பு படத்தில் பார்க்கலாம்.

கேமோட்டிக்சு நிரல்

கேமோட்டிக்சு நிரல்

மேற்கண்ட கோப்பை ஓட்டிப் பார்த்தால் இந்தப் படத்தை உருவாக்கும்.

கேமோட்டிக்சு உருவகப்படுத்துதல்

கேமோட்டிக்சு பாவனையாக்கல்

கேமோட்டிக்சு பயன்படுத்தி கயெக எந்திரங்களுக்கான 3-அச்சு G நிரல்களை நீங்கள் பாவனையாக்கலாம் மற்றும் அதன் விளைவுகளை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தலாம். லினக்சு, விண்டோசு மற்றும் மேக் கணினிகளில் திறந்த மூல  கேமோட்டிக்சு நிறுவலாம்.

கேமோட்டிக்சு செய்ய இயலாத வேலைகள்:

  • 5-அச்சு பாவனையாக்கல் செய்ய இயலாது.
  • கடைசல் எந்திர பாவனையாக்கல் செய்ய இயலாது.

ashokramach@gmail.com

%d bloggers like this: