நாம் பாகத்தின் வடிவத்தை ஒரு கணினி வழி வடிவமைப்பு (CAD) மென்பொருளை வைத்து உருவாக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நம் மூலப்பொருள் மற்றும் எந்திரத்தின் திறனைப் பொருத்து தடிமன் வைத்து அந்த பாகத்தை படிவம் படிவமாக சீவிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு படிவத்திற்கும் நம் அச்சு எந்திரத்தின் தலை முன்னும் பின்னும் செல்ல வேண்டும். ஒரு படிவம் முடிந்தபின் அந்தப் படிவத்தின் தடிமன் அளவு மேல் நோக்கி நகர வேண்டும்.
இம்மாதிரி அச்சு எந்திரத்தின் தலை நகர வேண்டிய பாதையை விவரமாகத் தயாரிக்க உதவுவதுதான் சீவுதல் மென்பொருள் (slicer). சீவுதல் மென்பொருள் உங்கள் பாகத்தின் முப்பரிமாண வடிவமைப்பில் (STL அல்லது OBJ கோப்பு) தொடங்கி அச்சுப்பொறியின் கருவிப்பாதையை (tool path) g-நிரல் (g-code) கோப்பு வடிவில் உருவாக்குகிறது. உங்கள் அச்சு எந்திரத்தின் நுனிக்குழல் (nozzle) விட்டம், அச்சிடுதல் வேகம், அடுக்கு உயரம் மற்றும் பிற தேர்வுகளை உங்களுக்குத் தோதாக அமைத்துக் கொள்ளலாம்.
ஸ்லைசர் (Slic3r)
முப்பரிமாணப் பொருளை அச்சிட STL, OBJ, AMF, 3MF என நான்கு வகையான கோப்புகளைப் பயன்படுத்தலாம் என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இந்த நான்கு வகையான கோப்புகளையும் ஸ்லைசர் உள்ளீடாக எடுத்துக் கொள்ளும். எல்லா இயந்திரத் தயாரிப்பாளர்களும் g-நிரல் (g-code) மொழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனினும் சிற்சில கிளைமொழிகள் (dialects) உண்டு. ஸ்லைசர் எல்லா கிளைமொழிகளுக்கும் ஆதரவளிக்கிறது. இது லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளிலும் ஓடும்.
தொழில்துறை உற்பத்திக்கு அல்டிமேக்கர் கியூரா (Ultimaker Cura)
அல்டிமேக்கர் என்ற 3D அச்சு எந்திரம் தயாரிக்கும் நிறுவனம் இதை உருவாக்கித் திறந்த மூலமாக வெளியிடுகிறது. இது வணிகரீதியாக முப்பரிமாண அச்சிடல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குத் தோதானது.
நுகர்வோருக்கு புரூசா ஸ்லைசர் (PrusaSlicer)
இது ஸ்லைசர் மென்பொருளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இதுவும் 3D அச்சு எந்திரம் தயாரிக்கும் நிறுவனம்தான். இதுவும் லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளிலும் ஓடும். சந்தையில் கிடைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நெகிழி வகைகள் மற்றும் இழைகளுக்குத் தகுந்த மாதிரி அளவுறுக்கள் தயார் செய்து பயன்படுத்த ஆயத்தமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இது சிறு நிறுவனங்கள், கலைஞர்கள், பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வேலைகளுக்குத் தோதானது.
சூப்பர் ஸ்லைசர் (SuperSlicer)
இது புரூசா ஸ்லைசர் மென்பொருளை அடிப்படையாக வைத்து அதில் சாத்தியமானதைவிட அதிக கட்டுப்பாட்டை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் பல அளவுறுக்களை இதில் கட்டுப்படுத்த முடியும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஒளித் திண்மமாக்கல் (photo-solidification)
ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள். ஒளி ஊடுருவும் அடிப்பகுதி கொண்ட தொட்டி. LCD மறைத்தல் அல்லது DLP திரைப்படக்கருவி