பாகத்தை வடிவமைப்பதுதான் முக்கிய வேலை
நாம் பொருள்சேர் உற்பத்தி முறையில் ஒரு பாகத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு முக்கிய வேலை அதை வடிவமைப்பது தான். ஆகவே இந்த வேலைக்கு என்னென்ன திறந்த மூல மென்பொருட்கள் உள்ளன அவற்றின் அம்சங்கள் யாவை என்று முதலில் பார்ப்போம்.
அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling)
நாம் ஒரு சிக்கலான வடிவத்தை பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு விதமான உத்திகளைக் கையாளலாம். முதல் வழி நமக்குக் கடைசியாக கிடைத்த வடிவத்தை மட்டும் அப்படியே சேமித்து வைப்பது. இதை நேரடி மாதிரியமைத்தல் (Direct modeling) என்று சொல்கிறார்கள். மற்றொன்று நாம் எந்த வடிவத்தில் தொடங்கினோம், என்னென்ன செய்து இந்த சிக்கலான வடிவத்துக்கு வந்து சேர்ந்தோம் என்ற வழிமுறைகளைச் சேமித்து வைப்பது. இதை அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) என்று சொல்கிறார்கள். நாம் கீழே பார்க்கும் திறந்தமூல மென்பொருட்கள் யாவையும் அளவுரு மாதிரியமைத்தல் முறையையே பின்பற்றுகின்றன.
எளிதாக நிறுவி இயக்க சால்வ்ஸ்பேஸ் (Solvespace)
இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயங்குகிறது. விண்டோஸ் கணினிகளில் நிறுவ வேண்டிய அவசியம் கூட இல்லை. EXE கோப்பு அப்படியே ஓடும். இது சிறிய கோப்பு ஆகையால் உங்கள் கணினியில் அதிக இடத்தையும் எடுத்துக் கொள்ளாது. இதில் வடிவத்தை உருவாக்கி எஸ் டி எல் (STL) கோப்பு வகையாக ஏற்றுமதி செய்து முப்பரிமாண அச்சிடல் (3D Printing) எந்திரங்களில் பயன்படுத்தலாம்.
மிகுதியான அம்சங்களுக்கு ப்ரீகேட் (FreeCAD)
சால்வ்ஸ்பேஸ் செய்யும் எல்லா வேலைகளையும் ப்ரீகேட் செய்ய முடியும். தவிர மேலும் பல வேலைகளையும் செய்ய முடியும். இயந்திரவியல் (mechanical engineering), கட்டடக்கலை (architecture), எந்திரன் அசைவுகள் (robot movements) போன்ற பல துறைகளுக்கு வடிவமைப்புகள் செய்யமுடியும். இம்மாதிரி ஒவ்வொரு வேலையும் செய்யக்கூடிய கருவிகளின் குழுக்கள் கொண்ட பணி மேடைகள் உள்ளன. பொருள்சேர் உற்பத்திக்கு STL, OBJ மற்றும் AMF கோப்பு வடிவில் ஏற்றுமதி செய்ய இயலும்.
பிளெண்டர் (Blender)
இது அசைவூட்டங்கள் உருவாக்க உதவும் மென்பொருள். இருப்பினும் இந்த மென்பொருளில் உங்களுக்குப் பழக்கமிருந்தால் 3D வடிவமைப்புக்கு இதைப் பயன்படுத்தலாம். பொருள்சேர் உற்பத்திக்கு STL மற்றும் OBJ கோப்பு வடிவில் ஏற்றுமதி செய்ய இயலும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: கோப்பு வடிவங்கள் (file formats)
STL கோப்பு வடிவம். OBJ கோப்பு வடிவம். AMF கோப்பு வடிவம். 3MF கோப்பு வடிவம்.