கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் வரிசையில் பல்வேறு சுவாரசியமான சேவைகள் குறித்து பார்த்திருக்கிறோம். ஆனால், பல நண்பர்களும் விருப்பப்பட்டு கேட்கக்கூடிய செயலி என்னவென்றால், சமூக வலைதளங்கள் புகைப்படங்கள் மற்றும் குழு புகைப்படங்கள் என தங்கள் மொபைல் போனில் நிரம்பி வழியும் புகைப்படங்களில் விதவிதமாக edit செய்து பார்ப்பதற்கு ஏதாவது சிறந்த கட்டற்ற செயலி இருக்கிறதா? என்றுதான் கேட்கிறார்கள்.இந்தக் கேள்வியை நான் பலமுறை கடந்து வந்து விட்டேன்.
ஒரு சில கட்டற்ற செயலிகளை நான் பயன்படுத்தியும் பார்த்தேன்.ஆனால் அவற்றின் செயல் திறன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால் இன்றைக்கு என் எழுத இருக்கும் இந்த செயலி, புகைப்பட எடிட்டிங் வேலைகளையும் தாண்டி, பல்வேறு விதமான சிறப்பம்சங்களோடு உங்களுக்கு கிடைக்கிறது.


இந்த செயலியின் பெயர் இமேஜ் டூல் பாக்ஸ்(Image tool box). உண்மையிலேயே இந்த செயலி ஒரு டூல் பாக்ஸ் தான். புகைப்படத்தை பிடிஎப் ஆக(photo to pdf )மாற்ற வேண்டுமா? அதையும் இங்கு செய்யலாம். Qr கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டுமா? அதுவும் இங்கே செய்யலாம். புகைப்படங்களை விதவிதமாக எடிட் செய்ய வெட்ட, தைக்க , இணைக்க (crop,stitch,merge, colleague etc)என நீங்கள் விரும்பும் அனைத்து வேலைகளும் இங்கே நிறைவேறும்.

புகைப்படத்தின் அளவை குறைக்க வேண்டுமா?(Size reduction) புகைப்படத்தின் அகல நீளங்களை மாற்றி அமைக்க வேண்டுமா(crop)? புகைப்படத்தில் இருக்கும் தகவல்களை எடுக்க வேண்டுமா(word recognition)?

புகைப்படத்தில் இருக்கும் கணக்குகளை செய்து பார்க்க வேண்டுமா? என்னடா லிஸ்ட் பெருசா போகிறது என்று யோசிக்கிறீர்களா? மொத்தம் 66 விதமான image tools இங்கு உங்களுக்கு காண கிடைக்கிறது.
இந்த செயலி குறித்து ஒவ்வொன்றாக நான் விளக்குவதை விடவும்.அன்பு நண்பர்கள் இதை பதிவிறக்கி பயன்படுத்தி பார்த்தாலே நிச்சயம் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
பெரும்பாலான புகைப்பட எடிட்டிங் செயலிகளில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால், அவை கட்டற்ற முறையில் தயாரிக்கப்படுவதில்லை. குறிப்பாக, நீங்கள் ஒரு நம்பகமற்ற செயலியை நிறுவி அதில் புகைப்படங்களை எடிட் செய்யும்போது, உங்களுடைய மொபைல் போனில் அரசு ஆவணங்கள் போன்றவற்றை புகைப்படமாக எடுத்து வைத்திருந்தால் அவை வெளியில் கசியும் அபாயம் இருக்கிறது. மேலும், உங்களுடைய புகைப்படங்கள் திருடப்படும் பட்சத்தில் அவற்றை தவறாக சித்தரித்து மிரட்டும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இவை அனைத்தையும் கடந்து உங்களுக்கு நம்பகமில்லாத செயலிகளுக்கு புகைப்பட அனுமதியை கொடுப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்(Don’t allow image access if it doesn’t need). பெரும்பாலும் கட்டற்ற செயலிகளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள். புதியதாக வெளியாகியிருக்கும் அதிகமாக விளம்பரம் வரக்கூடிய செயலிகளை பயன்படுத்துவதை தவிருங்கள் .
சரி இந்த செயலியை எங்கப்பா நிறுவலாம்! என்று கேட்டால் வழக்கம்போல நம்முடைய Fdroid தளத்தில் இந்த செயலி உங்களுக்கு காணக் கிடைக்கும். நான் வழக்கமாக குறிப்பிடக்கூடிய செயலிகளை விடவும், இதன் அளவு சற்றே பெரியது சுமார் 100 எம் பி க்கும் சற்று அதிகமாக இதன் அளவு உள்ளது(app size 100mb). மேலும் தேவைப்படும் மொழி அமைப்புகள், சில கருவிகள் போன்றவற்றிற்காக மேற்கொண்டு விரும்புதல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
App link: f-droid.org/en/packages/ru.tech.imageresizershrinker/
இருந்தாலும் கூட, குறைந்த அளவு செயல் திறன் கொண்ட மொபைல் கருவிகளில் கூட இதை பயன்படுத்த முடியும். மேலும் இந்த செயலியில் பல்வேறு விதமான அமைப்புகளும் உங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய எடிட்டிங் திறமைகளை வெளிக்காட்ட, ஆகச்சிறந்த கட்டற்ற செயலியாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
மீண்டும் ஒரு கட்டற்ற செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com