இயங்கு தளத்தை நகலெடுக்கலாமா ?

 

லினக்ஸின் அருமை, பெருமைகளை விண்டோஸ் பயனரிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் தெரிவிக்கும் பொதுவான கருத்து, ”இவ்வளவு சிறப்பு வாய்ந்த இயங்குதளம் ஏன் பலராலும் பயன்படுத்தப்படவில்லை ? ” என்பதுதான். பல புகழ்பெற்ற நிறுவனங்கள் லினக்ஸை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ வேறு வழியில்லாமல் தங்களுடைய மென்பொருள்களில் பயன்படுத்து வருகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

லினக்ஸ் ஒரு இயங்குதளமாக மட்டுமல்லாமல் மீள்வட்டு என்றழைக்கப்படும் Recovery Disks, காப்பெடுத்தல் (Backup), கடவு சொல்லை மீட்டல் (Password Recovery), வன்தட்டை நகலெடுத்தல் (Cloning), அழிந்த கோப்புகளை மீட்டெடுத்தல் (Deleted File Recovery) என பல வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்கும். இது மட்டுமல்ல விண்டோஸ் சில நேரங்களில் (பெரும்பாலும் பல நேரங்களில்) இயங்க மறுத்து அதனால் முக்கியமான கோப்புகளை மீட்டெடுக்கவும் லினக்ஸ் மட்டுமே சிறந்த தீர்வு. பல நிறுவனங்களான Nero Backitup, Kaspersky, F-Secure இன்னும் பல… லினக்ஸை பயனபடுத்துகின்றன. DELL மடிக்கணினி, மேசைக் கணினிகளை பழுதுபார்க்கும் பொறியாளர்கள், அவற்றிலுள்ள வன்பொருள்கள் அனைத்தும் சரியாக இயங்குகின்றனவா, என்பதை சோதிப்பதற்கும் லினக்ஸை பயன்படுத்துகின்றனர்.

ஒரு கணினியில் புதிதாக லினக்ஸ் இயங்கு தளத்தை நிறுவவும், அதன்பிறகு நமக்கு தேவைப்படும் மென்பொருள்களை நிறுவவும் 1-2 மணி நேரங்கள் ஆகலாம். இயங்கு தளத்தை மட்டும் நிறுவ குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும். மேலும் தேவைப்படும் மென்பொருள்களை நிறுவ இணைய இணைப்பும் அவசியம். ஒரு வேளை விண்டோஸ் இயங்கு தளமாக இருந்தால் வன்பொருள்களுக்கான இயக்கிகள் (Drivers), மைக்ரோசாப்ட் ஆபிஸ், pdf மென்பொருள்கள் என அடிப்படை இயக்கத்திற்கே குறைந்தது 3 மணி நேரங்கள் ஆகலாம். ஒரு சிறிய நிறுவனத்தில் 5 – 10 கணினிகள் இருப்பின் இன்னும் அதிக நேரம் பிடிக்கும். இதுபோன்ற நேரங்களில் இயங்கு தளத்தை நகலெடுத்து (Hard Disk Cloning), ஒரு கணினியில் உள்ள அமைப்பினை அப்படியே பல கணினிகளுக்கு மிகக் குறைந்த நேரத்தில் நிறுவி விடலாம்.

கோப்பினை நகலெடுப்பதற்கும் வன்தட்டினை நகலெடுப்பதற்கும் என்ன வேறுபாடு ?

உதாரணத்திற்கு உங்களிடம் 1GB அளவுள்ள ஒரு கோப்பும், பல சிறு கோப்புகள் சேர்ந்து மொத்தமாக 1GB அளவுள்ள ஒரு கோப்புறையும் (Folder) இருப்பதாகக் கொள்வோம். இந்த இரு கோப்புகளையும் தனித்தனியாக வன்தட்டின் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு நகலெடுக்கும் போது 1GB அளவுள்ள ஒரே கோப்பு விரைவாக நகலெடுக்கப்பட்டுவிடும். இதே போன்று வன்தட்டினை நகலெடுக்கும் (Cloning) போது, அதில் எத்தனை கோப்புகள் எந்த அளவுகளில் உள்ளன என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மொத்தமாக அந்த வன்தட்டின் பகுதியில் (Harddisk partition) உள்ள தகவல்களை (Sector (or) block) மிகக் குறைந்த நேரத்தில் உங்களுடைய வன்தட்டின் அதிக பட்ச எழுதும் திறனில் (Maximim Write Speed) நகலெடுக்கலாம்.

அனைத்து இயங்கு தளத்தையும் நகலெடுக்கலாமா ?

லினக்ஸ் இயங்குதளத்தை ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கு நகலெடுக்கும் போது வன்பொருள்களை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவே ஒரு விண்டோஸ் இயங்குதளமாக இருப்பின் வேறுபட்ட வன்பொருள்களுக்கிடையே (குறிப்பாக வேறுபட்ட தாய் பலகை (Mother Board)) நகலெடுப்பின் பெரும்பாலும் விண்டோஸ் சரியாக Boot ஆகாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

எந்த மென்பொருள் நகலெடுக்க சிறந்தது ?

இதுபோன்று வன்தட்டுகளை நகலெடுக்க Norton Ghost, Acronis True Image, Paragon Backup & Recovery போன்ற வர்த்தக மென்பொருள்களும் dd கட்டளை, Clonezilla, Redo Backup, Mondo Rescue, g4linux, Part Image போன்ற பல கட்டற்ற மென் பொருள்களும் கிடைக்கின்றன. இதில் dd கட்டளை மற்றும் Clonezilla மிகவும் பிரபலமானது (shaadi.com, clonezilla மூலம் தங்களுடைய கிளை அலுவலகங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கணினிகளுக்கு Ubuntu வை நகலெடுத்துள்ளனர். – ஆதாரம் www.linuxforu.com/2012/12/for-shaadi-com-ubuntu-scores-over-windows/ ). ஆனால் இதனுடைய இடைமுகப்பு புதியவர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே எளிய வரைகலை (GUI) பயனர் இடைமுகப்புக்கு Redo Backup & Restore (இதனை redobackup.org -ல் பதிவிறக்கிக் கொள்ளலாம்.) யை பயன்படுத்தலாம்.

Redo Backup & Restore –ன் சிறப்பம்சங்கள் :

  • எளிய வரைகலை இடைமுகப்பு (GUI)

  • Live CD மற்றும் Flash Drive -ல் இயங்கும் வசதி

  • கோப்பு உலாவி (File Browser) மற்றும் இணைய உலாவி (Web Browser)

  • வரைகலை இடைமுகப்புக் கொண்ட Partition Editor

  • அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கும் வசதி (Deleted File Recovery)

  • Network Share களில் காப்பெடுக்கும் வசதி

வன்தட்டினை நகலெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :

  • எடுக்கப்பட்ட நகலை வேறொரு கணினியில் ஏற்றும் போது, வன்தட்டின் பகுதி (Destination) நகலின் (Source) அளவை விட அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் 20GB அளவுள்ள வன்தட்டுப்பகுதியை நகலெடுத்து வேறொரு வன்தட்டில் ஏற்றும் போது, சரியாக 20GB அல்லது அதைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

  • உங்களுடைய லினக்ஸ் கணினியில் /boot என்று தனியாக வன்தட்டுப் பகுதி இருப்பின் அதனையும் சேர்த்து நகலெடுக்க வேண்டும்.

  • ஏற்றப்பட்டப் பிறகு உங்களுடைய லினக்ஸ் கணினி தொடங்குவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் grub-install மற்றும் grub-update கட்டளையை செயல்படுத்துவதன் மூலமும், விண்டோஸ் ஆக இருந்தால் lilo -M /dev/sda mbr மூலமும் துவக்கப்பகுதியினை (Boot Sector) சரிசெய்யலாம். அல்லது boot-repair என்ற மென்பொருள் கருவியின் மூலமும், System Rescue CD மூலமும் இதனை மேற்கொள்ளலாம்.

இயங்குதளத்தை நகலெடுப்பது நேரத்தை சேமிப்பதுடன், பல நன்மைகளை தருகிறது. எனவே இயங்குதளத்தை ஒவ்வொரு முறையும் புதிதாக நிறுவாமல் நீங்களும் உங்கள் இயங்குதளத்தை Redo Backup மூலம் நகலெடுத்து உங்கள் கணினிகளிலும், அதனை வேறு கணினிகளிலும் சுலபமாக
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

lenin gurusamy <guruleninn@gmail.com>

%d bloggers like this: