கணினிகள், திறன்பேசிகள் ஆகியவை இணையத்தில் தொடர்புடன் இருப்பதால் மென்பொருளை இணையம் வழியாக மேம்பாடு செய்கிறார்கள் என்று முன்னர் பார்த்தோம். ஊர்திகளை விற்றபின் அதன் மென்பொருளில் பாதுகாப்பையோ அல்லது மற்ற அம்சங்களையோ மேம்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது?
முன்னர் நேரடியாகக் கம்பி இணைப்புகள் மூலம் மட்டுமே மென்பொருளை மேம்படுத்த முடியும்
ஊர்திகளிலும் மற்ற சாதனங்களிலும் நிரல்கள், தரவுகள் போன்றவை மின் இணைப்பைத் துண்டித்தாலும் அழியாத நினைவகத்தில் (flash memory) எழுதி சேமிக்கப்பட்டிருக்கும். ஆகவே இம்மாதிரி உட்பதித்த சாதனங்களில் மென்பொருளை மேம்படுத்துவதை ஆங்கிலத்தில் flashing என்றும் சொல்கிறார்கள். முன்னர் இம்மாதிரி மென்பொருட்களை நேரடிக் கம்பி இணைப்புகள் மூலம் மட்டுமே மேம்படுத்த முடியும். பல்லாயிரக்கணக்கான ஊர்திகளை நிறுவனத்தின் பணிமனைக்குக் கொண்டுவரச் செய்து கம்பியை இணைத்து மென்பொருளை மேம்படுத்தி அனுப்ப வேண்டும். இம்முறையில் நிறுவனத்திற்கு செலவும் அதிகம், வாடிக்கையாளர்களின் வேலைகளுக்குத் தடங்கலும் ஏற்படும்.
மென்பொருளை மேம்படுத்துவதற்குப் பணிமனைக்கு ஊர்தியைக் கொண்டுவருவதைத் தவிர்ப்பதே முக்கிய நோக்கம்
புதிய ஊர்திகள் இணைய வழி மேம்படுத்தல் (Over The Air – OTA) அம்சத்துடன் வரத்தொடங்கியுள்ளன. இதற்காக OTA மேலாளர் என்ற செயலி ஊர்தியில் நிறுவப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்தி அல்லது வை-ஃபை மூலம் தயாரிப்பாளரின் இணையதளத்துடன் ஊர்தியை இணைக்க வேண்டும். அங்கிருந்து பதிவிறக்கம் செய்து தங்கள் கார்களில் புதுப்பித்த மென்பொருளைத் தாங்களே நிறுவிக் கொள்ள முடியும்.
OTA மேம்படுத்தலின் போது, நீங்கள் காரை ஓட்ட முடியாது. ஏனெனில் இந்த செயல்முறையின்போது ஊர்தி ஓடாமல் நிற்க வேண்டும். புதுப்பிப்பு முடிந்தபின், உங்கள் கார் புதிய மென்பொருள் பதிப்புகளில் இயங்கும்.
மென்பொருள் மேம்படுத்தல் பற்றிய தகவலை எவ்வாறு வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கிறார்கள்
பொதுவாக, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாகனத்தின் தகவல் பொழுதுபோக்கு அமைப்பு (infotainment system) அல்லது ஊர்தியுடன் தொடர்புடைய திறன்பேசி செயலி மூலம் OTA புதுப்பிப்புகள் குறித்து அறிவிக்கப்படும். சில கார் உற்பத்தியாளர்கள் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாகவும் அறிவிப்புகளை அனுப்பலாம்.
புதிய அம்சங்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்றாலும் பாதுகாப்பு சவால்களும் உண்டு
OTA மூலம் மென்பொருளை உடனுக்குடன் புதுப்பிக்க முடியும். ஆகவே மேம்பட்ட வாகன செயல்பாடு போன்ற நன்மைகள் உண்டு. எனினும் இதில் பாதுகாப்பு சவால்களும் உள்ளன. OTA அமைப்புகளைப் பயன்படுத்திக் கொந்தர்கள் (hackers) தீங்குநிரல்களை (malware) நிறுவக்கூடும். ஆகவே இம்மாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்கப் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஊர்தித் திரள் மேலாண்மை
ஊர்திகளை மேலும் பாதுகாப்பாக இயக்குதல். காப்பீடு தொடர்பான செலவுகளைக் குறைத்தல். ஊர்தி தொடர்பான மோசடிகளைத் தவிர்த்தல். ஊர்திகளை அரசாங்கக் கட்டுப்பாடுகளின்படி இயக்குதல்.