தாய்மொழி வழிக் கணினிக் கல்வி – மு.சிவலிங்கம் சிற்றுரை

கணியம் - தமிழ் கணிநுட்பம் - Kaniyam - Tech News in Tamil
கணியம் - தமிழ் கணிநுட்பம் - Kaniyam - Tech News in Tamil
தாய்மொழி வழிக் கணினிக் கல்வி - மு.சிவலிங்கம் சிற்றுரை
/

தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில் 1995 முதல் 2006 வரை டி’பேஸ் வழியாக சி-மொழி, சி-மொழியின் சிறப்புத் தன்மைகள், மொழிகளின் அரசி++, வருங்கால மொழி சி#, நெட்வொர்க் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் நான் எழுதிவந்தேன். அப்பாடங்களைப் படித்து, அதன்மூலம் கணினி அறிவியல் பாடத்தில் ஆக்கமும் ஊக்கமும் பெற்ற மாணவர்கள் பலர். அவ்வாறு பலனடைந்தோர் பலர் இன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

அதே காலகட்டத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் துறையில் எம்சிஏ, எம்எஸ்சி கணினி அறிவியல் பயின்ற மாணவர்களுக்குச் சென்னை மையத்தில் ஏழாண்டு காலம் சி, சி++, ஜாவா, எம்ஐஎஸ் பாடங்களை நடத்தியுள்ளேன். அதில்
என்னிடம் பயின்ற மாணவர்கள் பலரும் இன்றைக்கு இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அத்தகைய மாணவர்களுள் ஒருசிலரை, இந்தியாவிலும், அமெரிக்கப் பயணத்திலும், அவ்வப்போது ஏதேச்சையாகச் சந்தித்துள்ளேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு, அன்று நான் எழுதிய, நடத்திய பாடங்கள்தாம் அவர்தம் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தன என நினைவுகூர்ந்து நன்றி பாராட்டியுள்ளனர்.

நான் 2016-இல் அமெரிக்கா சென்றபோது, அங்கு நடைபெற்ற தமிழ்ப் பண்பாட்டு விழாவில் அவ்வாறு என்னைச் சந்தித்தவர்தான் மைக்ரோசாஃப்ட்டில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் குருபிரசாத். அவர், அங்கு வாழும் தமிழ் மக்களிடையே, கலை, இலக்கியம், ஆளுமைப் பயிற்சி போன்ற பல்வேறு தளங்களில் சிறுசிறு குழுக்களை உருவாக்கி ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றி வருகிறார். இந்தமுறை நான் அமெரிக்கா சென்றிருந்த போது, அவருடைய நண்பர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைக்க விரும்பினார்.

குருபிரசாத், டோஸ்ட்மாஸ்டர்ஸ் என்னும் ஒரு சர்வதேச அமைப்பின் கீழ் ஒரு குழுவை ஏற்படுத்தி, ஆளுமைப்  பயிற்சியின் ஓர் அங்கமாய்த் தொடர்பாடல் திறனை வளர்த்துக் கொள்ளும் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்குழுவின் கூட்டத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். அவரின் அன்பு அழைப்புக்கு இணங்கி நானும் கலந்து கொண்டேன். அவர்களின் கூட்ட நிகழ்ச்சிநிரலை முடித்தபின், என்னை அறிமுகப்படுத்தி, ஒரு பத்து நிமிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டார்.

முன் தயாரிப்பின்றி ஒரு கூட்டத்தில் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் பேசுவது எளிது, ஆனால் பத்து நிமிடம் பேசுவது கடினம் எனக் கூறி என் பேச்சைத் தொடங்கினேன். மேடைப் பேச்சுபோல் இல்லாமல், சாதாரணமாகச் சில நிமிடங்கள்
அவர்களுடன் உரையாடினேன். கணினிக் கல்வியில் என்னுடைய அனுபவத்தின் வாயிலாக நான் கண்டடைந்த தீர்க்கமான முடிவுகள் இரண்டை மட்டும் என்னுடைய பேச்சில் குறிப்பிட்டேன்:

(1) எந்தவொரு நவீனத் தொழில்நுட்பத்தையும்  தாய்மொழியில் கற்பிக்கும் போது, மாணவர்கள் எளிதாக, தெளிவாகப் புரிந்து
கொள்கின்றனர். அத்துறையில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படுகிறது. சாதித்தும் காட்டுகின்றனர்.

(2) தமிழ்மொழியைப் பொறுத்தவரை, கணினி அறிவியல் உட்பட எந்தவொரு நவீனத் தொழில்நுட்பத்தையும்  கற்பிக்கும் தகுதி கொண்டது, திறன் கொண்டது. வளமான கலைச்சொற்களுக்குப் பஞ்சம் இல்லை. பொருத்தமான புதிய கலைச்சொற்களைப் படைத்துக் கொள்ளும் அளவுக்குத் தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

என்னுடைய முடிவுகளைச் சில எடுத்துக்காட்டுகளுடன் அவர்களிடம் விளக்கிப் பேசினேன். அந்தப் பேச்சினை நீங்களும் கேளுங்கள்.