பாகத்தின் வரைபடம் இருந்தால் பொருள் சேர் உற்பத்தி மூலம் நம்மால் அந்த பாகத்தைத் தயாரிக்க முடியும். ஆனால் நம்மிடம் பாகத்தின் வரைபடம் இல்லை, அதற்கு பதிலாக தேய்ந்த அல்லது உடைந்த பாகம் மட்டுமே உள்ளது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வது? இம்மாதிரி தருணங்களில் பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல் நமக்குக் கை கொடுக்கும்.
மீள்நோக்குப் பொறியியல் (Reverse engineering)
வழக்கமாக முதலில் வரைபடம் வரைந்து அதன் பின்னர் அந்தப் படத்தில் உள்ளபடி பாகம் உருவாக்குவோம். இதை முன்நோக்குப் பொறியியல் (Forward engineering) என்று சொல்கிறோம். ஆனால் சில நேரங்களில் பாகத்திலிருந்து வரைபடம் தயாரிக்க வேண்டிவருகிறது. எடுத்துக்காட்டாக நம்மிடமுள்ள ஒரு எந்திரத்தில் ஒரு பாகம் தேய்ந்து அல்லது உடைந்து வீணாகி விடுகிறதென்று வைத்துக் கொள்வோம். அதேபோல வேறொரு பாகம் செய்து போட்டு ஓட்டவேண்டும். பாகத்தின் வரைபடம் அந்த எந்திரத்தின் தயாரிப்பாளரிடம் இருக்கும். அந்த எந்திரத்தை வாங்கிப் பயன்படுத்தும் நம்மிடம் இருக்காது. இம்மாதிரி நேரங்களில் பாகத்திலிருந்து திரும்பவும் வரைபடம் தயாரிப்பதை மீள்நோக்குப் பொறியியல் என்று சொல்கிறோம்.
முப்பரிமாண வருடி (3D Scanner)
பாகத்திலிருந்து வரைபடம் தயாரிக்க நமக்கு ஒரு வருடி (scanner) தேவை. அதுவும் முப்பரிமாண வருடியாக இருக்க வேண்டும். முப்பரிமாண வருடிகள் சிக்கலான பொருட்களை மிக விரைவாக அளவிடுகின்றன. இதன் மூலம் பாகத்திலிருந்து வரைபடம் தயாரித்து தேவைக்கு ஏற்ற மாதிரி, நம்மிடமுள்ள அனைத்து வகையான தயாரிப்புகளிலும் சரியாகப் பொருந்தக்கூடிய 3D அச்சிட்ட பாகங்களை நாம் வடிவமைக்கலாம்.
வடிமைக்க வேண்டிய பொருட்களின் மீது முப்பரிமாண வருடிகள் சீரொளியை (laser) செலுத்துகின்றன. அதன் உணரி (sensor) எதிரொளித்த சீரொளிக் கதிரைப் பகுப்பாய்வு செய்கிறது. இதன் மூலம் பாகத்தின் வடிவத்தையும் அளவையும் தீர்மானிக்கிறது. முப்பரிமாண வருடிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் துல்லியம் (Accuracy), பகுதிறன் (Resolution) மற்றும் வருடும் வேகம் (Scanning Rate) போன்றவை முக்கிய காரணிகள்.
கையடக்க முப்பரிமாண வருடிகள் (Hand-held scanners)
முப்பரிமாண வருடிகளுக்கு அதிகபட்சம் பரப்பளவு வரையறை உண்டு. அதைவிடப் பெரிய அளவிலான பொருட்களை வருடவேண்டுமானால் கையடக்க முப்பரிமாண வருடிகளைப் பயன்படுத்தவேண்டும்.
3D வருடிகள் சிக்கலான பொருட்களைக்கூட மிக விரைவாக அளவிடக்கூடியவை. ஆகவே உங்கள் வடிவமைப்புப் பணிப்பாய்வுகளை பெரிதும் துரிதப்படுத்தலாம். இயற்பியல் வடிவங்களைப் படம்பிடித்து தேவைக்குத் தகுந்தாற்போல் மாற்றியமைக்கும் திறனுடன், தற்போதுள்ள அனைத்து வகையான தயாரிப்புகளிலும் சரியாகப் பொருந்தக்கூடிய 3D அச்சிட்ட பாகங்களை நாம் வடிவமைக்கலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: கல்வி மற்றும் பயிற்சியில் 3D அச்சிடல்
நடைமுறையில் உருவாக்குதல் வெறும் கணினித் திரையில் பார்ப்பதைவிடப் பலமடங்கு பயனுள்ளது. வடிவமைப்பு, பொறியியல் மற்றும் கட்டடக்கலை கோட்பாடுகளை நன்கு அறிந்துகொள்ள முடியும். 3D மாதிரிகள் பல்வேறு துறைகளுக்கு உதவுகின்றன.