எந்திரன் இடங்குறித்தல் (localization) என்பது ஒரு நகரும் எந்திரன் தன் சூழலையும் அதற்குள் தான் அமைந்துள்ள இடத்தையும் கண்டறியும் செயல்முறை ஆகும். ஒரு தன்னியக்க எந்திரனுக்குத் தேவையான மிக அடிப்படை திறன்களில் இடங்குறித்தல் ஒன்றாகும். என்ன சூழலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரிந்தால்தான் இலக்கை நோக்கி எப்படிச் செல்வது என்று திட்டமிட முடியும். இதை வைத்துத்தான் அடுத்த செயல்களைப் பற்றிய முடிவுகள் எடுக்க முடியும்.
எந்திரனியலில் வண்டியை செலுத்துவது எப்படி என்று பார்க்கும் போது, மேற்கண்டவாறு வரைபடம் தயாரித்து தன்னிடங்குறித்தல் என்பது ஒரு முன்பின் தெரியாத சூழலின் வரைபடத்தைக் கட்டமைத்தல் ஆகும். முன்னால் பார்த்த சூழலைப் புதுப்பிப்பதற்கும் இதையே பயன்படுத்தலாம். இதற்குத் தீர்வு காண பல வினைச்சரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில திறந்த மூல மென்பொருளாகவும் கிடைக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் பரவலாக விற்பனையாகும் ஐ-ரோபோ (iRobot) நிறுவனத்தின் ரூம்பா (Roomba) போன்ற துப்புரவு எந்திரன்கள் வேலை செய்யும் அறையின் வரைபடத்தைத் தயாரிக்க இம்மாதிரி வினைச்சரங்களையே பயன்படுத்துகின்றன.
நெடுஞ்சாலையில் வண்டியோட்டுதல் (Highway Driving)
எந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று. லின்கன் MKZ என்பது ஃபோர்ட் நிறுவனம் தயாரிக்கும் சீருந்து. வேறு எந்த வண்டிகள் அல்லது பொருட்களின் மீதும் மோதாமல் ஒரு நிமிடத்திற்குள் ஒரு லின்கன் MKZ சீருந்தை முடிந்தவரை அதிக தூரம் செலுத்துவதே இந்தப் பயிற்சியின் இலக்காகும்.
வண்டி கட்டுப்படுத்தியை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் திறனளவு ஒரு நிமிடம் கழித்து சாலையில் பயணம் செய்த தூரம்தான்.
மற்ற வண்டிகளை அல்லது நிலையான பொருட்களை நம் வண்டி தொட்டாலும் அல்லது நாம் அவசரகாலப் பாதையில் சென்றாலும், பாவனையாக்குதல் உடன் நிறுத்தப்படும். ஏற்கனவே பயணித்த தொலைவு பதிவு செய்யப்படும்.
பைதான் நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி செயல்திறனை மேம்படுத்துவது எப்படி? அவர்கள் கொடுத்துள்ள அடிப்படைக் கட்டுப்படுத்தி நம் வண்டியை நேராகச் செலுத்தும். மேலும் மற்றொரு வாகனம் முன்னால் வந்தால் பாதுகாப்பான தூரத்தை வைத்திருப்பதற்காக தன் வேகத்தைக் குறைக்கும்.
வேகத்தை குறைப்பதற்குப் பதிலாக, பக்கவாட்டிலுள்ள தூர உணரிகளைப் பயன்படுத்தி அடுத்த தடத்துக்கு மாற்றி முன்னாலுள்ள வண்டியைத் தாண்டிப் போக முடியுமா என்று பார்க்கலாம். ஆனால் இடது பக்கத்திலுள்ள தடத்தில்தான் முன்னாலுள்ள வண்டியைத் தாண்டிப் போக முடியும்.
தடங்காட்டும் கோடுகளை நிழற்படக் கருவியால் கண்டுபிடித்தல்
சிறிது நேரம் கழித்து சாலை வளைய ஆரம்பிக்கும். ஆகவே நீங்கள் சாலையின் வளைவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய ஒரு எளிய வழி தூர உணரிகளை வைத்து வலது மற்றும் இடது புற சாலையோரத் தடைகளின் தூரம் தெரிந்துகொள்வதுதான். தடங்காட்டும் கோடுகளை நிழற்படக் கருவியால் கண்டுபிடிப்பது இதைவிட மிகவும் சிறப்பான வழியாக இருக்கும்.
தூர உணரிகள் மட்டுமல்லாமல் பின் சக்கர அச்சுகளின் மையத்தில் ஒரு புவிநிலைகாட்டியும் (GPS), மற்றும் முன்புறம் பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய புகைப்படக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இவற்றையும் பயன்படுத்தலாம்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: எந்திரனியல் விதிகள் (Laws of Robotics)
மனித உருவ எந்திரன் (Humanoid) விரைவாக நடத்தல். எப்படி இந்த எந்திரனின் வேகத்தை அதிகரிப்பது?