முந்தைய பதிவுகளில் டெஸ்டிங் என்றால் என்ன என்பது பற்றியும் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படை நோக்கம் பற்றியும் பார்த்திருந்தோம். இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி – சாப்ட்வேர் (மென்பொருள்) என்றால் என்ன? இதெல்லாம் என்ன கேள்வி? இதோ சொல்கிறேன் – கணினிக்கு ஏதோ ஓர் உள்ளீட்டைக் கொடுத்து தேவைப்படும் பதிலை எடுத்துக்கொள்வது – சரிதானா? என்கிறீர்களா! நூற்றுக்கு நூறு சரி! மென்பொருள் என்பது அது தான்! அதைத் தான் நாம் சோதிக்கப் (டெஸ்டிங்) போகிறோம்.
மென்பொருளை, லினக்சில் இயங்கும் மென்பொருள், விண்டோஸ் மென்பொருள், மேக் மென்பொருள் என்று இயங்கு தள அடிப்படையிலோ, ஜிமெயில், பேஸ்புக், டக்டக்கோ என்று பயன்பாட்டு அடிப்படையிலோ பல வகைகளில் பிரிக்கலாம். எந்த வகைகளில் பிரித்தாலும் நம்முடைய வேலை அவற்றைச் சோதிப்பது! சோதித்து வாடிக்கையாளரைப் பாதிக்கும் தவறுகளை உருவாக்குநரிடம் (டெவலப்பரிடம்) எடுத்துச் சொல்வது! இவை தாம் சாப்ட்வேர் டெஸ்டராக நம்முடைய வேலை! எனவே நம்முடைய வேலையின் அடிப்படையில் சாப்ட்வேரை இரண்டு பெரும் பிரிவுகளில் பிரித்து விடலாம்.
1. கணினியில் நிறுவி (இன்ஸ்டால் செய்யப்பட்டு) இயங்கும் மென்பொருள்
2. இணைய வசதியுடன் இயங்கும் மென்பொருள்
அடிப்படையாக இந்த இரண்டு வகை மென்பொருள்களையும் சோதிக்கத் தெரிந்தாலே நாம் ‘டெஸ்டர்’ என்று சொல்லிக் கொள்ளலாம். இவற்றை எப்படிச் சோதிப்பது? பார்ப்போம்.
1. கணினியில் நிறுவி (இன்ஸ்டால் செய்யப்பட்டு) இயங்கும் மென்பொருள்
இந்தத் தலைப்பை வைத்தே இவ்வகை சாப்ட்வேரை எப்படிச் சோதிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். ஆமாம்! நாம் செய்ய வேண்டிய முதல் சோதனை – மென்பொருளை நம்மால் எளிதாக கணினியில் நிறுவ முடிகிறதா என்பது தான்!
இயங்குதளப் பொருத்தச் சோதனை (‘OS Compatibility Test’)
- உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் லினக்ஸ் தளத்தில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளதா, விண்டோசுக்காக உருவாக்கப்பட்டுள்ளதா, ஆண்டிராய்டுக்கா எனப் பார்த்து அந்தந்த இயங்குதளத்தில் நிறுவிச் சிக்கல் வருகிறதா எனப் பார்க்க வேண்டும்.
- சில மென்பொருள்கள், இயங்குதளத்தின் குறிப்பிட்ட பதிப்புகளுக்கு மட்டும் இயங்குமாறு உருவாக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் 7 அல்லது 8இல் மட்டும் இயங்குமாறு சில மென்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அந்நிலையில் அவற்றைப் பொருத்தமான (விண்டோஸ் 7, 8) இயங்குதளங்களில் மட்டும் நிறுவி, நிறுவலில் ஏதாவது சிக்கல் வருகிறதா எனச் சோதிக்க வேண்டும்.
இச்சோதனைக்கு இயங்குதளப் பொருத்தச் சோதனை (‘OS Compatibility Test’) என்று பெயர்.
நிறுவல் – உயர்த்தல் சோதனைகள்:
பொதுவாக லிபர் ஆபிஸ் போல ஒரு மென்பொருளை விண்டோசில் நிறுவுகிறீர்கள் என்றால், இயல்பாகவே அது c:\Program Files\ என்பது போல ஓர் இயல்பு நிலை அமைவிடத்தில் நிறுவப்பட்டு விடும். இல்லை எனக்கு c:\Program Files\ வேண்டாம்; நான் வேறு இடத்தில் நிறுவுகிறேன் என்றால் நீங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த இருவகை நிறுவலையும் நாம் சோதிக்க வேண்டும்.
- இயல்பு நிலை இடத்தில் (டீஃபால்ட் லொகேசன்) மென்பொருளை நிறுவ முடிகிறதா?
- வேறு இடத்தில் மென்பொருளை நிறுவ முடிகிறதா?
- இப்படி இரு நிலைகளும் முடிகிறது என்றால் நிறுவிய பின்னர், வேறு பதிப்புகளுக்குத் தரம் உயர்த்த முடிகிறதா எனச் சோதிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, லிபர் ஆபிஸ் 4.4.2 ஐ நிறுவியிருக்கிறீர்கள் என்றால், நிறுவிய பின்னர் அதை 4.4.3.2 க்கு உயர்த்த முடிகிறதா எனச் சோதிக்க வேண்டும். இச்சோதனைக்குத் ‘தரம் உயர்த்து சோதனை’ (‘Upgrade Testing’) என்று பெயர்.
இச்சோதனையைச் செய்த பின்னர், நாம் நிறுவியிருக்கும் மென்பொருளின் பதிப்பு சரியானதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீக்கல் சோதனை:
நிறுவல் சோதனை போல, நீக்கல் சோதனையும் முக்கியமானது தான்! அதென்ன நீக்கல் சோதனை என்கிறீர்களா? உங்கள் ஊகம் சரிதான்! நிறுவப்பட்ட மென்பொருளைக் கணினியில் இருந்து நீக்க (அல்லது தூக்க) முடிகிறதா, என்று பார்ப்பது தான்! பயனாளர் ‘இந்த மென்பொருள் தனக்குத் தேவையில்லை’ என்று நினைத்தால் சிக்கல் ஏதும் இல்லாமல் நீக்க ஏதுவாக மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நீக்கிச் சோதிப்பது நீக்கல் சோதனை (‘Uninstallation Testing’) ஆகும்.
என்ன நீங்கள் – நிறுவப்பட்ட மென்பொருளை எப்படிச் சோதிப்பது என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் – நிறுவல், உயர்த்தல், நீக்கல் என்று ஆக்கல், ஒடுக்கல், அழித்தல் என்று கடவுளுக்கு மூன்று தொழில் சொல்வது போலச் சொல்கிறீர்களே! என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரி தான்! சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதில் நிறுவப்பட்டு இயக்கப்படும் மென்பொருள்களைச் சோதிக்கும் உத்திகளைப் பிறகு பார்ப்போம். இப்போதைக்கு, எந்த மென்பொருளாக இருந்தாலும் எப்படி அடிப்படையாகச் சோதிக்க வேண்டும் என்னும் பொதுநிலையைத் தெரிந்து கொண்டோம். அவ்வளவு தான்!
சோதனை ஓட்டத்தை(‘Trial Version’)ச் சோதிப்பது:
சில மென்பொருட்களைச் சோதனைக் காலமாக 30 நாட்கள் மட்டுமோ இலவசமாகப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு நிறுவனங்கள் வழங்கும். (சில நிறுவனங்கள் 15 நாட்கள் கொடுக்கின்றன.) அப்படிப்பட்ட மென்பொருட்களை
- முப்பது நாட்கள் இயங்குகின்றனவா?
முப்பது நாட்கள் சோதனையைக், கணினியின் தேதியை முப்பது நாட்கள் மாற்றிச் செய்ய முடியும். - முப்பத்தோராவது நாளில் இருந்து ‘மென்பொருள் இயங்காது’ என்னும் செய்தி காட்டப்பட்டுகிறதா?
- கணினியின் தேதியை முன் தேதியிட்டு அமைப்பதன் மூலம் சோதனை ஓட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நாட்களில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா?
என்பனவற்றைப் பார்க்க வேண்டும்.
இந்த அடிப்படையுடன், நிறுவப்பட்ட மென்பொருளின் இயக்கத்தையும் முழுமையாகச் சோதிக்க வேண்டும். இந்த இயக்கச் சோதனை மிகவும் முக்கியமானது!
இதெல்லாம் சரி! இணைய வசதியுடன் இயங்கும் மென்பொருட்களை எப்படிச் சோதிப்பதன் அடிப்படைகள் என்னென்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டுமே! என்று நினைக்கிறீர்களா! அடுத்த பதிவு அதைப் பற்றித் தான்!
– முத்து (muthu@payilagam.com)