சாப்ட்வேர் டெஸ்டிங் – 5 – எங்கு தொடங்குவது?

சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படைகளைப் பார்த்து விட்டோம்.  இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி – சாப்ட்வேர் டெஸ்டிங்கை எங்கு, எப்படித்  தொடங்குவது? என்பது தான்!
ஒரு மென்பொருளைச் சோதிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், முதலில் அந்த மென்பொருள் தயாராக இருக்க வேண்டும் அப்படித் தானே! எனவே,

  • எப்படி ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது?
  • வாடிக்கையாளரிடம் இருந்து மென்பொருளுக்கான தகவல்களை எப்படிப் பெறுவது?  யார் அந்தத் தகவல்களை வாங்கித் தருவார்கள்?
  • வாங்கிய தகவல்களை வைத்துக் கொண்டு நம்முடைய நிறுவனம் (அதாவது மென்பொருளை உருவாக்கும் நிறுவனம்) என்ன செய்யும்?
  • எப்போது நமக்கு டெஸ்டிங்கிற்குத் தருவார்கள்?

இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றன.  சரி தானே!
இவற்றையெல்லாம் பற்றிப் பேசுவதற்கு முன்னர், ஒரு சிறிய கதையைப் பார்ப்போம்.

தமிழினிக்குத் திருமணம்:  

நல்லூர் என்பது ஓர் அழகிய சிற்றூர்.  அந்தக் கிராமத்தில் அறிவொளி என்பவர் வாழ்ந்து வந்தார்.  அவருடைய ஒரே மகள் தமிழினி.  தமிழினி சிறு வயதில் இருந்தே பேச்சிலும் எழுத்திலும் படு சுட்டி!  அவளும் வளர்ந்து படித்து, திருமண வயதை எட்டினாள்.

 
அவளுக்குத் தகுந்த மணமகன் தேடும் வேலையைத் தொடங்கினார் அறிவொளி.  கதிரவன் என்பவர் தகுந்த மணமகனாகப் படவே மகளிடமும் பேசி ஒப்புதல் வாங்கித் திருமண வேலைகளைத் தொடங்கினார்.  ஒரே மகளின் திருமணம் என்பதால் தடபுடலாக நடத்த விரும்பிய அறிவொளி, பெரிய திருமண மண்டபம் ஒன்றை வாடகைக்குப் பிடித்தார்.

 
‘கல்யாண வீடு என்றாலே சாப்பாடு ரொம்ப முக்கியம், வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்’ என்று நினைத்த அறிவொளி, பல பேரிடம் போய் “நல்ல சமையல்காரர்கள் இருந்தால் சொல்லுங்கள், என் மகள் திருமணத்திற்குச் சமையலுக்குத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி வைத்தார்; பலரும் பல சமையல்காரர்கள் முகவரிகளைக் கொடுத்தார்கள்.

 
அவர்கள் ஒவ்வொருவரையும் அலைபேசியில் கூப்பிட்டு ‘நீங்கள் நேரில் என்னுடைய வீட்டுக்கு வர முடியுமா?  அடுத்த மாதம் என்னுடைய மகள் திருமணத்திற்குச் சமையலுக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார்.  அவர் கூப்பிட்ட படி, ஒவ்வொரு சமையல்காரரும் வந்து,

 

1. எந்தத் தேதியில் சமைக்க வேண்டும்?
2. எத்தனை பேருக்குச் சமைக்க வேண்டும்?
3. என்னென்ன சமைக்க வேண்டும்?  சைவமா? அசைவமா?
4. எத்தனை வேளைகள் சமைக்க வேண்டும்?
5. இதற்கெல்லாம் அறிவொளி எவ்வளவு செலவு பண்ணலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்?
6. அவர் கேட்கும் உணவு வகைகளுக்கு எவ்வளவு ஆகும்?  தங்களால் அவற்றைச் செய்ய முடியுமா?

என்பன போன்ற விவரங்களைப் பேசுவார்கள் அல்லவா?  பேசிய விசயங்களை எல்லாம் எழுதி ஆவணப்படுத்தித் திட்டமிட்டு வேலை செய்யத் தொடங்குவார்கள் அல்லவா?  எனவே இதை ஒரு திட்டமிட்ட பணி (வேலை) என்று சொல்லலாம்.  இதைத் தான் – திட்டப்பணி (புராஜெக்ட்)   என்று சொல்கிறார்கள்.

வாடிக்கையாளர் தேவை ஆவணம் – Business Requirement Specification (BRS)
அறிவொளியின் மகள் திருமணத்திற்குச் சமையல் வேலை என்பதற்குப் பதிலாக,  பிரபல நகைக்கடை ஒன்றிற்கு இணையத்தளம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த இணையத்தளத்தை வடிவமைக்கும் வேலை எப்படித் தொடங்கும்?
1. எந்தத் தேதியில் இணையத்தளம் வேண்டும்?
2. ஒரு நேரத்தில் அதிக பட்சம் எத்தனை பேர் பார்க்குமாறு தளம் அமைய வேண்டும்?
3. என்னென்ன உருப்படிகளை(வீடியோ, புகைப்படங்கள், கட்டுரை, செய்தி)த் தளத்தில் காட்ட வேண்டும்?
4. எத்தனை ஆண்டுகளுக்கு நிர்வகிக்க வேண்டும்?
5. இதற்கெல்லாம் அந்த நகைக்கடைக்காரர்கள் எவ்வளவு செலவு பண்ணலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்?
6. என்ன தொழில்நுட்பம் பயன்படுத்த விரும்புகிறார்கள்?
என்பன போன்ற விவரங்களை எல்லாம் மென்பொருள் நிறுவனம் –  நகைக்காரரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்; தெரிந்து அவற்றையெல்லாம் ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் ஆவணப்படுத்த வேண்டும்?  
ஏன் ஆவணப்படுத்துகிறோம் என்பதை எளிதாகச் சொல்லி விடலாம் – ஆவணப்படுத்தாமல் விட்டு விட்டால், பிறகு நகைக்கடைக்காரர் இப்படிக் கேட்டாரா, அப்படிக் கேட்டாரா, இதைச் செய்யச் சொன்னாரா?  சொல்லவில்லையா? எனப் பல குழப்பங்கள் வரும். அவற்றையெல்லாம் தவிர்க்கவே ஆவணப்படுத்துகிறோம்.  இந்த ஆவணத்தில் வாடிக்கையாளரின் தேவைகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கும்.  எனவே இதை, வாடிக்கையாளர் தேவை ஆவணம் (“பிசினஸ் ரெக்கைர்மென்ட் ஸ்பெசிபிகேசன் – Business Requirement Specification (BRS)”)  என்று சொல்வார்கள்.  இந்த ஆவணத்தின் அடிப்படையில் தான் மென்பொருளை உருவாக்கத் தொடங்குவார்கள்.
இது வரை நாம் பார்த்ததில் இருந்து பல சந்தேகங்களும் கேள்விகளும் வந்திருக்கும்.

  • நகைக்கடைக்காரரைப் போய் நம்முடைய மென்பொருள் நிறுவனத்தில் இருந்து யார் பார்ப்பார்கள்?
  • இந்த ஆவணப்படுத்தும் வேலையை வாடிக்கையாளர் செய்வாரா, வாடிக்கையாளரைப் போய்ப் பார்க்கும் நம்முடைய ஆள் செய்வாரா?
  • அந்த ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும்?
  • உருவாக்கப்படும் ஆவணம் – சரியாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான உறுதி என்ன?என்பன போன்ற பல கேள்விகள்!  தொடர்ந்து பார்ப்போம்!

– முத்து (muthu@payilagam.com )

%d bloggers like this: